கிழக்குக்கான தமிழர் அரசியல் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல

கிழக்குக்கான தனித்துவமான அரசியல் தேவைப்பாட்டை முன்னிறுத்துகின்றபோது அது தமிழ்த் தேசியத் துரோகமாகவும், பிரதேசவாதமாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதமாகவும் திரிவுபடுத்தப்பட்டு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. கிழக்குக்கான அரசியலை தமிழ்த் தேசியவாதத்தின் ஆரோக்கியமான அம்சமாகப் பார்த்து தமிழ்த் தேசியத்தினை சுய விமர்சனம் செய்துகொண்டு முன்கொண்டுசெல்ல முடியாதவர்களாக தமிழ்த் தேசியவாதிகள் இருப்பதோடு கிழக்குக்கான அரசியலை முன்வைப்பவர்கள் தொடர்பாக மிகமோசமான விமர்சனங்களை சமூகப் பொறுப்பற்ற விதத்தில் முன்வைப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறான ஒரு விமர்சனத்துக்கான எதிர்வினையாகவே இப்பத்தி அமைகின்றது.

“அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவை காரணமாக கிழக்கு தனித்து இயங்குதல் வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கும் பலரும் கையில் எடுத்துள்ள மற்றொருவிடயம் முஸ்லிம்களின் மேலாண்மையை ஒடுக்குவது” என ஒரு பத்தி எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கின்றார். இது பல தவறான வரலாற்றுத் தத்துவார்த்தப் புரிதல்களை ஏற்படுத்துகின்றது.

குறிப்பிட்ட பத்தி எழுத்தாளர் முஸ்லிம்களின் மேலாண்மையை ஒடுக்குவது என்று கூறிக் கொண்டு முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையாக எழுதிச் செல்கின்றார். முதலில் முஸ்லிம்களின் மேலாண்மை என்பதும் முஸ்லிம் மக்கள் என்பதுவும் ஒன்றல்ல என்ற புரிதல் அவசியமாகும். எம்மைப் பொறுத்தவரை எந்த ஒரு இனத்தின் அல்லது பிரதேசத்தின் மேலாண்மைக்கும் எதிரானவர்களே அதன் காரணத்தினால்த்தான் நாம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை எதிர்க்கின்ற அதேவேளை யாழ் மேலாதிக்கத்தையும் எதிர்க்கின்றோம்.

அது சிங்களம். அது எதிர்க்கப்பட வேண்டும். இது தமிழ். ஆகவே இது ஆதரிக்கப்படவேண்டும். என்ற இனத்துவ கண்ணோட்டம் எம்மிடம் கிடையாது. இந்த அடிப்படையில் முஸ்லிம் மேலாதிக்கத்தையும் எதிர்க்கின்றோம். எதிர்காலத்தில் மட்டக்களப்பும் மேலாதிக்கம் எடுக்குமானால் அதையும் எதிர்ப்பதை தவிர்க்க முடியாததாகும்.

இவ்வாறு கூறுவதன் ஊடாக நாம் சிங்கள மக்களுக்கோ அல்லது யாழ்ப்பாண மக்களுக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ எதிரானவர்கள் அல்ல என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். மேற்படிபுரிதலின் அடிப்படையில் குறிப்பிட்ட பத்தி எழுத்தாளருடைய எழுத்துக்கான எதிர்வினையாகவே இது எழுதப்படுகின்றது.

கிழக்கு தனித்தியங்கவேண்டும் என்றபோக்கு 1931ம் ஆண்டிலிருந்தே ஆரம்பித்துவிட்டது எனலாம். அதாவது டொனமூர் அரசியல் திட்டம் இலங்கைக்கு சர்வசனவாக்குரிமையினை சிபார்சு செய்தபோது அப்போது சட்டசபையில் இருந்து அத்தனை தமிழ் சட்டமன்ற உறுப்பினர்களும் சேர். பொன். இராமநாதன் தலைமையில் அச்சட்ட மசோதாவுக்கு எதிராக வாக்களித்தபோது மட்டக்களப்பைப் பிரதிநிதித்துவப் படுத்திய சட்டமன்ற உறுப்பினரான ஈ.ஆர்.தம்பிமுத்து அவர்கள் மாத்திரம் தமிழராக அச்சட்டமசோதாவுக்கு சார்பாகவாக்களித்து ஒரோயொருவாக்கினால் அச்சட்ட மசோதாவை வெல்ல வைத்து இலங்கைக்கு சர்வசன வாக்குரிமையினைப் பெற்றுக் கொடுத்தார். இது வேலை வாய்ப்பிற்காகவோ அல்லது அபிவிருத்திக்காகவோ தனித்தியங்கவேண்டும் என்பதோடு முஸ்லிம்களின் மேலாண்மையை ஒடுக்குதல் வேண்டும் என்ற நோக்கங்களோடு எடுக்கப்பட்ட முடிவல்ல. கிழக்கு தனித்துவமான சமூகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது அந்த சமூகக் கட்டமைப்பின் ஜனநாயகத் தன்மையினை உறுதிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட முடிவு அதுவாகும். வரலாறு ஈ.ஆர்.தம்பிமுத்துவின் முடிவே சரியென்பதை நிரூபித்துள்ளது.


அடுத்து தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் மட்டக்களப்பில் தனது கட்சிக் கூட்டங்களை நடத்த முற்பட்டவேளை நல்லையா அவர்கள் மட்டக்களப்பைக் குளப்பவேண்டாம் என தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார். இந்த எதிர்ப்புக் கூட வேலைவாய்புக்காகவோ அல்லது அபிவிருத்திக்காகவோ அல்ல. தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காக கிழக்கின் சமூக நிலையினைப் பயன்படுத்த முனைகிறார்கள் அது கிழக்கிற்கு ஆபத்தானது என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்ததன் வெளிப்பாடாகும்.

இது போன்றே புகழ் பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று கூறப்படுகின்றதனித் தமிழீழப் பிரகடனத்தை மட்டக்களப்பைச் சேர்ந்தகே.டபிள்யு.தேவநாயகம் அவர்கள் இது எமக்குப் பொருத்தமற்றது என விமர்சித்துப் புறமொதுக்கினார். இங்கும் தேவநாயகம் அவர்கள் வேலைவாய்ப்பிற்காகவோ அல்லது அபிவிருத்திக்காகவோ தனித்தியங்கவேண்டும் என்றோ அதனுடன் முஸ்லிம்களின் மேலாண்மையை ஒடுக்குதலும் வேண்டும் என்றோ அவர் அந்த முடிவை எடுக்கவில்லை. இந்தத் தீர்மானம் கிழக்குமக்களின் சமூகப் பொருளாதாரஉறவுகளை சிதறடித்துவிடும் என்ற அவருடைய தூரநோக்குச் சிந்தனையின் வெளிப்பாடாகும். இங்கும் வரலாறு அவருடைய தூர நோக்கு சரி என்பதை நிரூபித்தது. இதன் பின் செ.இராசதுரை அவர்கள் தமிழ்த் தேசியம் என்பது எல்லா மக்களுக்குமான தமிழ்த் தேசியமாக இருக்கவேண்டுமேயொழிய யாழ் மேலாதிக்கத்தின் தேசியமாக இருக்கமுடியாது என்பதை உணர்ந்து தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறினார்.

இவரும் அபிவிருத்துக்கும் வேலைவாய்ப்புக்கும் முஸலிம்களின் மேலாண்மையை ஒடுக்குதல் வேண்டும் என்ற நோக்கோடு வெளியேறவில்லை. இறுதியாக கருணாவின் வெளியேற்றம், தமிழீழக் கனவில் போராடி அழியமுடியாது என்றும் நாங்கள் அழியநீங்கள் பலாபலன்களைச் சுருட்டிக்கொள்கிறீர்கள் என்ற ஆத்மார்த்த கோபத்தின் வெளிப்பாடு அதுவாகும். இவ்வாறு முன்னுள்ள மூவரும் தீர்க்கதரிசனமாக முடிவு எடுக்க பின்னுள்ள இருவரும் அனுபவப்பட்டு எடுத்த முடிவுகளே கிழக்கு தனித்துவமாக இருக்கவேண்டும் என்பதாகும்.

எனவே 1931ம் ஆண்டிலிருந்து கிழக்கிற்கான சமூக நிலையினைக் கருத்தில்கொண்டு கிழக்கு வடக்குத் தலைமைகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இயங்கமுடியாது என்பதை கிழக்கின் அரசியல் தலைமைகள் மிக ஆத்மார்த்த தீர்க்கதரிசனத்துடன் கூறியே வந்துள்ளார்கள். அவ்வாறு இருந்தாலும் மேற் கூறிய ஐவரும் ஆளும் கட்சியுடன் இணைந்துகொண்டுதான் கிழக்கிற்கான அரசியலை முன்னெடுத்தார்களே தவிர கிழக்குக்குத் தனியான அரசியல் அடையாளம் ஒன்றினை உருவாக்கி அதற்கு தலைமை தாங்க முயற்சிக்கவில்லை.

இதனை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் கட்சியினைத் ஸ்தாபித்து செய்திருக்கின்றார். இது கிழக்கின் அரசியலிலும் ஒட்டுமொத்த தமிழ் அரசியலிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தத் தாக்கம் இதுவரை கிழக்கின் தனித்துவ அரசியல் பேசிவந்தவர்களில் இருந்து வேறானது. நல்லையா,தேவநாயகம், இராசதுரை போன்றவர்களுக்குப் பின்னால் அணி திரண்டவர்கள் அக்குறிப்பிட்ட ஆளுமைகளுக்காக அணிதிரண்டவர்களாக இருக்க, பிள்ளையானுக்குப் பின்னால் அணிதிரண்டவர்கள் பிள்ளையான் எனும் ஆளுமைக்கப்பால் ‘கிழக்கு’எனும் கருத்தியலுக்காக அணிதிரண்டவர்களாக இருக்கின்றார்கள். இந்தக் கருத்தியல்தான் போலித் தமிழ்த் தேசியவாதிகளை அச்சுறுத்துகின்ற விடயமாக இருக்கின்றது. அதனால்த்தான் அவர்களுடைய ஊடகங்களும் பிள்ளையானைத் தமிழினத் துரோகி, கொலைகாரன், பிரதேசவாதி என்றெல்லாம் தூற்றிவசைபாடியும் பிள்ளையானுடைய வெற்றியை தடுக்கமுடியவில்லை. தமிழ்த் தேசியம் பேசிய அனைவரையும் விட அதிக விருப்புவாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

இதுதான் யாழ் மேலாதிக்க சிந்தனை மையம் கொண்ட பத்தி எழுத்தாளர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் பிரச்சினையான விடயமாக இருக்கின்றது. இதுவரை காலமும் தங்களுடைய உபதேசங்களைக் கேட்டு அதன்படியே வாக்களித்து வந்தமக்கள் தற்போது கிழக்கு தனித்தியங்கவேண்டும் என்ற கொள்கைக்குப் பின்னால் அணிதிரண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கை வளரவிட்டால் எதிர்காலத்தில் கிழக்கில் அரசியல் வியாபாரம் செய்யும் தங்களுடைய இராஜதந்திரம் பலிக்காது என்பதையும் அவர்கள் உணர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். இதற்காக அபிவிருத்தி – உரிமைபற்றியும் முஸ்லிம் தமிழ் உறவு பற்றிய‘ பிட்டும் தேங்காய்ப்பூவும்’ கதையினையும் பேச முற்பட்டிருக்கிறார்கள். “ஒடுக்குமுறையின் வலியை நன்கு அனுபவித்த ஒரு இனம் மற்றொரு இனத்தை ஒடுக்குவதற்குத் துணைபோகின்றது என்றால் அதனைவிட வரலாற்று முரண் எதுவாக இருக்கமுடியும்?” எனமுதலைக் கண்ணீர்வடித்துக் கேள்வி எழுப்புகின்றார்கள்.

இந்தக் கேள்வி நியாயமான கேள்விதான். இந்த நியாயமான கேள்வியினை முதலில் தமிழ் சமூகத்துக்குள் கேட்கவேண்டும். 30 வருடம் ஆயுதப் போராட்டத்தை தமிழ் இனம் என்ற அடிப்படையில் போராடிய பிறகும். ஒரு ஊரில் ஒருபிரிவினருக்கு தேர்வடம் பிடிக்க அனுமதி மறுத்து ஜே.சி.பி. எனும் இயந்திரத்தைக் கொண்டு தேர் இழுத்தபோது அந்தமக்கள் இயந்திரத்தைவிட கீழானவர்களாக ஆக்கப்பட்டது சமூக ஒடுக்கு முறையாகத் தெரியவில்லையா? இன்னும் தங்களுடைய பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை,பெண் தேடும் போது ஒரு தமிழ் மகனையோ அல்லது தமிழ் மகளையோ தேடாமல் தங்கள் சாதிப் பிள்ளைகளைத் தேடுவது சமூக ஒடுக்குமுறை இல்லையா? கோயில்களுக்குள் செல்வதற்கான அனுமதியை இந்தத் தமிழ் தேசியவாதிகள் தமிழ் மக்கள் எல்லோருக்கும் வழங்கியிருக்கிறார்களா? இவையெல்லாம் வரலாற்று முரணாகத் தெரியாதவர்களுக்கு கிழக்குத் தமிழ் மக்கள் முஸ்லிம்களின் மேலாண்மையை ஒடுக்குவது என அவர்களே புனையும் கட்டுக் கதைமட்டும்; வரலாற்று முரணாகத் தெரிவது ஆச்சரியமானவிடயம்தான்.

இந்தப் போலித் தமிழ்த் தேசியவாதிகளினாலே தமிழ் முஸ்லிம் உறவு சிதைவடைந்தது என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும். அது சிதைவடையக் கூடாது என்பதற்காகத்தான் ஏற்கனவே குறிப்பிட்ட கிழக்கின் அரசியல் தலைமைகள் தங்கள் எதிர்ப்பினை குறிப்பிட்ட முக்கிய சந்தர்ப்பங்களிலெல்லாம் வெளிப்படுத்தியிருந்தார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை குறிப்பிட வேண்டியிருக்கின்றது.

சஹரானுடைய குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தத் தமிழ்த் தேசியவாதிகள் குறிப்பாக மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தையும் வியாபாரப் புறக்கணிப்பையும் மேற்கொண்டபோது கிழக்கின் தனித்துவம் பற்றிப் பேசுகின்றவர்கள்தான் முஸ்லிம்களுக்கு தற்போது தேவை தமிழர்களுடைய ஆதரவும் அன்பும் என்பதை உறுதியாகக் கூறிச் செயற்பட்டவர்கள். அப்போதெல்லாம் போலித் தமிழத் தேசியவாதிகளுக்கு முதுகு சொறிபவர்கள் இந்தப் பிட்டும் தேங்காய்ப் பூவை மறந்திருந்தார்கள் என்பதை அவர்களுக்கே நினைவூட்ட வேண்டியிருப்பதுதான் தமிழ்த் தேசிய அரசியலின் கடைந்தெடுத்த புதியசந்தர்ப்பவாதமாகும்.

கிழக்கின் அரசியல் அடையாளமாக தங்களை முன்னிறுத்தியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் கூட ஒருபோதும் முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தி அரசியல் செய்யவும் இல்லை. பிள்ளையான் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அவர் கிழக்கு மக்களுக்குமான முதலமைச்சராக இருந்தாரேதவிர தமிழ் இனவாத முதலமைச்சராக இருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் கூட ஒத்துக் கொள்கின்றார்கள்.

அதுபோன்று அக்கட்சியின் ஆலோசகராக இருக்கின்ற சின்னான் மாஸ்ரர் (எம்.ஆர்.ஸ்ராலின்) என்பவர் கூட முஸ்லிம்களினதும், தாழ்த்தப்பட்ட மக்களினதும் உரிமைகளுக்காக தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர். அவ்வாறு இருக்கும் போது இவ்வாறு முஸ்லிம்களின் மேலாண்மையை ஒடுக்குவது என்கின்ற கட்டுக்கதைகளைப் புனைவதின் ஊடாக கிழக்குக்கான அரசியலை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக முஸ்லிம் மக்களைத் திருப்பி தங்களைப் புனிதர்களாக உருவகிக்கும் காட்சியினை இப்பத்தி எழுத்தாளர்கள் ஆரம்பித்திருக்கின்றார்கள். இது தொடர்பாக கிழக்கு மக்கள் அவதானத்துடன் இருப்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.

எழுவான் வேலன்.