அமைச்சினை பெறுவதன் மூலமே தமிழர்களை பாதுகாக்க முடியும்

thurairetnam
thurairetnam

மத்திய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்வதன் ஊடாகவே எதிர்காலத்தில் கிழக்கு தமிழர்களை நாங்கள் பாதுகாக்க முடியும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.சிரேஸ்ட உபதலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

தற்சமயம் 13வது திருத்த சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளதால் அமுலாக்கப்பட்டுள்ள விடயங்களையும் அமுலாக்கப்படாத விடயங்களையும் பேசுவதற்குரிய களத்தை தமிழ் தலைமைகள் உருவாக்க வேண்டும்.

தமிழ் தலைமைகள் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய அரசுடனும் இலங்கை அரசுடனும் பேசுவதற்கான ஒரு களத்தை உருவாக்கி, கையில் இருக்கின்ற அதிகாரத்தை முதல் கட்டமாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதன் ஊடாக எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்குரிய அதிகாரத்தை தமிழர்கள் தங்களுடைய கையில் எடுத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

தற்சமயம் உள்ள சூழ்நிலையினை பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்தில் ஏனைய இனங்ளைச் சேர்ந்த முஸ்லிம் அமைச்சர்களும் சிங்கள அமைச்சர்களும் இந்த அமைச்சர் பதவியை எடுத்துக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக தமிழ் பகுதிகளில் வேண்டா வெறுப்பாக நடந்து கொள்வதனால் எங்களது அபிவிருத்தி இருபத்தைந்து முப்பது வருடங்கள் பின்னோக்கியுள்ளது.

எனவே கிழக்கு மாகாணத்தில் செயற்படுகின்ற அரசியல் கட்சிகள் ஒரே குடையின் கீழ் அமைச்சு பதவிகளை எடுத்துக்கொள்ள கூடியவாறு கூடுதலான பாராளுமன்ற ஆசனத்தை பெறுவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடுவதன் ஊடாக ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் உரிமையை பாதுகாப்பதற்கு நாங்கள் செயற்படுவோமானால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை யாராலும் பாதுகாத்துக்கொள்ள முடியாது அமைச்சு பதவிகளை பெறுவதன் ஊடாகவே எதிர்காலத்தில் கிழக்கு தமிழர்களை பாதுகாக்க முடியும் என தெரிவித்துள்ளார்.