பாராளுமன்றத் தேர்தல் 2020 இல் கிழக்கு மக்கள் கூறுவது……..

பிள்ளையானின் வெற்றியையும் அம்பாரை மாவட்டத்தில் கருணா அம்மான் கணிசமானளவு வாக்குகளைப் பெற்றதையும் அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாணம் தமிழ்த் தேசியத்திலிருந்து விலகிச் செல்ல முனைகிறது அல்லது விலகிச் செல்கின்றது என்ற கருத்துப்பட பலர் எழுதியும் பேசியும் வருவதோடு கிழக்கிற்கு தனித்துவமான பிரச்சினைகள் உண்டு அவற்றை வடக்கை தலைமையாகக் கொண்ட அரசியல் கட்சிகள் தொடக்கம் ஆயுத இயக்கங்கள் வரை கவனத்தில் எடுக்கத் தவறின அதன் விளைவே கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியத்திலிருந்து விலகிச் செல்ல நேர்கிறது என்ற கருத்துப்பட கூறுவதையும் அவதானிக்க முடிகின்றது. இது பற்றி ஆழமானபுரிதல் அவசியமாகும்.


சிங்கள அரசுகளின் இனவாதச் செயற்பாடுகளுக்கு எதிராக தமிழரசுக் கட்சியினரால் மந்திர உச்சாடனமாக உச்சரிக்கப்பட்டு தமிழர்களின் நாடி நரம்புகளெல்லாம் ஊறிப்போய்க் கிடக்கும் தமிழ் இன உணர்வு ஒருசில புறக் காரணிகளால் துடைத்தழிக்கபட்டுவிடும் என தமிழ்த் தேசிய அனுதாபிகளும்சரி பிள்ளையானின் ஆதரவாளர்களும்சரி நினைப்பார்களேயானால் அவர்கள் இந்த சமகால அரசியல் போக்கை கவனிக்கத் தவறுபவர்களாகவே இருப்பார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாக்கு வங்கியில் இருந்து சரிந்து செல்கின்றது என்பதை கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களிலே காணக்கூடியதாக இருந்தது. அதற்குக் காரணம் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் செயல்திறன் அற்ற சுயநலமிக்க நடவடிக்கைகளாகும். இவர்களுக்கு தமிழ்த் தேசியம் என்பது பாராளுமன்றம் செல்வதற்கும் அதனூடாகக் கிடைக்கும் வரப்பிரசாதங்கள் மற்றும் சுகபோகங்களை அனுபவிப்பதற்கும் போர்த்திக்கொள்ளும் ஒரு ஆடையேதவிர தமிழ் தேசியத்தினை தங்களுடைய நாடி நரம்புகளில் சுமப்பவர்கள் அல்ல என்பதை தமிழ் மக்கள் மெதுமெதுவாக உணர ஆரம்பித்ததன் வெளிப்பாடே அவர்களுடைய வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவாகும். இந்த செயல்திறன் அற்ற சுயநலமிக்க நடவடிக்கைகள் மட்டக்களப்பு, அம்பாரையை மற்றப் பிரதேசங்களைவிட அதிகமாகவே பாதித்தன. அந்தப் பாதிப்புக்கேற்ற தன்மையினைத்தான் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் மூலம் மக்கள் எடுத்துக்காட்டினர்.


உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னரே தமிழ் மக்கள் குறிப்பாக கிழக்கு மக்கள் அரசியல் அனாதைகளாக ஆக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்த கிழக்கின் அரசியல், சமூகச் செயற்பாட்டாளர்கள் கிழக்குத் தமிழர் ஒன்றியம்’ எனும் அமைப்பினை ஆரம்பித்து அதனூடாக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தனர். உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் முடிந்த பின்பு எதிர்காலத் தேர்தல்களில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதன் அவசியத்தை வலியுறுத்தி அனைத்து தமிழ் கட்சிகளும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தினையும் களுவாஞ்சிகுடியில் கூட்டியிருந்தனர்.


இந்தக் கூட்டத்தின் விளைவாக அகில இலங்கை தமிழர் மகாசபையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்து‘ கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் ஒரு அரசியல் கூட்டணியை உருவாக்கியிருந்தனர். துரதிஸ்ட்டவசமாக வேறு எந்தக் கட்சியுமே தமது கட்சி அரசியலை புறந்தள்ளிவிட்டு தமிழ்மக்களுக்கான அரசியலை இந்தக் கூட்டுக்குள் வந்து முன்னெடுக்க முன்வரவில்லை. குறிப்பாக தமிழ்த் தேசியம் பேசுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கிழக்கின் சுபிட்சம் பற்றிப் பேசுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இநதக் கூட்டைப் பொருட்படுத்தவேயில்லை. இன்று கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியத்திலிருந்து விலகிச் செல்கிறார்கள் என்று ஆதங்கப்படும் பத்தி எழுத்தாளர்களும்சரி அல்லது தமிழ்த் தேசியம் வலுவிழந்து போகின்றதே எனப் புலம்பும் தமிழ்த்தேசிய அனுதாபிகளும்சரி அல்லது கிழக்குக்கு சுபீட்சம் வேண்டும் எனப் பேசுகின்றவர்களும்சரி இந்தக் கட்சிகளுக்கு மக்கள் நன்மை கருதி இந்தக் கூட்டில் சேருங்கள் என்றோ அல்லது புதியதொரு கூட்டை அரசியல் கட்சிகளின் கொள்கை வேறுபாடுகளைக் கடந்து உருவாக்கி ஒன்று சேருங்கள் என்றோ எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை. ஏன் இவர்கள் இவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிக்காமல் விட்டார்கள் என்பதை முதலில் உணர்தல் வேண்டும்.


தமிழ்த் தேசியவாதத்தினை முன்னெடுத்தவர்களைப் பொறுத்தளவில் தமிழ்த் தேசியத்தினை எல்லாத் தமிழ் மக்களுக்குமான தமிழ்த் தேசியமாக உருவாக்கவில்லை. அதற்குக் காரணம் அவர்களின் யாழ் வேளாள உயர்வர்க்க குணாம்சமாகும். யாழ் வேளாள உயர்வர்க்க அறிவாளிகள்தான் தங்கள் நலனுக்குச் சாதகமான தமிழ்த் தேசியவாதக் கருத்தியலை காலத்துக்குக் காலம் உருவாக்கி அந்தக் கருத்தியலுக்குத் தமிழ் மக்களை அணிதிரட்டினர். இதற்கு அடிப்படையாக இருந்தது தமிழ் இன உணர்வாகும். சைவமும் தமிழும் என்ற கருத்து நிலை ஐம்பதுக்கு ஐம்பது என்று வளர்ந்து மானில சுயாட்சிக் கொள்கையாக மாறி தனிநாட்டுக் கோரிக்கையாக முற்றுப் பெற்றதை இந்தப் பின்னணியில் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். இந்தக் கொள்கைகளுக்கு மாறான கருத்துக்களை முன்வைப்பவர்களை இந்த அறிவாளிகள் “துரோகிகள்” என முத்திரை குத்தி புறமொதுக்கினர்.

தமது கொள்கைகளை புகழ்ந்து துதிபாடி அதற்காக தியாகங்கள் செய்ய முற்படுவோர் புனிதர்களாகவும் தமிழ் மக்கள் மீட்பாளர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். இவ்வாறு கடந்த 70 வருடங்களாகப் பேணப்பட்டு வந்த யாழ் மையவாத தமிழ்த் தேசியத்துக்கு மாற்றாக கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியத்தில் புதிய கருத்தியல் தளமாக தங்களுக்கு சம உரிமையும் தங்களுடைய பிரச்சினைகளை வேறுபட்ட அரசியல் பொறி முறையூடாக அணுகப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைப்பதை யாழ் மையவாத தேசியவாதிகள் விரும்பவில்லை.

இதனால் தமிழ்த் தேசிய தளமாற்றக் கருத்தியல் பிரதேசவாதமாக அடையாளப்படுத்தப்பட்டு புறமொதுக்கப்பட்டன/புறமொதுக்கப்படுகின்றன. இதனை அவர்களுடைய ஊடகங்களும் அறிவாளிகளும் மிகநேர்த்தியாகச் செய்தனர்/செய்கின்றனர். இந்தநிலையில் கிழக்கில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் ஒருபொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கள யதார்த்தம் கூட பிரதேசமையவாத அரசியலாகப் பார்க்கபட்டதே தவிர அவ்வாறான அரசியல் செயல்பாட்டின் பெறுபேறுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதன் காரணத்தினால்த்தான் ஓரணியில் நின்று தேர்தலை எதிர்கொள்ளுங்கள் என்ற அழுத்தம் கொடுக்கப்படவில்லை.


யாழ்பாணத்தைத் தலைமையாகக் கொண்ட கட்சியின் தலைவர்களைப் பொறுத்தளவில் கிழக்குக்கான அரசியல் பொறி முறையொன்றை தங்களுடைய கட்சி கடைப்பிடிக்குமானால் அது வடக்கில் தங்களைப் பாதிக்கும் எனக் கருதினர். உதாரணமாக கிழக்கில் பிள்ளையானுடன் அல்லது கிழக்குத் தமிழர் கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டால் அது வடக்கில் தங்களைப் பாதிக்கும். அதனால் கிழக்கு மக்களின் விருப்பத்தை விட வடக்கு மக்களின் மனம் நோகாமல் நடந்துகொள்ள வேண்டும் என்ற நிலையிலே இருந்தார்கள். தமிழரசுக் கட்சியினரைப் பொறுத்தளவில் வடக்கில் தாங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதோடு தமிழ் மக்களின் ஏகப் பிரதி நிதிகள் தாங்கள் தான், தாங்கள் கூறுவதைத்தான் தமிழ் மக்கள் கேட்பார்களே தவிர ஆயுதக் குழுக்களாக இருந்து அரசியல் கட்சிகளாக மாறியவர்களின் கதைகளை அவர்கள் கேட்கமாட்டார்கள் என உறுதியாக நம்பினர்.

இவ்வாறு கிழக்கு மக்களை கறிவேப்பிலையாக நோக்கும் மனோ நிலையும் அதிகாரத்துவ நோக்கும் கிழக்கில் ஒன்றுபட்டு அரசியலை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை இல்லாமல் செய்தன.கடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் மூலம் கிழக்கு மக்கள் தங்களுடைய தெரிவு எவ்வாறு இருக்கும் என்பதை மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றார்கள்.

அந்தவகையில் பின்வரும் மூன்றுவிடயங்களைக் குறிப்பிடலாம்.

  1. மக்கள் நலனுக்காகச் செயற்படுகின்றவர்கள்.
  2. செயல் திறன் வாய்ந்தவர்கள்
  3. தமிழர்கள்
    இந்த மூன்றையும் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றால் நிச்சயம் தோல்வியடைவார்கள் என்ற வரலாற்றை மாற்றி பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட வியாளேந்திரன் அவர்கள் வெற்றியடைந்ததும் பொதுஜன கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் தமிழர்களாக இருந்ததும் இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டும். அந்தக் கட்சியில் முஸ்லிம்களோ அல்லது சிங்களவர்களோ நிறுத்தப்பட்டிருந்தால்க்கூட வியாளேந்திரன் வெற்றி பெற்றிருக்க முடியாது. இது எதைக் காட்டுகின்றது என்றால் மட்டக்களப்புத் தமிழர்கள் இன்னும் தங்கள் தமிழுணர்வையும் தமிழ்த் தேசியத்தினையும் விட்டுவிடவில்லை என்பதையாகும். அது மட்டுமன்றி வியாளேந்திரன் மக்கள் நலனுக்காக செயல் திறனுடன் செயற்படுவார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் காரணத்தினால்த் தான் அவரை மக்கள் தெரிவுசெய்துள்ளனர்.
    இதுபோன்றே பிள்ளையான் அவர்களுடைய தெரிவும் ஆகும். பிள்ளையான் ஏற்கனவே மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய அடித்தளத்தினை தான் முதலமைச்சராக இருந்த போது ஏற்படுத்தியிருந்தார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தெரிவான ஜனா அவர்களும் சாணக்கியன் அவர்களும் மேற்கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையிலே தேர்வு செய்யப்பட்டார்களேதவிர வெறும் தமிழ்த் தேசியக் கோசத்துக்காக அல்ல என்பதை தமிழரசுக் கட்சியினரும் நன்கு அறிவர். ஜனா அவர்களும் சாணக்கியன் அவர்களும் கடந்த காலங்களில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் என்பது ஒன்றும் மூடு மந்திரமல்ல என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டாகவேண்டும்.

எனவே இங்கு கூறவருகின்ற விடயம் கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியத்தினையும் தங்கள் தமிழுணர்வினையும் எந்தவகையிலும் விட்டுக் கொடுக்கவில்லை. அவர்கள் யாழ் மையவாத தமிழ்த் தேசியத்தினையும் தமிழ்த் தேசியத்தினை தங்களை அலங்கரிப்பதற்கான ஆடையாகப் போர்த்திக் கொள்ளும் வேடதாரிகளையுமே வெறுக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை எல்லா தமிழ் மக்களும் தங்களுக்கிடையிலான சாதி,மத,பிரதேச,வேறுபாடுகளைக் கடந்தத மிழ்த் தேசியமும் அதனை முன்னெடுக்கக்கூடிய செயல் திறன் மிக்க மக்கள் நலநாட்டமுள்ள தலைமைகளும் தான். அதனைத்தான் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது.


முடிவாக பொதுவுடமை அறிக்கையில மாக்ஸ்,ஏங்கெல்ஸ்; குறிப்பிட்டவற்றை இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும். “ஒரு தனி மனிதன் மற்றொருவனைச் சுரண்டுவதற்கு எந்தளவு முடிவு கட்டப்படுகிறதோ, அந்தளவுக்கு ஒரு தேசத்தை மற்றொரு தேசம் சுரண்டுவதற்கும் முடிவுகட்டப்படும். ஒரு தேசத்துக்குள் வர்க்கங்களுக்கிடையேயுள்ள பகைமை எந்தளவுக்கு மறைகிறதோ அந்தஅளவுக்கு ஒரு தேசத்துக்கும் மற்றொரு தேசத்துக்கும் இடையில் உள்ள பகைமையும் மறையும்” இங்கு மாக்ஸ்சும் ஏங்கெல்சும் தேசம், வர்க்கம் எனக் குறிப்பிட்டுள்ளதை நாம் எமது சூழலுக்கு ஏற்ப புரிந்து கொள்ளவேண்டும். அதாவது ஒரு தமிழன் மற்றொரு தமிழனை அடக்குவதற்கும் சுரண்டுவதற்கும் முடிவு கட்டப்படுகிறதோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் தமிழ் மக்களை அடக்குவதற்கும் சுரண்டுவதற்கும் முடிவுகட்டப்படும். தமிழ்ச் சமூகத்துள் இருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகள் எந்தளவுக்கு மறைகிறதோ அந்தளவுக்கு தமிழ்ச் சமூகத்துக்கும் சிங்களச் சமூகத்துக்கும் இடையில் உள்ள பகைமையும் மறையும். எனக் கூறலாம்.

எமது தமிழ் தேசியம் இந்த நிலையினை எட்டும்வரை நாம் வலுவான கருத்தியல் போராட்டத்தையும் கருத்துத் தெளிவினையும் ஏற்படுத்தவேண்டியவர்களாக இருக்கின்றோம். இதனை தமிழ் மக்கள் உணர்ந்துகொண்டு உழைக்க முன்வருதல் இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

எழுவான் வேலன்.