தமிழ் மாகாணங்கள் ஏன் தொடர்ந்து கல்வியில் பின்னடைவை சந்திக்கின்றன?

Aasiriyar paarvai tamil maganangal copy scaled
Aasiriyar paarvai tamil maganangal copy scaled

ஒரு காலத்தில் ஈழத் தமிழ் மக்களின் பெரும் அடையாளமாக கல்வியே விளங்கியது. ஈழத் தமிழ் அறிஞர்களுக்கு சர்வதேச ரீதியாக ஒரு மதிப்பும் காணப்பட்டது. தமிழ், மொழியியல் உள்ளிட்ட துறைகளில் ஈழத் தமிழ் அறிஞர்கள் உலகப் புகழ் பெற்றிருந்தனர். இதன் காரணமாகவே அன்றைய காலத்தில் இலங்கைக்கு தலைமை தாங்கும் வாய்ப்பைகூட ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலிருந்த படித்த தலைவர்கள் தமதாக்கினர்.

இதன் காரணமாகவே இலங்கையில் இன ரீதியான உரிமைகள் மறுக்கப்பட்ட சமயத்தில் முக்கியமாக கல்வி உரிமைகளும் மறுக்கப்பட்டன. தரப்படுத்தல் போன்ற கல்வி ஒடுக்குமுறை சட்டங்களும் இலங்கை அரசால் திணிக்கப்பட்டன. ஆனாலும்கூட அவைகளை முறியடித்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் கல்வியில் பாரிய சாதனைகளை ஏற்படுத்தியிருந்ததும் இங்கே கவனிக்க வேண்டியது.

அது மாத்திரமின்றி 2009இற்கு முன்னரான காலத்தில், கடுமையன போர் நடந்த காலத்தில்கூட வடக்கு கிழக்கு மாகாண மாணவர்கள் பெரும் சாதனைகளை நிகழ்த்தினர். கடுமையான பொருளாதார தடையும் கல்வி கற்க முடியாத கொடும் போரும் நடந்த சமயத்தில் கிளிநொச்சியில் இருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்தும் திருகோணமலையில் இருந்தும் கொழும்புக்கு சவால்விடும் பெறுபேறுகளை மாணவர்கள் பெற்றனர்.

இந்த நிலையில், 2009இற்குப் பின்னரான காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது. தொடர்ந்து வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்பதாவது இடத்தையும் எட்டாவது இடத்தையும் மாறிமாறி வகித்தன. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்ட பின்னர், பாடசாலைக் கல்வியில் பௌதீக ரீதியான பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்கள், ஆய்வுகூட வசதிகள், போதிய ஆசிரிய ஆளனியினர் என்று வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. வடக்கு கிழக்கு மாகாணத்தில்கூட போர் இடம்பெற்ற காலத்தில் இல்லாத வசதி வாய்ப்புக்கள், போக்குவரத்துக்கள் என்பன ஏற்படுத்தப்பட்டன. எனினும் கல்வி வளர்ச்சி வீதத்தில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தற்போது வெளியாகியுள்ள சாதாரண தர பெறுபேறுகளின் படி, வடக்கு மாகாணம் இம்முறை ஒன்பதாவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் எட்டாவது இடத்தை பிடித்திருந்தது. கடந்த ஆண்டு ஒன்பதாவது இடத்தை பெற்ற கிழக்கு மாகாணம் இம்முறை ஏழாவது இடத்திற்கு முன்னோக்கி நகர்ந்திருப்பது குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

அத்துடன் கடந்த ஆண்டு வெளியான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் நான்காவது இடத்திற்கு முன்னோக்கி நகர்ந்திருப்பதும் நம்பிக்கை அளிக்கின்ற விடயமாகும். மிகவும் பின்தங்கிய சூழலிலுள்ள கிழக்கு மாகாணம் கல்வியில் முன்னோக்கி நகர்வது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும்.

வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில், க.பொ. த உயர்தரம் கற்க தகைமை பெற்றோர் அடிப்படையில், வடமாகாணம் ஒன்பதாவது (67.74%) நிலையில் உள்ளதுடன் கணிதம் மற்றும் தாய்மொழி உட்பட ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் (3C) அடிப்படையிலும் ஒன்பதாவது (60.80%) நிலையில் உள்ளது. அத்துடன் சகல பாடங்களிலும் சித்தியடைய தவறியவர்கள் (all F) அடிப்படையில் 3 ஆவது நிலையில் (2.63%) உள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களான மன்னார் 74.67%யும், யாழ்ப்பாணம் 74.16%யும், வவுனியா 67.70%யும், முல்லைத்தீவு 63.07%யும், கிளிநொச்சி 60.51%யும் சித்தி விகிதங்களாக எட்டியுள்ளன. அத்துடன் அகில இலங்கை ரீதியாக முல்லைத்தீவு 24ஆவது மாவட்டமாகவும் கிளிநொச்சி 25ஆவது மாவட்டமாகவும் நிலையை பெற்றுள்ளன. கிளிநொச்சி மாவட்டம் தொடர்ந்து கல்வியில் பின்நிலையில் நிற்பதையும் அவதானிக்கலாம்.

இந்த விடயம் வடக்கு கிழக்கு கல்வி நிலமை தொடர்பில் பல்வேறு செய்திகளை சொல்லுகின்றன. வடக்கு கிழக்கு மாணவர்களின் மனநிலை, போரின் தாக்கம், கல்வியில் கவனத்தை குலைக்கும் திட்டமிட்ட செயற்பாடுகள், உலகமயமாதல் சூழல் என பல விடயங்கள் தாக்கம் செலுத்துவதை அவதானிக்க முடிகின்றது.

எவ்வாறெனினும் பெரும் இழப்புக்களை சந்தித்துள்ள ஈழத் தமிழ் மக்கள் கல்வியில் மீள் எழுச்சியை உருவாக்க வேண்டும். கல்வியை ஆயுதமாக கொள்ள வேண்டும் என்பது போராட்ட காலத்தில் மிக அவசியமாக நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கையாகும். கல்வியில் சிறந்த இடத்தை பெறுவதற்கு மிக கடுமையாக இயங்க வேண்டியது கல்விச் சமூகத்தின் தலையாய கடமை என்பதை தமிழ் சமூகம் சார்பில் வலியுறுத்துகிறோம்.

தமிழ்க்குரல் ஆசிரியர் பீடம்.

01.05.2020