அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் வெளியேறமாட்டோம்; மஹிந்த அமரவீர உறுதி

அமரவீர 720x380 1
அமரவீர 720x380 1

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளியேறுவது குறித்து பல தரப்பினர் யோசனை முன்வைத்துள்ளார்கள். ஆணைக்குழுவின் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியாக சித்தரித்துள்ளது. காணப்படும் குறைப்பாடுகளினால் அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் வெளியேறமாட்டோம். தவறுகளை திருத்திக் கொண்டு பயணிக்கவே எதிர்பார்த்துள்ளோம் என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சூரியவெல பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நம்பிக்கையற்ற பயனற்ற விசாரணை அறிக்கையினை சமர்ப்பித்துள்ளது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் நாட்டு மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மாறாக தேவையற்ற காரணிகள் மாத்திரமே அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரி யார், எவரது தேவைக்காக குண்டுத்தாரிகள் செயற்பட்டார்கள், என்ற விடயங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மாறாக குண்டுத்தாக்குதலில் சூத்திரதாரியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், மற்றும் காவல்துறை மா அதிபர் மற்றும் தேசிய பௌத்த அமைப்புக்களை ஆணைக்குழு சித்தரித்துள்ளது. இது முற்றிலும் தவறான செயற்பாடாகும்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக உள்ளது. ஒரு சிலரது செயற்பாடுகளும், கருத்துக்களும் சுதந்திர கட்சியை புறக்கணிக்கும் வகையில் காணப்படுகிறது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சுதந்திர கட்சியை அடிப்படையாகக் கொண்டு வெளியான பின்னர் அரசாங்கத்தில் இருந்து சுதந்திர கட்சி வெளியேறுவது பொருத்தமானது என பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். தவறுகளை சுட்டிக்காட்டி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் வெளியேறமாட்டோம். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான அறிக்கையை முழுமையாக நிராகரித்துள்ளோம். அறிக்கையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளோம்.

தவறுகளை திருத்திக் கொண்டு அரசியல் ரீதியில் ஒன்றினைந்து பயணிக்கவே எதிர்பார்த்துள்ளோம். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான அறிக்கை குறித்து பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த சிறந்த தீர்வை பெற முயற்சிக்கிறோம் என்றார்.