எகிறிப் பாயும் பேரினவாதிகளும் பதுங்கும் தமிழ் தேசியவாதிகளும்

Aasiriyar paarvai 8
Aasiriyar paarvai 8

அண்மைய நாட்களில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தென்னிலங்கைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தினார் என்றால் அது வடக்கின் முன்னாள் முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரனே. தன் முதல் உரையிலேயே தென்னிலங்கை தலைவர்களை ஆட்டம் காண வைத்த விக்னேஸ்வரனின் உரை, வரலாற்று பூர்வமானது – ஆதாரபூர்வமானது என்பதே இதற்கு காரணம் ஆகும். விக்னேஸ்வரனின் அத்தகைய உரைக்கு, சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்திய மௌனம் எதற்கானது என்பதையும் இத் தலையங்கம் வலியுறுத்த முனைகின்றது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெற்ற வேளையில் வடக்கின் முன்னாள் முதல்வர் ஆற்றிய உரை உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்து பேசுபொருள் ஆகியிருக்கின்றது என்றால், சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் – குறிப்பாக விடுதலைப் புலிகள் மௌனித்துப்போன கடந்த பத்தாண்டுகளில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தை நிரப்பிய காலத்தில் இத்தகையதோர் உரை நிகழ்த்தப்படவில்லை என்பதே அர்த்த பூர்வமான நிரூபணம்.

தமிழர்கள் இத்தீவில் வந்தேறு குடிகள் என்றும், தமிழ் இரண்டாம் மொழி எனவும் தென்னிலங்கையால் சொல்லப்பட்டு வருகின்றது. இதைவிடவும் நடைமுறையில் தமிழ் இனமும் தமிழ் மொழியும் சந்திக்கும் இனத்துவ நெருக்கடி மிகவும் பயங்கரமானது. ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இல்லாமல், எந்தவொரு பதவியையும் வகிக்காத காலத்தில் நீதியரசர் விக்னேஸ்வரன் ஈழத்தின் பூர்வீக குடிகள் தமிழர்கள்தான் என்று பேசி பேரினவாத தலைவர்களுக்குக் கிலியை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில்தான் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பேசிய விக்னேஸ்வரன், தமிழே உலகின் பழமையான மொழி என்றும் அது இலங்கையின் முதல் பழங்குடிகளின் மொழி எனவும் பேசியமை மட்டுமின்றி, வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் அவர்களின் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அழுத்தமாக எடுத்துரைத்தார். அத்துடன் ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பதை விக்னேஸ்வரன் எம்.பி. சிங்களத்தில் எடுத்துரைத்த விடயம் சிங்கள தலைவர்களின் மனசாட்சியை உலுப்புவதற்கு பதிலாக அவர்களின் மனங்களில் பயத்தை உருவாக்கியிருக்கிறது என்பதே உண்மை.

விக்னேஸ்வரனின் உரை கேட்டு கொதித்தெழுந்த மகிந்த ராஜபக்ச தம்மை போர்க்குற்ற விசாரணையில் சிக்க வைப்பதற்காகவே விக்னேஸ்வரன் இவ்வாறு பேசியிருக்கிறார் என்றும் இது இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது எனவும் அர்த்தம் காண்பித்துள்ளார்.

இதுதவிர, இதுநாள் வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில் ஆட்சியமைத்து தமிழர்களுக்கு அதைக் கொடுக்கிறோம் இதைக் கொடுக்கிறோம் என்று சொல்லி இனவாதத்தை பாதுகாத்த சஜித் அணியினர் இப்போது விக்கினேஸ்வரனின் உரை கண்டு பொங்கி எழுந்துள்ளனர். அவரை வெளியேற்றுங்கள், அவரின் உரையை நீக்குங்கள் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே, இந்த விடயம், ஜனநாயகத்தையும் கருத்து சுதந்திரத்தையும் கேள்விக்கு உள்ளாக்கின்றது.

விக்னேஸ்வரன் எம்.பியின் உரையை வரலாற்று பூர்வமான கருத்தாக அணுகாமல், அதனை நீக்க வேண்டும் என முதலில் வாதத்தை தொடக்கியவர் சஜித் அணியின் மனுஷ நாணயக்கார. பாராளுமன்ற அவைக்குறிப்பு என்பது வரலாறாகிவிடும் என்று அஞ்சி அதனை நீக்க வேண்டும் என்று அடம்பிடித்தார் அவர். விக்கியின் கருத்து நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் என்று விசித்திர காரணங்களையும் அவர் கற்பித்தார். அத்துடன், ஆளும்கட்சி கூட விக்னேஸ்வரனின் கருத்துக்கள் மீது போர் தொடுத்தது. “விக்னேஸ்வரன், பிரபாகரனின் பெரியப்பா ஆக முயல்கிறார்”, என்று ஆளும் கட்சியின் உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க விமர்சித்தார். எப்படி இருந்தபோதும், விக்னேஸ்வரனின் கருத்தை ஆராய்வதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன கூறியிருந்தார். பின்நாளில் விக்கியின் கருத்தை பாராளுமன்ற அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய தேவையில்லை என்றும் உறுப்பினர்கள் தத்தமது கருத்தை வெளிப்படுத்த அனுமதி உண்டு என்றும் கூறினார்.

உண்மையில் இலங்கைப் பாராளுமன்றத்தின் அவைக் குறிப்புக்களை எடுத்துப் பார்த்தால், தமிழ் மக்களுக்கு எதிரான மிக மோசமான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவைக் குறிப்புக்களின் வழியாகவும் தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்டே வந்துள்ளனர். ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பற்றிப் பேசுதல் என்பது தென்னிலங்கையைப் பொறுத்த வரையில், தங்கள் இறைமைக்கு குந்தகமாக நினைப்பது நிச்சயமாக ஒரு நோயாகவும் உண்மை மறைப்பாகவுமே இருக்கின்றது.

“குழப்பம் அடைந்து என்னைத் தூற்றி பொது விவாதத்துக்கு என்னை அழைப்பதன் மூலம் ஓர் உண்மை பொய்யாகவோ அல்லது ஒரு பொய் உண்மையாகவோ ஆகிவிடாது. தேவை ஏற்பட்டால், எமது வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவை தொடர்பில் அறிவுகொண்ட சிறந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் சர்வதேச ரீதியான வரலாற்று ஆய்வாளர்களை உள்ளடக்கிய ஆணைக்குழு ஒன்றை  நாம் அமைக்கலாம்.  இதுவரை காலமும் எமது சிங்கள சகோதரர்களுக்கு பிழையான தகவல்களை வழங்கிவந்த போலி வரலாற்று ஆய்வாளர்களை விடுத்து சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டவர்களாக இந்த வரலாற்று ஆய்வாளர்கள் இருக்க வேண்டும்.”, என்று விக்னேஸ்வரன் கூறியிருப்பது கவனிக்க வேண்டிய விடயமாகும். ஆனால், இதனை செய்ய தென்னிலங்கை தேசம் முன்வராது. ஏனெனில் அவர்கள் உண்மையை நிரூபிக்க முன்வரப் போவதில்லை.

எனினும் விக்னேஸ்வரனின் இந்த சவாலை இலங்கை அரசும் தென்னிலங்கையும் ஏற்க வேண்டும். “நான் எவரையும் வெறுப்பதில்லை. ஆனால், நான் உண்மையை விரும்புகின்றேன். சில வரலாற்று உண்மைகளை படித்த பின்னர் எமது கடந்தகாலம் குறித்து சில முடிவுகளுக்கு நான் வந்துள்ளேன்…”, என்ற விக்கியின் அனுபவத்தை ஏற்றுக்கொள்வதே தென்னிலங்கையின் முன்னுள்ள பக்குவம் ஆகும். இந்த விடயத்தில் விக்னேஸ்வரன் தனியொருவராக நின்று தனது உரையை ஆற்றி வரலாற்றை மீட்கும் தன் வகிபாகத்தை மேற்கொண்டுள்ளார். அவரின் உரை கேட்டு தென்னிலங்கை அரசியல்வாதிகள் கொந்தளித்தார்கள் என்றால், இந்த விடயத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதி காத்ததமை மூலம், அதை அவர்கள் வழிமொழிந்திருக்கிறார்கள் என்றே அர்த்தம்.

அவர்களின் சுயநலனிற்காகவும் தனிப்பட்ட கட்சி நலன்களுக்காகவும் இனத்தின் பொது விடயத்திற்காக குரல் எழுப்ப தவறியது மாபெரும் குற்றமல்லவா?

விக்னேஸ்வரன் எம்.பி. உரையாற்றிய பின்னர் பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர். விக்கி மீது தென்னிலங்கை பேரினவாதிகள் கட்சி பேதமின்றி போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அதற்கு எதிராக ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கூட பேசவில்லையே? விக்கியின் உரைக்கு எதிரான போர்க்கொடி என்பது அவருக்கு மட்டும் எதிரானதா? உண்மையில் ஈழத்தின் பூர்வீக குடிகள் தமிழர்கள், அவர்களின் தாய்மொழி உலகின் மூத்தமொழி, தமிழருக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பது என்ற கருத்துக்களுக்கு எதிரானதல்லவா?

நீங்கள் மௌனமாயிருப்பதன் மூலம், மனுஷ நாயக்கார, எஸ்.பி. திஸயாநயாக்கா போன்ற தென்னிலங்கை பேரினவாதிகளுக்கு ஆதரவு அளிக்கிறீர்களா?

கஜேந்திரகுமார், கஜேந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன் போன்றவர்கள் விக்கிக்கு ஆதரவாக இல்லாமல், அவர் முன்வைத்த கருத்துக்களுக்கு ஆதரவு வழங்கியிருக்கலாம் அல்லவா? விக்னேஸ்வரனின் பெயரை உச்சரிக்க வன்மமும் வெறுப்பும் என்றால் அவரின் கருத்துக்களை மாத்திரமாவது உங்கள் கருத்தாகவேனும் பாராளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்.

சிங்களவர்களை குறைவாக விக்னேஸ்வரன் சொல்லவில்லை. தமிழர்களின் பூர்வீகத்தையே இலங்கையின் உண்மை வரலாற்றையே பேசினார். ஆனால், சிங்களவர்களை குறைவாகப் பேசியவர்களை கடந்த காலத்தில் சுட்டுக்கொன்றோம் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறி நீதியரசர் விக்னேஸ்வரனை எச்சரித்த பின்னர்கூட ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கூட பொன்சேகாவை கண்டிக்கவும் இல்லை – விக்னேஸ்வரனின் கருத்தை ஆதரிக்கவும் இல்லை என்பது மிக கொடூரமான விடயம். இன்னும் மௌனிகளாக இருப்போர் சுயநலத்திற்காக எதையும் செய்பவர்களே.

உண்மையில் எமது இனம் சார்ந்த இந்த விடயத்தை தனி நபருக்கு ஆதரவாகவும் புகழ் சேர்க்கும் விடயமாகவும் கருதாமல், ஒரு போராட்டமாக – போர்க்களமாக மாற்றயிருக்க வேண்டும். அந்த அளப்பரிய சந்தர்ப்பத்தை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறவிட்டுள்ளனர். விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளும், எதிர் கட்சிகள் என்ற வேறுபாடின்றி சிங்கள இனமாக ஒன்று திரண்ட வேளையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிதறுண்டு சுயநலன்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மக்களின் விடிவுக்கும் விடுதலைக்கும் ஒற்றுமையின்மைதான் என்றைக்குமான தடை. இன்னும் அதை உடைத்து நீங்கள் வெளியில் வரவில்லை என்பதே இங்கும் வெளிப்படுகின்றது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற சான்றோர் வாக்கு பலித்து வருகின்ற இந்தக் காலத்தில் ஒன்றை நினைவுபடுத்த வேண்டும்.  தனி நபர்களான உங்களுக்காக இல்லாமல், இனத்தின் நலனிற்காக அரசியல் செய்யுங்கள். இல்லையேல் இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவர்கள் போல அடுத்த தேர்தலில் உங்கள் பெயரே முன்னிலை வகிக்கும்.

ஆசிரியர் பீடம் – தமிழ்க்குரல்
29.08.2020