கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களினால் ஜனாதிபதிக்கு கடிதம்!

001 2
001 2

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தருமாறு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று(13) அனுப்பி வைத்துள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவர் தாக்குதலிற்குள்ளான சம்பவம் தொடர்பில் கண்டனங்கள் வெளிவரும் நிலையில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சுய கௌரவத்தினை பாதுகாத்து தருமாறு குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

ஊடகவியலாளர்களின் கௌரவம் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தருமாறு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாகிய தங்களிடம் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களாகிய நாங்கள் வினயமான கோரிக்கையை முன்வைக்கின்றோம். நேற்றைய தினம் செய்தி அறிக்கையிடலிற்காக சென்ற முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவமானது ஏனைய ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சுறுத்தலையும், கௌரவத்தையும் பாதிப்படைய செய்துள்ளது. சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் மௌனம் காப்பதானது இலங்கையில் ஊடக சுதந்திரத்தை மீண்டும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

Kilinochchi 17


நேற்றைய சம்பவம் போன்று பல சம்பவங்கள் கடந்த சில காலமாக தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றது. கிளிநொச்சி பளை வைத்தியசாலையில் கடமை நேரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் செய்தி அறிக்கையிட்ட பளை பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டுள்ளார். அரசியல்வாதி ஒருவர் இயற்கை வளங்களை அழிப்பது தொடர்பில் செய்தி அறிக்கையிடல்களை மேற்கொண்ட ஊடகவியலாளரிற்கான வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசியல்வாதியின் அழுத்தத்தின் பிரகாரம் மறுக்கப்பட்டுள்ளது. இவற்றின் தொடர்ச்சியாக நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் மீது தாக்கதல் சம்பவமும் பதிவாகியுள்ளது.

இவ்வாறான நிலையில் வடக்கு கிழக்கில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படல் மற்றும் அரசியல் ரீதியாக பழிவாங்கலிற்குள்ளாதல் போன்ற சம்பவங்கள் இனியும் தொடராத வகையில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, அவர்களின் குடும்ப மற்றும் தனி மனித கௌரவம் ஆகியவற்றை பாதுகாத்து கொடுக்க வேண்டிய தார்மீக கடமை தங்களிடம் உள்ளது.

Kilinochchi 5

இயற்கைக்கு எதிரான மனித செயற்பாடுகள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படும் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளிற்கு ஒத்துழைக்காதும், சட்டவிரோத செயற்பாடுகளை கண்காணிக்காதும் செயற்படும் அரச அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிளிநொச்சி ஊடகவியலாளர்களாக நாம் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.


பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நியாயம் கிடைக்கவும், குற்ற செயல்களை கட்டுப்படுத்த தவறிய அரச அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வினயமாக வேண்டுகின்றோம். இலங்கையின் எந்த பகுதியிலும் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது கடமைகளை செய்யக்கூடிய சூழலை ஏற்படுத்தி தருமாறும் அவர்களிற்கு ஏற்படுகின்ற அரசியல் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களிலிருந்து மீண்டு சுதந்திரமாக தமது கடமைகளை மேற்கொள்வதற்கான ஏற்ற சூழல் அமைய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகின்றோம். 
கையளிக்கப்பட்ட மகஜரை உரிய காலப்பகுதிக்குள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Kilinochchi 15
Kilinochchi 12
001 1
Kilinochchi 20