தமிழரசு, முன்னணி, கொள்கை(?)யளவில் இணக்கம் ?

முன்னாள் போராளிகள் ஏணி - செருப்பு போன்றவர்களே !

samakaalam 5
samakaalam 5

தமிழ்த் தேசியம் குறித்தும்,புலிகளின் தியாகங்களைப் பற்றியும் வாய்  ஓயாமல் பேசிவரும் தமிழரசுக்கட்சியும், தமிழ்த் தேசிய முன்னணியும் முன்னாள் போராளிகளின் அரசியல் அந்தஸ்து பற்றியவிடயத்தில் மட்டும் ஒத்த கருத்துடன் உள்ளன.தங்களது நிலையை மேம்படுத்த முன்னாள் போராளிகள் ஏணியாக இருக்கவேண்டும் என்பது இரு கட்சியினரதும் முதலாவது நிலைப்பாடு.இரண்டாவது தங்கள் தேவைக்கு முன்னாள் போராளிகள் பயன்படவேண்டும்; உழைக்க வேண்டும்;  அதுவும் செருப்புப்போலத் தேயத் தயாராக இருக்கவேண்டும். அவ்வளவுதான். அதாவது காலைப்பாதுகாப்பது மட்டுமே செருப்பின் வேலை. அந்த வேலை முடிந்ததும் வாயிலிலேயே நிற்கவேண்டும். கால் பூசை அறைக்குள் போகும். ஆனால் செருப்பு போகமுடியாது. அதைப்போலவே முன்னாள் போராளிகள் தமது தகுதியை உணர்ந்து வெளியிலேயே நிற்கவேண்டும். குறிப்பாக `வீட்டுக்குள் `  போகமுடியாது. ஒருநாடு இருதேசம் என முழக்கமிடுகிறது தமிழ்த் தேசிய முன்னணி. இதில் எந்தச்  தேசத்தில் முன்னணியின் தலைவருக்கு சொத்து அதிகம் உள்ளது எனக் கேட்டால் பதில் சொல்லமாட்டார்கள்.

வடகிழக்கு தமிழரின் தாயகம் என்பார்கள். ஆனால் தேசியப்பட்டியல் உறுப்பினர் என்ற விடயம் வரும்போது கிழக்கைக் கணக்கில் எடுக்கமாட்டார்கள். அவர்களது கட்சியிலேயே சில முன்னாள்  போராளிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பளிக்கமாட்டார்கள். இவர்களுக்கு நிதி மூலமான புலம்பெயர் தமிழர்களும் இதனை வலியுறுத்த மாட்டார்கள். பட்டை  நாமம் மட்டுமே முன்னாள் போராளிகளுக்கு. இந்த லட்சணத்தில் திலீபன் தங்களுக்கு மட்டுமே சொந்தமானவன் எனப் படம் காட்ட முயற்சிப்பார்கள். தேசியத் தலைவர் கஜேந்திரகுமார்; இப்போதைய திலீபன் எனப்படுபவர் கஜேந்திரன்;  தற்போதைய மில்லர் எனப்படுபவர் சட்டத்தரணி சுகாஷ் என நிறுவ தலைகீழாக நிற்கும் இவர்களிடம் தேசியப்பட்டியல் என்று வரும்போது மட்டும் கட்சியில் முன்னாள் போராளிகள் இருப்பது ஞாபகம் வரவில்லையா? என யாரும் கேள்வி எழுப்பினால் பதில் கிடைக்காது. இது போல தேசியப்பட்டியல் உறுப்பினராவதற்கு தகுதியுள்ள எவராவது கிழக்கு மாகாணத்தில் இல்லையா எனக் கேட்டால் மௌனமே பதிலாகக் கிடைக்கும்.

இப்போது கஜேந்திரன் அம்பாறைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டாராம். எந்தப் பாதுகாப்பும் இன்றி அங்கு சென்று வந்தார் என்று புகழாரம் சூட்டி மகிழ்கின்றனர் அவரது முகநூல் ரசிகர்கள். நாற்பது ஆயிரம் படையினரும் சவப்பெட்டியில்தான் வருவார்கள் என்று வீறாப்புப்  பேசிவிட்டு இறுதி யுத்த காலத்தில் ஐரோப்பாவுக்குச் சென்ற இவர் எந்த முகத்தோடு அரச படையினரின் பாதுகாப்போடு திரிய முடியும். கேட்டால் தேசியத் தலைவரால் தனக்கு மட்டும் காதோடு காதாக இரகசியமாகச் சொன்ன விடயங்களை செயற்படுத்தத்தான் வெளிநாடு சென்றேன் என்று சொல்லத் தயங்கமாட்டார். அந்த இரகசியத்தினுள் எந்தக்காலத்திலும் புலிகள் எவரையும் பாராளுமன்றத்தினுள் அனுமதித்து விடாதீர்கள்  என்றும் சொன்னதும் அடங்குமென சொல்லவும் கூச்சப்படமாட்டார். இவரது தலைவர் கஜேந்திரகுமாரோ இளைஞர்கள் ஆயுதமேந்தக் காரணமாக இருந்தது வறுமையே எனக் குறிப்பிட்டவர். வறுமை காரணமாக போராடியவர்களுக்கு தேசியப் பட்டியல் எம்பி பதவி ஏன் என நினைக்கலாம்.

தமிழரசுக்கட்சியின் நிலை இன்னும் மோசம். தற்போது  செயலர் பதவிக்கு புதியவரை நியமிக்கவேண்டியுள்ளது. கனடா வரவு குகதாசனை நியமித்தால் தொடர்ச்சியாக நிதி கனடாவிலிருந்து கிடைக்கலாம்  என நினைப்பார்கள். தேசியப்பட்டியல் நியமன விவகாரத்தில் இவரது பெயரை சுமந்திரனும் சிறீதரனும் கட்சித் தலைமையிடம் குறிப்பிட்டனர். தலைமை வடக்கிலிருப்பதால் செயலர் பதவி கிழக்குக்கே வழங்கப்படவேண்டும் என்றவகையில் குகதாசனை நியமிக்க வேண்டுமென்ற  கோரிக்கையையும் முன்வைக்கப்பட்டிருப்பதாக சில தகவல்கள் உண்டு. தனக்கே செயலர் பதவி வழங்க வேண்டும் என்பது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனின் நிலைப்பாடு. தனக்கான  கூடுதல் தகமையாக தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் எனப் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டமையைக் கருதுகிறார் போல் உள்ளது. மேலும் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் போது ஜனாவை எந்தக்காலத்திலும் கட்சியினுள் உள்வாங்கக்கூடாது என்று கரிகாலன் வலியுறுத்தியமை அரியநேந்திரனுக்கு சந்தேகமறத்தெரியும். அந்தச் சந்திப்பு தொடர்பான விடயங்களில் இவர் செய்தியாளராகக்  கலந்துகொண்டிருந்தார். அவ்வாறிருந்தும் சாணக்கியனை வீழ்த்த வேண்டுமென்று கிழக்கின் சுவிஸ் குமார் போன்று செயற்பட்ட ஜனாவை ஆதரித்தார். வித்தியாவின் சம்பவத்தில் நேரடியாக சுவிஸ் குமார் கலந்து கொள்ளவில்லைத்தான் ஆனால்; அந்த விடயத்தில் அவருக்கு உள்ள பங்கை கருத்திற்கொண்டே நீதிமன்றம் தண்டனை விதித்தது. 

ஆரையம்பதியில் விஜி என்ற உயர்தர வகுப்பு மாணவியை (அனுஷ்சியா நல்லதம்பி வின்சென்ட் மகளிர்  கல்லூரி) கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குப்படுத்தியபின் நிர்வாணமாக நடத்திச்சென்று கொலைசெய்து ஆற்றில் வீசிய குழுவை வழி நடத்தியவர் ஜனா. நேரடியாகப் பங்குபற்றவில்லையென்றாலும் அச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தண்டித்தாரா? அதுவும் இல்லையே. இதே ஊரில் மலர் என்ற கர்ப்பிணிப் பெண்ணை “வயித்துக்குள்ள புலிக்குட்டியா இருக்குது ?” எனக்கேட்டு சுட்டுக்கொன்றவர் ஜனாவின் தம்பி டெலோ மாமா.  இவர்கள் ஏற்கெனவே மலரின் தந்தை தம்பிராஜா, வங்கி ஊழியரான குருகுலசிங்கம் என்ற அண்ணன் அகியோரைக் கொன்றவர்கள். இந்தப்பட்டியல் மிக நீண்டது. தான் செய்வது தப்பு என்பதை தெரிந்துகொண்டே ஜனாவை ஆதரித்தவருக்கு செயலர் பதவியை  வழங்கப்போகிறதா  தமிழரசுக்கட்சி.

முன்னாள் எம்பியான சிறிநேசனை செயலர் ஆக்கவேண்டுமெனவும் ஒரு அணி செயல்படுவதுபோல் உள்ளது. யார் செயலராக வந்தாலும் பிள்ளையான், கருணா, வியாழேந்திரனை  எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் உள்ளது. மேலும் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஸ்ராலின் ஞானம், தம்பியப்பா கோபாலகிருஷ்ணன், பூபாலரெத்தினம் சீவகன், போன்றோர் தமிழரசுக்கட்சிக்கு எதிராக கிழக்கின் தேசியம் என்று கூறிக்கொண்டு செயற்படுவர். இவர்களை ஒருங்கிணைக்க பசில் முயற்சிக்கலாம். கிழக்குக்குத் தமிழ் முதலமைச்சர் என்ற கோசம் இவர்களை ஒருங்கிணைக்கும் எனத் தெரிகிறது. ஆனால் தமிழரசுக்கட்சி இப்போதும் தீண்டத்தகாதவர்களாக புலிகளை நோக்குகிறது. (இதில் கட் சியின் துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் போன்ற ஒரு சிலர் விதி விலக்கு) தந்தை செல்வா முதற்கொண்டு முள்ளிவாய்க்கால் வரை பயணித்த வரலாறு பாசி என்று தமிழ் இளைஞர் பேரவை காலத்திலும் பின்னர் யோகன் பாதர் என ஆயுதப்போராட்டத்திலும் அழைக்கப்பட்ட பாலிப்போடி சின்னத்துரைக்கு உண்டு. தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த காலத்தில் காசி ஆனந்தன் அண்ணாவின் சகோதரன் சிவஜெயம் (பின்னாளில் மேஜர் சந்திரன்) கிராமம் கிராமமாக துவிச்சக்கர வண்டிகளில் சென்று தமிழ்த் தேசியத்துக்காக கடுமையாக உழைத்தவர். இவர் வடக்கிலும் சகல மாவட்டங்களுக்கும் காசி ஆனந்தன் அண்ணாவுடன் சேர்ந்து விடுதலைப் பணியாற்றியவர். தந்தை செல்வா மட்டுமல்லாது அவருக்கும் அடுத்த நிலையிலிருந்த அமிர்தலிங்கம் போன்றோருடனும் பழகியவர். மாவையும் இவருடைய பங்கை நிராகரிக்க மாட்டார் .மட்டக்களப்பிலிருந்து (ஏன் கிழக்கு மாகாணத்தில் என்று கூடச் சொல்லலாம்) புலிகளில் இணைந்து கொண்ட முதற் போராளி இவர்தான். கருணா உட்பட அன்றைய போராளிகளை இயக்கத்துக்குள் உள்வாங்கியவர். இவர் போட்ட அடித்தளத்திலேயே வடக்கிலிருந்து சென்ற போராளிகளும் இணைந்து போராட்டத்தை வளர்க்க முடிந்தது. இவர் கட்சிச்  செயலாளரானால் கிழக்கின் தேசியம் என்ற கருத்து அடிபட்டு தமிழ்த் தேசியம் வலுப்பெறும். நீண்ட கால அனுபவம் அடிமட்ட தொண்டர்களை எப்படியும் உற்சாகத்துடன் பயணிக்க வைக்கும்.

முன்னாள் போராளிகள் அவர்களது குடும்பத்தினர் போன்றோர் இடைக்காலத்தில் எந்தப் பாதையில் பயணித்திருந்தாலும் இனி தமிழ்த் தேசியத்தை பலப்படுத்த முன்வருவர். இவருக்கு எதிராக கருணாவோ ,பிள்ளையனோ எந்தக் குற்றமும் சாட்டமுடியாது. கிழக்குத்  தேசியம் பேசுவோரின் நிலையும் அவ்வாறுதான் அமையும்.இந்த யதார்த்தத்தை தமிழரசுக் கட் சி உணருமா? கடந்த ஆண்டு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவரை அழைத்துக் கலந்துரையாடியதாகத் தெரிகிறது. இதனை அறிந்ததும் சில முக்கிய பிரமுகர்கள் என்ன இருந்தாலும் இவரை அரசியலுக்குள் வரவிடக்கூடாது என தங்களுக்குள் உடன்பாடு செய்துகொண்டதாகத் தெரிகிறது. தந்தை செல்வாவுடன் பழகியவரையே தனது இளமைக்காலம் முழுவதையும் தமிழ்த் தேசியத்துக்காக அர்ப்பணித்தவரையே, புறந்தள்ளிவிட்டு ஓய்வூதியம்   பெற்ற பின் அரசியலுக்குள் வந்தவர்களைக்கொண்டு எந்த  ஆணியை புடுங்கப்போகிறது தமிழரசுக்கட்சி? உண்மையாகத் தமிழ்த் தேசியத்தை நேசிப்போர் கவனிக்கவேண்டிய விடயம் இது.

தயாளன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)