கோடாலிக்காம்பாக மாறிவிட்டீர்களா? – சிறீதரனிடம் சில கேள்விகள்!

Sri
Sri

அன்புக்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு!

ஒருமுறை (2013) கிளிநொச்சியில் வட மாகாண சபையின் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. இதில் உரையாற்றிய தாங்கள், கோடாலிக்காம்பு பற்றிய கதை ஒன்றை கூறியிருந்ததை மறந்திருக்கமாட்டீர்கள். ஒரு காட்டில் உள்ள மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டதாகவும் அதற்கு கோடாலிக் காம்பாக மாறிய அந்தக் காட்டிலுள்ள மரம் ஒன்றே காரணம் என்றும் அந்தக் கதையை சொல்லி முடித்தீர்கள். அன்றைய முதல்வர் விக்னேஸ்வரனைக் குத்துவதற்கே அந்தக் கதையை சொன்னீர்கள். இப்போது கனகச்சிதமாக அந்தக் கதை உங்களுக்குத்தான் பொருந்துகின்றது.

சில வருடங்கள் ஓடி மறைந்திருக்கின்ற இன்றைய நிலையில், இப்போது யார் கோடாலிக்காம்பு என்பதற்கான விடையும் கிடைத்திருக்கிறது. திரு. விக்னேஸ்வரன் அந்த காட்டின் மரங்களை காக்கும் ஒருவராக நிற்க, நீங்கள் கோடாலிக் காம்பாக மாறிவிட்டீர்களா? தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தலைவர் பிரபாகரனையும் புகழ்பாடி வாக்குகளை அள்ளிய நீங்கள் இன்று உங்கள் அரசியல் இருப்புக்காக, அதே விடுதலைப் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் மோசமாக பேசும் சுமந்திரனை ஆதரித்து, கோடாலிக் காம்பென ஆகிவிட்டீர்கள்.

இதனை நிரூபிக்கும் விதமாகவே அண்மையில், சுமந்திரனை ஆதரித்துப் பேசிய உங்கள் காணொலி வெளியாகியுள்ளது. உங்கள் அரசியல் பொய்யின்மீதும் சுயநலத்தின்மீதும் கட்டியெழுப்பட்டது என்பதை நிரூபிக்க இதனைவிட வேறு ஆதாரம் தேவையில்லை. எந்த அரசியலுக்காக புலிகளையும் தலைவரையும் புகழ்ந்தீர்களோ, அந்த அரசியலுக்காகவே இன்று சுமந்திரனை புகழ்ந்து நியாயம் செய்து, அதற்காக விடுதலைப் புலிகளையும் அதன் தலைமையையும் பலியிடத் தொடங்கியுள்ளீர்கள்.

உங்களிடம் நாம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம்!

  1. நீலன் திருச்செல்வத்தை யார்? எதற்காக கொன்றார்கள்?. நீலனின் கொலையை ஏற்பவர்களும் எதிர்ப்பவர்களும் இருவேறுபட்டவர்கள். அது தொடர்பில் விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் நீலன் திருச்செல்வம் இருந்திருந்தால் இடைக்கால அதிகார சபைக்கான யோசனையை தயாரித்திருப்பார் என தலைவர் பிரபாகரன் தளபதிகள் மத்தியில் கூறியதாக நீங்கள் அவிழ்த்துவிட்டிருக்கும் கதை பொய்யல்லவா? புலிகளற்ற இன்றைய நிலையில் இதனை சொல்ல உங்களுக்கு யார் அதிகாரமளித்தது? இப்படி பேசி நீங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் ஆகப் பார்க்கிறீர்களா? தலைவர் தவறு இழைத்துவிட்டார் என காட்டவா இப்படி கதைகளை அவிழ்த்து விடுகிறீர்கள்?
  2. இலங்கை அரசு உலக கிண்ணத்தை பெற்ற போது அதை தலைவர் பிரபாகரன் கொண்டாடினார் என்றொரு கதையை அவிழ்த்து விட்டுள்ளீர்கள். கடுமையாக போர் நடந்த 1996 இல் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்பட்ட சமயத்தில் இலங்கை கிண்ணத்தை வென்றது. அதனையும் இன அழிப்புக்கும் போருக்குமான பிரசாரமாக அன்றைய அரசு பயன்படுத்தியது. இந்தக் காலத்தில் தலைவர் அந்த வெற்றியை கொண்டாடினார் என்பது எப்படியான பொய்யாக இருக்கும்? அப்படியொரு சமயத்தில் தலைவர் வெற்றியை கொண்டாடினார் எனப் பொய்யுரைத்து தலைவரை மோசமாக சித்திரிக்க பார்க்கிறீர்களா?
  3. தலைவர் பிரபாகரனை கெட்டவர் என்று நீங்கள் கூற வருகிறீர்களா? இலங்கை அரசு கிண்ணம் வென்றதை தலைவர் கொண்டாடியவர் என்றும் ‘அவர் அவ்வளவு தூரம் பிழையானவர் இல்லை’ என்றால், அவர் ஓரளவுக்கு பிழையானவர் என்பதல்லவா அர்த்தம். ஆக பிரபாகரன் பிழையானவர் என்பதால், பிரபாகரனையும் போராட்டத்தையும் ஏற்காத, சரியான சுமந்திரனை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? மூச்சுக்கு முந்நூறு தரம் உங்கள் அரசியலுக்காக உச்சரித்த பிரபாகரன் பெயரை இன்றைக்கு உங்கள் அரசியலுக்காக ‘பிழையானவர்’ எனக் கொச்சைப் படுத்தி சுமந்திரனை விஞ்சுகிறீர்களா?
  4. தலைவரை பிழையானவர் என்றும் போர் நடந்த காலத்தில் இலங்கை அரசு கிண்ணம் வென்றதை கொண்டாடியவர் என்றும் இழிவுபடுத்திய நீங்கள், கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தையும் விடவில்லை. சுமந்திரன் பாலா அண்ணாவைப் போன்றவர் என்று நீங்கள் சொல்லியிருப்பது எவ்வளவு அதிர்ச்சியானது. எங்கள் போராட்டத்தின் பிதாமகனை, அரசியல் ஆலோசகரை, தத்துவஞானியை எதிரிகூட இவ்வாறு அசிங்கப் படுத்தவில்லை. மிக மோசமாக போராட்டத்தை இழிவுபடுத்தும் சுமந்திரனை தேசத்தின் குரலுடன் ஒப்பிட்டதை மானமும் புத்தியும் அறிவும் உள்ள எந்த தமிழனும் – மனிதனும் ஏற்றுக்கொள்ளமாட்டார்.

மேற்குறித்த விடயங்கள் பொய்யாக மாத்திரமின்றி ஒரு விடுதலைப் போராட்டத்தை பாரதூரமான அளவுக்கு இழிவுபடுத்தும் இழி செயல்களாகவும் அமைந்துள்ளன. இதனை நீங்கள் நன்கு திட்டமிட்டு செய்வதாகவே தெரிகின்றது. எதிரிகளும் கற்பனை செய்யாத விடயங்களை கூறுகிறீர்கள். புத்திசாலித்தனம் என்றும் அறிவாளித்தனம் என்றும் காட்டி, எதிரிகளும் சிதைக்க முடியாத புலிகளின் வரலாற்றை நீங்கள் சிதைக்கிறீர்க்ள. அழிக்கிறீர்கள். இதுவா உங்களின் நிகழ்ச்சி நிரல்? சுமந்திரன் தெற்கில் சிங்கள ஊடகங்களில் பேசி போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் தலைவரையும் கொச்சைப்படுத்த நீங்களோ, பொய்களைகூறி, வரலாற்றை திரிவுபடுத்தி ஆதாரமற்ற அரசியலை செய்து சுமந்திரனின் வேலையை செய்கிறீர்கள்!

முள்ளிவாய்க்காலை விட்டோடிய நீங்கள், முள்ளிவாய்க்கால் என்றும் பிணங்கள் என்றும் மாவீரர்கள் என்றும் தலைவர் என்றும் போராளிகள் என்றும் பேசிப் பேசியே தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்துவிட்டு, இன்றைக்கு சுமந்திரனின் அரசியல் கால்களைக் கழுவ அதே போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை தயவு செய்து நிறுத்துங்கள்.

எதையும் செய்துவிட்டு பிரபாகரன் பெயர் சொல்லி தப்பி, வாக்குகளை அள்ளலாம் என் உங்கள் கனவு பொய்க்கத் தொடங்கிவிட்டது. இதுவரை உங்களை ஆதரித்த ஊடகங்களும் ஆதரித்த உங்கள் கட்சி ஆதரவாளர்கள் உங்கள் உண்மை முகம் கண்டு கொந்தளிக்கத் தொடங்கிவிட்டார்கள். உங்கள் அயோக்கியத்தனமான அரசியலுக்கு இந்த முறை தேர்தலில் எம் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்று நம்புகிறோம்.

தமிழ்க்குரல் – ஆசிரியர்பீடம்