குட்டிமணிக்கு மறுக்கப்பட்டதும் பிரேமலாலுக்கு வழங்கப்பட்டதும்

samakaalam 3
samakaalam 3

“நான் கொலைகாரன் கிடையாது”, நீதிமன்றம் கொலைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்த ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சாதாரண ஒருவர் இவ்வாறு கூறியிருந்தால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பாய்ந்திருக்கும். ஆனால், நாட்டின் உயரிய சபையில் – அங்கு பேசிய விடயங்களை வழக்குக்கு உட்படுத்த முடியாத நிலையில் தன்னை நாட்டு மக்களுக்கு நிரபராதியாகக் காட்ட முனைகிறார். அவர் வேறு யாருமல்லர், இரத்தினபுரி மாவட்டத்தின் பிரேமலால் ஜயசேகர.

2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவரை சுட்டுக் கொன்றார் என்ற குற்றத்திற்காக இவர் உட்பட மூவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. வழக்கில் சந்தேகத்துக்கு இடமின்றி சாட்சியங்கள் நிரூபிக்கப்பட்டமையால் இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. வேட்பு மனுத் தாக்கலுக்குப் பின்னரே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டமையால் அவரால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிந்தது. ஆனால், பிரேமலாலின் வெற்றி அறிவிக்கப்பட்டபோது, அவர் சிறையில் இருந்தார். அவரின் வெற்றி அறிவிக்கப்பட்டபோது அவர் ஒரு கொலையாளி – நீதிமன்றம் தீர்ப்பளித்த கொலைக்குற்றவாளி.

அரசமைப்பு விதிகளின்படி அவரால் பதவியேற்க முடியாது என்று சட்டமா அதிபர் கூறிய நிலையில், பிரேமலால் நீதிமன்றை நாடி தனக்கான நாடாளுமன்ற உரிமையை தக்கவைத்துக் கொண்டார். இப்போது நாட்டின் உயரிய சபையின் கௌரவத்துக்குரிய உறுப்பினர் அவர்.

***

1982 பங்குனி 01 ஆம் நாள்.

தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆயுத வழியில் துளிர் விட்டுக் கொண்டிருந்த காலம் அது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக்கள் மீதான வழக்கு  நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த நாட்டினது கவனமும் குட்டிமணிக்கு என்ன தீர்ப்பு வழங்கப்படப்போகிறது என்பதிலேயே கவனம் செலுத்துகின்றன. அவருக்காகப் பிரார்த்திக்காத தமிழர்களே இல்லை எனலாம்.

நீதிபதி சேனநாயக்க தனது இருப்பிடத்தில் வந்தமர்கிறார். இனத்தால் சிங்கள பெரும்பான்மையினர். உலகெங்கும் விடுதலைப் போராளிகளின் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் எதிர்கொண்ட மனப் போராட்டத்தை அவரும் எதிர்கொள்கிறார். ஆனால், தீர்ப்பு வழங்க வேண்டிய கடமை. அவர் தனது தீர்ப்பை வழங்கும் முன்னர், “குட்டிமணியை நான் ஒரு குற்றவாளியாகப் பார்க்கவில்லை. சட்டத்தின் தேவை கருதி தீர்ப்பை வழங்க வேண்டியது எனது கடமை. என்றோ ஒருநாள் ஜனாதிபதிக்கு மன்னிப்பு வழங்குவாராயின் அதைக் கேட்டு மகிழ்ச்சியடையும் முதல் நபர் நானாக இருப்பேன்”, என்று குறிப்பிடுகிறார். இறுதியில் சட்டத்துக்கு தேவையான ஆதாரங்கள் – சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு மரண தண்டனை வழங்குகிறார்.

இந்த வழக்கு நீதிமன்றில் நடந்து கொண்டிருந்தபோது யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு இயற்கை எய்தினார். அவரின் இடத்துக்கு குட்டிமணி என்றறியப்பட்ட செல்வராசா யோகச்சந்திரனான குட்டிமணியை நியமிக்கும்படி கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

1982 ஒக்ரோபர் 15 அமரர் திருநாவுக்கரசுவின் இடத்திற்கு செல்வராசா யோகச்சந்திரன் நியமிக்கப்படுகிறார் என்று அரச வர்த்தமானியில் அறிவிக்கப்படுகின்றது. ஆனால், தமிழரின் துரதிர்ஷ்டம் தொடர்கிறது. சிறையில் இருக்கும் ‘குற்றவாளி’யான குட்டிமணியின் பெயர் நியமனம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

***

இலங்கைப் பிரச்சினையின் அடிப்படையே பெரும்பான்மையினரான சிங்களவர்கள் ஒரு நியாயமும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கு இன்னொரு நியாயத்தையும் இலங்கை அரசு வழங்குவதுதான். சிறுபான்மையினரை மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நடத்துவதுதான்.

போர் காலம் ; 2000 டிசம்பர் 20

மிருசுவிலில் காணி பார்க்கச் சென்ற 7 பேர் கோடரியால் தாக்கப்பட்டும் கழுத்து அறுக்கப்பட்டும் இராணுவத்தினரால் கொல்லப்படுகின்றனர். இந்தக் கொடூர கொலைக்குள் அகப்பட்டவர்களில் 8 வயதே ஆன சிறுவனும் அடங்குவான்.

14 இராணுவத்தினருக்கு குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால்,  அவர்களில் ஒருவரான சுனில் ரத்நாயக்கவுக்கு எதிராகவே குற்றம் நிரூபணமாகிறது.  அவருக்கு 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை வழங்குகிறது நீதிமன்றம். ஆனால், அவர் அதிக காலம் தண்டனையை அனுபவிக்கவில்லை. 2019 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதுமே சுனில் ரத்நாயக்கவை விடுவிக்க நடவடிக்கை எடுத்தார் கோட்டாபய ராஜபக்ஷ. 2020 மார்ச் மாதம் சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பால் சுதந்திர பறவையானார்.

***

2009 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானார் ஆனந்த சுதாகரன். அரசியல் கைதியாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

அவரின் விடுதலைக்காக உழைத்த மனைவி 2018 மார்ச் மாதம் மரணமானார். அவரின் இரு பிள்ளைகளும் அநாதைகளாகினர். மனைவியின் மரணச் சடங்கில் பங்கேற்க ஆனந்த சுதாகரனுக்கு வெறும் 2 மணி நேரமே வழங்கப்பட்டது.

மனைவிக்கு இறுதி விடை கொடுக்க வந்த சுதாகரன் அந்த வேளையில்தான் தனது மகளை மடியில் வைத்திருக்கும் வரம் கிடைத்தது. சுதாகரனின் மகள் சங்கீதா தந்தையுடன் செல்ல சிறை வாகனத்தில் ஏறிய காட்சி, கணடோரை கண் கலங்க வைத்தது.

தங்கள் தந்தையை பொது மன்னிப்பு அளித்து விடுவிக்க அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரினர் 10, 12 வயதே நிரம்பிய சிறுவர்கள். ஆனால், பலனேதும் இல்லை. ஏனெனில் அவர்கள் இந்த நாட்டில் சிறுபான்மையினராக பிறந்துவிட்டனர்.

-கரிகால் வளவன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)