தமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் ? (பகுதி – 2)

samakaalam 7
samakaalam 7

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பலவாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பெரும்பாலான விமர்சனங்கள் கூட்டமைப்பின் பின்னடைவு தொடர்பிலும், அந்த பின்னடைவிற்கான காரணங்களை பற்றியுமே ஆராய்ந்தன. ஆனால் ஒரு முக்கியமான விடயத்தை பலரும் கவனிக்கத் தவறிவிட்டனர்.

அதாவது, அரசியலில் சுமார் 40 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவங்களை கொண்டவர்களாக வர்ணிக்கப்படும், பல மூத்த தலைவர்கள் படு மோசமான தோல்வியை சந்தித்திருந்தனர். இப்படி கூறுகின்றபோது அனைவரது பார்வையும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மீதே திரும்பலாம். ஆனால் மாவை சேனாதிராசா மட்டுமா தோல்வியடைந்தவர்? 

நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியானது, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது) தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து (டெலோ) பிரிந்து சென்ற சிறிகாந்தா – சிவாஜிலிங்கம் அணி அத்துடன் அனந்தி சசிதரன் குழுவினர். இவர்கள் அனைவரும் இணைந்ததே தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி. இத்தனை மூத்த தலைவர்களும் ஒன்றிணைந்து, யாழ் தேர்தல் மாவட்டத்தில் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 35000 மட்டுமே! இது எதனைக் காட்டுகின்றது? விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய அரசியலுக்கு வந்து, வெறும் ஜந்து வருடங்கள் மட்டுமே செல்கின்றது. ஒரு கட்சியை கட்டியெழுப்புவதற்கான போதிய கால அவகாசம் அவருக்கு இருக்கவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஏனையவர்கள் அப்படியல்ல. சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் பல தசாப்தங்களாக அரசியலில் இருப்பவர். 1989ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்கு சென்றவர். அந்த வகையில் பார்த்தால் மாவை சேனாதிராஜாவிற்கு முன்னரே நாடாளுமன்றம் சென்றவர். அமிர்தலிங்கத்தின் மறைவின் பின்னர்தான் மாவை சேனாதிராசா, அமீருக்கு பதிலாக நாடாளுமன்றம் சென்றார்.  

25 வருடத்திற்கு மேற்பட்ட ஆயுதப் போராட்ட அரசியல். இந்திய அமைதிப்படைக் காலத்தில், மாகாண சபை உறுப்பினர், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்.  2001இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்.  2015வரையில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் அதாவது, 15 வருடங்களாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தொடச்சியாக நாடாளுமன்றத்தில் இருந்திருக்கின்றார். இவ்வாறான ஒருவரால் ஆகக் குறைந்தது 10000 வாக்குகளை கூட பெற முடியவில்லை. அவ்வாறாயின் இதன் அர்த்தம் என்ன? இவ்வாறான ஒருவரால் இனியும் தமிழ்த் தேசிய அரசியலை பாதுகாக்க முடியுமா? 

இதே போன்றுதான் சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோரின் நிலைமை. சிறிகாந்தாவை எடுத்து நோக்கினால் இவரது அரசியல் வாழ்வு 1967இல் நவரெட்ணத்தால் உருவாக்கப்பட்ட சுயாட்சிக் கழகத்துடன்  ஆரம்பிக்கின்றது. பின்னர் டெலோவுடன் இணைந்தார். இத்தனை வருடகால அனுபவமுள்ள ஒருவரால் 4000 வாக்குகளுக்கு மேல் பெறமுடியவில்லை. சிவாஜிலிங்கம் டெலோவின் ஆதரவாளராக இருந்து பின்னர் அதில் இணைந்து கொண்டவர். 40 வருடங்களுக்கு மேற்பட்ட அரசியல் அனுபவம். 2001இல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக நாடாளுமன்றம் சென்றவர். பின்னர் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வடக்கு மகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு, ஒரு உறுப்பினராகவும் இருந்தார். ஆனாலும் யாழ் தேர்தல் மாவட்டத்தில் இம்முறை தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் படுதோல்வியடைந்தார். இவர் ஐனாதிபதித் தேர்தலை கூட விட்டுவைப்பதில்லை. 2010இல் தனது சொந்தக் கட்சிக்கு கூட தெரியாமல் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். அதே போன்று 2019லும் தனது சொந்தக் கட்சிக்கு தெரியாமல் ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். 

கேள்வி – இவ்வாறானவர்கள் இனியும் தேர்தல் அரசியலில் இருக்க வேண்டுமா? இவர்கள் தொடர்ந்தும் தேர்தல் அரசியலில் இருப்பதால் தமிழ் சமூகத்தில் எவ்வாறான பாதகமான விளைவுகள் ஏற்படும்? இவ்வாறானவர்கள் நீண்டகால நோக்கில் தமிழ்த் தேசிய அரசியலை எவ்வாறு பாதிக்கின்றனர்? 


இன்று தமிழ்த் தேசியம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான நெருக்கடி – நமது இளம் தலைமுறையினர் தேசியவாத நோக்கிலிருந்து விலகிச் செல்கின்றனர். ஏன் அவர்கள் அவ்வாறு விலகிச் செல்கின்றனர்? ஏனென்றால், அவர்களுக்கான இடம் தமிழ்த் தேசிய அரசியலில் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் என்றால் உடனே சில பழைய முகங்களே எட்டிப் பார்க்கின்றன. மாகாண சபைத் தேர்தல் என்றாலும் அதே பழைய முகங்களே தெரிகின்றன. புதிய ஆற்றலுள்ள முகங்களை காண முடியவில்லை? அரசியலை தீர்மானிக்கும் எந்தவொரு இடத்திலும் இளம் தலைமுறையினருக்கு இடமில்லை. இன்று பெரும் கட்சிகள் என தங்களை காண்பித்துக் கொள்ளும் கட்சிகளிடம் எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றனர்? இவர்களிடம் கட்சிக்கென ஒரு கட்டமைப்பு இருக்கின்றதா? உண்மையில் சிலர் கூட்டுக்குள் வருவதற்காகவே தங்களிடம் கட்சி இருப்பதாக பாவனை செய்கின்றனர். அதிலும் இவர்கள் அனைவருமே யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் மட்டுமே அரசியல் செய்பவர்கள். அதற்கு வெளியில் இவர்களிடம் எந்தவொரு கட்சிக் கட்டமைப்பும் இல்லை. இதன் காரணமாகவே இவர்களால் கிழக்கு மாகாணத்தில் வேட்பாளர்களை கூட சரியாக தெரிவு செய்யமுடியவில்லை. இவ்வாறானவர்கள் தொடர்ந்தும் தேர்தலில் போட்டியிட்டால் எவ்வாறு புதியவர்கள் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் வர முடியும்? புதிய இரத்தம் பாய்ச்சாமல் எவ்வாறு தமிழ்த் தேசியத்தை கட்டியெழுப்ப முடியும்? 

இரண்டு தடவைகள், மூன்று தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், பல தடவைகள் மாகாண சபை உறுப்பினர்களாக இருந்தும் எதனையுமே சாதிக்காத இவர்களால், இனியும் தேர்தல்களில் போட்டியிட்டு, உறுப்பினர்களாக வருவதால், மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடப் போகின்றது? அவ்வாறாயின் இதற்கு என்னதான் தீர்வு? 

நிச்சயம் தீர்வு இருக்கின்றது. நீண்டகாலமாக நாடாளுமன்ற பதவிப் போர்வைக்குள் குளிர்காய்ந்த இவர்கள் அனைவரும் தேர்தல் அரசியலிலிருந்து முற்றிலுமாக ஒதுங்க வேண்டும். புதியவர்களிடம் கட்சிகளை ஒப்படைக்க வேண்டும். மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிகாந்தா, சிவாஐலிங்கம் போன்றவர்கள் இனியும் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புதியவர்களுக்கு  இடமளித்துவிட்டு, அவர்களுக்கான ஆலோசகர்களாக இவர்கள் இருக்கலாம். உண்மையில் இவர்கள் அனைவரும் தமிழ்த் தேசிய அரசியலை முன்நோக்கி நகர்த்துவதற்கு எந்தவகையிலும் பொருத்தமானவர்கள் அல்லர். அதே போன்று சம்பந்தன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்களும் இந்தத் தடவையோடு தேர்தல் அரசியலிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கி, தங்களின் கட்சிகளின் மூத்த தலைவர்களாகவும் ஆலோசகர்களாகவும் இருக்க முடியும். அரசியல் சூழ்நிலைகள் மாறுகின்ற போது கட்சிகளும் அதன் கட்டமைப்புக்களும் கூடவே மாற வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்த் தேசிய அரசியலை புதிய நிலைமைகளுக்கு ஏற்ப பேணிப் பாதுகாக்க முடியாது. 


தமிழ்த் தேசிய அரசியலில் ஏற்பட்டிருக்கும் பின்டைவுகளை சரிசெய்வதற்காக முதலாவது செய்ய வேண்டியது, தமிழ்த் தேசிய அரசியல் சூழலை சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யும் வழிமுறையாகவே மேலே குறிப்பிட்ட பழைய நபர்கள் தேர்தல் அரசியலிலிருந்து முற்றிலும் ஒதுங்க வேண்டியிருக்கின்றது. இவர்கள் தொடர்ந்தும் தேர்தல் அரசியலில் இருந்தால் ஆற்றலுள்ள தமிழ் இளம் தலைமுறை தொடர்ந்தும் தமிழ்த் தேசிய அரசியலிருந்து வெளியேறிச் செல்லும். அவர்கள் தமிழ்த் தேசிய நீக்கக் கட்சிகளை நோக்கிச் செல்வர். 


இதனால் தமிழ்த் தேசியத்தில் இரண்டாம் மட்டத் தலைவர்கள் இல்லாமல் போவர். இரண்டாம் மட்டத் தலைவர்கள் இல்லாமல் போவதானது, காலப்போக்கில் தமிழர் தேசத்தில் ஆற்றலுள்ள தலைவர்களே இருக்க மாட்டார்கள். தலைவர்கள் என்னும் பெயரில் அரசியல் தரகர்களே இருப்பார்கள். இப்போது தலைவர்கள் என்னும் பெயரில் வலம்வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அப்படியான தரகர்களாகவே இருக்கின்றனர். அரசியலில் தரகர்கள் அதிகரிக்கும் போது, தமிழ்த் தேசியத்தை இல்லாதொழிப்பதற்கான டீல்கள்தான் அதிகரிக்கும். இளம் தலைமுறையினர் எவ்வாறு உள்வாங்கப்பட வேண்டும்? அதற்கு ஒவ்வொரு கட்சிகளும் எவ்வாறான கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்? இவை தொடர்பில் அடுத்த கட்டுரையில் காண்போம்.

-விதுரன்-