நசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமை தயாரா?

aa
aa

ஒரு இனத்தின் மீது இன்னொரு ஆதிக்க இனம் ஒடுக்கு முறையை மேற்கொள்ளுகின்ற போது சட்டங்கள் மேலாதிக்கம் கொண்டவர்களின் அதிகாரமாகவே துலங்குகிறது. இது இலங்கையில் மாத்திரமல்ல, இலங்கை போன்ற இன மேலாதிக்க நாடுகள் பலவற்றிலும் இருக்கின்ற நடைமுறை. ஆனாலும் தேச விடுதலை, சமூக விடுதலை என சிந்திக்கும் மக்கள் தரப்பினரும் அவர்களின் ஆளுமை மிக்க தலைவர்களும் அதனைக் கடந்து ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

உண்மையிலே சட்டங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகவே சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த எண்ணப்பாங்கில்தான் நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்கள் கூட உருவாக்கப்பட்டன. மக்களிடம் அதிகாரம் இருக்கவும் அவர்கள் அதனை பாதுகாக்கும் விதமாகவே அரசியல் சட்டங்களும் பிற சட்டங்களும் உருவாக்கப்பட்டன. சட்டம் என்ற பெயரைப் பயன்படுத்தி, மக்களின் மரபுக்கும் உணர்வுகளுக்கும் அபிலாசைகளுக்கும் எதிராக செயற்படுகின்ற அதிகாரம் அரசும் அரச சட்டங்களுக்கும் இல்லை. அப்படி செய்தால் அதுவே சட்டமீறல்.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஆளும் அரச தரப்பினரும் இந்த விடயத்தில் தெளிவு இல்லாத நிலையில்தான் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளுக்கும் மன உணர்வுகளுக்கும் எதிராக பேசுகின்றனர். அவர்கள்தான் அப்படி பேசுகிறார்கள் என்றால்  எமது தமிழ் தலைவர்களும் சட்டத்தை அறியாத நிலையில், மண்டியிட்டு பேசுகின்றனரே தவிர, சட்டம் கடந்து ஒரு போராட்டத்தை முன்னெடுக்கவும் அதன் நியாயத்தைப் பேசவும் தெரியாத நிலையில் உள்ளனர்.

அண்மையில் ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியும் கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு தலைவருமான சவேந்திர சில்வா, மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார். கொரோனா தடுப்புச் சட்டம் உள்ள நிலையில், பொது வெளியில் மாவீரர்களை நினைவு கூர்ந்தால் கொரோனா தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி கைது செய்வோம் என்று எச்சரித்தார். ஒரு இராணுவத் தளபதியாக இவ்வாறு கூறுகிறாரா? இல்லை கொரோனா தடுப்பு செயற்பாட்டின் பிரதிநிதியாக இவ்வாறு கூறுகிறாரா?

இங்கே தமிழர்களின் நினைவேந்தலை தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கம் ஒன்றே வெளிப்பட்டு நிற்கின்றது. அப்படியென்றால் அது இன மேலாதிக்க தவிர, சட்ட ரீதியான அணுகுமுறையல்ல. கொரோனாவுடன் வாழ வேண்டும் என அரசு சொல்லி வருகின்றது. அத்துடன் வருகின்ற 23ஆம் திகதி முதல் பாடசாலைகள் இயங்கத் தொடங்க உள்ளன. மேலும் அரச தரப்பினர் பல நூற்றுக் கணக்கானவர்களை ஒன்றுகூட்டி பல்வேறு விதமான நிகழ்வுகளையும் நடாத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாவீரர் நினைவேந்தலில் மாத்திரம் இந்த சட்டம் பாயும் என்றால், கொரோனா தடுப்பு சட்டமும் இனவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறததே. 

கொரோனாவுக்கு எதிராக பிரயோகிக்க வேண்டிய சட்டத்தை அரசின் முக்கிய பதவியில் உள்ள ஒருவர் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இன மக்களின் நினைவு கூறுகின்ற உரிமையில் பிரயோகிப்பது எவ்வளவு சட்ட விரோதமானது? இதனை எமது தலைவர்கள் ஏன் எடுத்துரைக்கவில்லை? எமது தலைவர்களும் இதனை ஆமோதித்துக் கொண்டு, கெஞ்சுவதும் மண்டாடுவதும் சட்டவிரோதமானதே. சட்ட அறிவு அற்றவர்களின் ஆட்சியும் சட்ட அறிவு அற்ற தலைவர்களின் நிலையினாலுமா நாம் இதுபோன்ற விசயங்களை அனுபவிக்க நேரிடுகின்றது?

அதுபோன்று, நினைவேந்தல் உரிமையை தடுக்கும் வித்தில் பயங்கரவாத தடைச் சட்டமும் பயன்படுத்தப்படுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் கொடிய சட்டம் என கடந்த கால ஆட்சியாளர்கள் சர்வதேச அரங்கில் வைத்து கூறினார்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும்போது இந்த சட்டம் தடுக்கவில்லை. நாட்டின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச கடந்த ஆண்டு பதவியேற்ற போதும்கூட மாவீரர் நாள் நினைவுகூர தடுக்கப்படவில்லை. ஆனால் இம்முறை இச் சட்டம் தூசு தட்டி எடுக்கப்படுகின்றது. அப்படி என்றால் சட்டங்கள் ஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்ப வளைக்கப்படுகின்றதா?

இலங்கையில் பெரும்பான்மையினர் உருவாக்குகின்ற சட்டங்களே நடைமுறையில் உள்ளன. சிறுபான்மையினரின் குரல் மதிக்கப்படுவதில்லை. அவர்களின் அபிலாசைகள் புறந்தள்ளப்படுகின்றன. இச் சட்டங்களை ஏற்கும் நிலையில்தான் அரசின் அனைத்து எந்திரங்களும் உள்ளன. அப்படிப்பட்ட பெரும்பான்மையினர் தமது கால்களை சிறுபான்மையினர் கழுவ வேண்டும் என ஒரு சட்டத்தை உருவாக்கினாலும் அதுவும் சட்ட மீறலாக இலங்கையில் தீரப்பிடப்படுமா?

அண்மையில், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு பாராட்டுக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். அவரை கடுமையாக பாராட்டி, மாவீரர் நினைவேந்தலை நடாத்த அனுமதி கோரியிருக்கும் இக் கோரிக்கைகள் மிகவும் சிறுபிள்ளைதனமான அணுகுமுறையாகவே விமர்சிக்கப்படுகின்றன. எமது உணர்ச்சிகரமான வீரத் தலைவர்களின் குறைந்தபட்சமான அணுகுமுறை இப்படித்தான் இருக்கின்றதா? ஒரு இனத்தின் அடிப்படை உரிமைகளை ஒருபோதும் மண்டியிட்டுக் கோரத் தேவையில்லை. நம் கைகளை தட்டுவதற்கு அடுத்தவரிடம் அனுமதி கோருவதற்கு ஒப்பானது இது.

உலகின் மகத்துவமான போராட்டங்கள் பலவும் அந்நாட்டு அரச சட்டங்களை தாண்டியே நிகழ்ந்தது. மிக நீண்ட போராட்டத்தின் பிறகு, பெரும் அர்ப்பணிப்புக்களின் பின்னரே அவர்களை நீதிமன்றங்களும் அங்கீகரித்தன. வரலாறு மகத்துவமான மாண்புக்களையும் மனிதர்களையும் ஒரு காலத்தில் விடுவித்தே தீரும். அதற்கு நாம் அர்ப்பணிப்புக்களுடன் போராட வேண்டும். அந்தப் பயணம் நெடியது. அது ஒரே ஒரு முறை நீதிமன்றில் முன்னிலையாவதால் கிடைப்பதில்லை.

அது அரச தலைவரை குசிப்படுத்தி ஒரு கடிதம் எழுதுவதால் நடப்பதில்லை. அது அரசின் முன் மண்டியிட்டு கேட்பதால் நடப்பதில்லை. அது மக்களின் பங்களிப்புடன் உண்மையான அர்ப்பணிப்புடன் இடம்பெற  வேண்டும். இம்முறை அரசு மாவீரர் தின நிகழ்வுகளை தடுத்தால் அது சர்வதேச மட்டத்தில் பெரும் பின்னடைவை தரும். அதற்கான முனைப்புக்களில் தமிழ் தலைவர்கள் ஈடுபடலாம்.

நவீன துட்டகைமுனு என்று தம்மை பிம்பப்படுத்துவதில் பெருமைகொள்ளும் தரப்பினர்  போரில் இறந்தவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற மாண்பை துட்டகைமுனுவின் வரலாற்றிலிருந்து கற்றிருக்க வேண்டும் அல்லவா? எதிரியாக இருந்தாலும் இறந்தவர்களை நினைவுகொள்ளுகின்ற அவர் தம் சடங்குகளை நிறைவேற்றுகின்ற உரிமையை மறுப்பது வரலாற்றில் இதுவரையில்லாத கொடிய உணர்வு. அது சிங்கள மக்களின் வரலாற்றில்கூட இருந்ததில்லை.

நிலைமாறு நீதிக்கான காலத்தில் போரில் இறந்த எவரையும் நினைவுகூறுகின்ற உரிமை எல்லோருக்கும் உண்டு. அதனை தடுப்பது சர்வதேச சட்டங்களுக்கு மாறானது. போரில் இறந்த ஜே.வி.பி வீரர்களை நினைவு கூறலாம் என்றால், இலங்கை இராணுவத்தினரை நினைவு கூரலாம் என்றால், போரில் இறந்த தமிழ் வீரர்களையும் நினைவு கூருவதை தடுக்க முடியாது. தடுக்கக்கூடாது. ஏனெில் இது தமிழர் பண்பாட்டு உரிமை. அது அடிப்படை மனித உரிமை. அது அடிப்படை மனித மாண்பு. அதை அரசு மீறினால் சர்வதேச சட்டத்தை மீறுவது ஆகும்.

தமிழ்க்குரல் ஆசிரியர் பீடம்

20.11.2020