பெருகிவரும் பேரினவாதப் பேராபத்து! தடுக்கத் தயாராகிறதா தமிழ் சமூகம்?

Chinema
Chinema

1949
முழுமையாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த திருகோணமலை மாவட்டத்துக்கு வருகிறார் பிரதமர் டி.எஸ். சேனநாயக்க. அரச மரம் ஒன்றை நாட்டி வைத்த பின்பு திட்டமிட்டுக் குடியேற்றப்பட்டிருந்த சிங்கள மக்கள் மத்தியில் பேசுகிறார் அவர், “இந்த மரம் வளர்ந்து பெருவிருட்சம் ஆகும்போது நீங்கள் (சிங்களவர்) மட்டும்தான் இந்தப் பகுதியில் இருக்க வேண்டும்”, என்கிறார்.

தமிழர் தாயகத்துக்குள் அத்துமீறி நுழைந்த முதல் குடியேற்றத்திட்டம் இதுதான். சிறுபான்மை இனத்தவராக கிழக்கு மாகாணத்தில் இருந்த சிங்களவர்கள்தான் இன்று பெரும்பான்மையினர். பெரும்பான்மையினராக இருந்த தமிழினம் வீழ்ச்சியை சந்தித்து மூன்றாவது சிறபான்மை இனமாக மாறிவிட்டது.

சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் கைகளில் ஆட்சிப் பீடம் சென்றதுமே சிறுபான்மையினருக்கு எதிராக – குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு எதிராக அழிப்புக்கள் – அடக்குமுறைகள் – ஆக்கிரமிப்புக்கள் கட்டவிழ்க்கப்பட்டு விட்டன. இந்த சம்பிரதாயத்தை – பாரம்பரியத்தை தொடக்கி வைத்தது அன்று ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி.

1956
ஆனால், “இந்த நாடு சிங்களவர்களுடையது. நாடு முழுவதும் சிங்களவர்களே இருக்க வேண்டும்” , என்ற மனநிலையை விதைத்தது ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவரும் அன்றைய பிரதமருமான டி.எஸ்.சேனநாயக்க. அவருக்குப் பின்னர், அவரின் மகன் டட்லி சேனநாயக்கவும் அவருக்குப் பின்ன கொத்தலாவலையும் ஆட்சிப் பீடம் ஏறினர். இப்படியே தொடர்ந்தால், முக்கிய அமைச்சர்கள் பட்டியலிலேயே தான் இருந்து விடவேண்டியதுதானா என அச்சமடைந்தார் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா.

கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறிய பண்டாரநாயக்கவுடன், கிளம்பினார் டி.எம். ராஜபக்ச (இன்றைய ராஜபக்ச சகோதரர்களின் தந்தை). ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்தார் பண்டாரநாயக்கா. ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமானால், ஏதாவது செய்தே ஆக வேண்டுமே என்ன செய்வது. சற்றும் தயங்கவில்லை – தடுமாறவும் இல்லை. சமஷ்டி குறித்து எழுதிய அவரது கைகள் பேரினவாதப் பெருநெருப்பைப் பற்றிப் பிடித்தன. சிங்கள மக்களின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும், ஆட்சி எம் வசம்தான் என்ற பேரினவாதப் பெருநெருப்பு அவரைப் பற்றிக் கொண்டது.

“நாம் ஆட்சிப் பீடமேறினால் 24 மணி நேரத்தில் தனிச்சிங்கள சட்டத்தை நிறைவேற்றுவோம்” என்று அறிவித்தார். சிங்கள மக்கள் சற்றும் தாமதிக்கவில்லை. பண்டாரநாயக்காவை பிரதமராக்கி அழகு பார்த்தனர். சிங்கள மட்டும் சட்டம் நிறைவேறியது. நிறைவேறியது சட்டம் மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளும்தான். சுதந்திர இலங்கையில் முதன்முதலாக வலிந்து ஏற்படுத்தப்பட்ட வன்முறைச் சம்பவம் அதுதான். வடக்கு – கிழக்குக்கு அனுப்பப்பட்டார்கள்.

1965
ஆட்சியை இழந்த ஐக்கிய தேசியக் கட்சி, 1960 களில் ஆட்சிப் பீடமேறினாலும், அவர்களால் நிலைக்க முடியவில்லை. 1965 இலும் ஆட்சியைக் கைப்பற்றியபோதும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. தமிழர்களின் உதவியை நாடினார்கள். ஆதரவு வழங்கப்பட்டது. டட்லி – செல்வா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தமும் கிழித்தெறியப்பட்டது. தமிழர்கள் முன்னெடுத்த அறவழிப் போராட்டங்களும் வன்முறையாளர்களை ஏவி அடக்கப்பட்டது.

1972
ஆட்சியைக் கைப்பற்றியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. கல்வியில் தொடர்ந்த தமிழர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக தரப்படுத்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டது. அப்பட்டமாக பேரினவாத மனநிலை தெறித்தது இந்தத் தரப்படுத்தலில், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஆயுத வழியை நாடினார்கள்.

1978
நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 6 இல் 5 பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுகிறது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை ஏற்படுத்தப்பட்டது. தொடர்ச்சியாக தமிழர்கள் ஆயுதவழியை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 1981, 1983 வன்முறைகள் ஏற்படுத்தப்பட்டன. ஒட்டுமொத்தமாக வன்முறையாளர்கள் தமிழ் மக்கள் மீது ஏவப்பட்டனர். மூவாயிரத்துக்கும் குறையாத தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன – எரியூட்டப்பட்டன. தமிழர்கள் ஆயுத வழித் தீர்வே ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தார்கள்.

1994
தமிழர்களின் போரால் கதி கலங்கிய தென்னிலங்கை சமாதான முகத்தை நாடியது. ஆனால், தங்கள் முன்னோர்களைப் போன்றே போலி முகத்துடன் வந்தார் சந்திரிகா குமாரதுங்கா, ஒப்பந்தம் – சமாதானப் பேச்சு நடந்தது. ஆனால், தன் காரியம் முடிந்ததும் வழமை போன்று யுத்த – பேரிவாத சன்னதம் கொண்டு ஆடியது தென்னிலங்கை. மீண்டும் போர் தமிழ் மக்கள் மீது இலங்கையின் முப்படைகளும் போரைக் கட்டவிழ்த்து அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன.

2005
மீண்டும் சமாதானம் என்ற ஆயுதத்தைக் கையில எடுத்தது. 2000 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி. தொடர்ந்த பேச்சுக்களும் ஒப்பந்தங்களும் பலனளிக்கவில்லை. 2005 தேர்தலில் முன்னோர்களின் ஆயுதமான பேரினவாதத்தைக் கையில் எடுத்தார் அன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச. வெற்றி பெற்று ஜனாதிபதியானார். வழக்கமான தங்கள் தலைவர்களின் பாணியில் ஒப்பந்தத்தைக் கிழித்தார் – பேச்சுக்களை முறித்தார். மீண்டும் போர் – தமிழ் மக்கள் மீது பேரழிவு – திட்டமிட்ட பேரழிவு கட்டவிழ்த்து விடப்பட்டது. சிறுபான்மை இனமொன்றின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பேரழிவை தமிழ்பேசும் ஏனைய சிறுபான்மை இனங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தன. சில தரப்புகள் அதற்கும் மேலேபோய் ஆதரவு வழங்கின. மிகப்பெரும் இனவழிப்புடன் 2009 மே இல் போர் நிறைவுக்கு வந்தது.

2010
சிறுபான்மை இனமொன்றின் மீது – தங்களின் சகோதரர்கள் மீது – கட்டவிழ்த்து விடப்பட்ட போரை – இனவழிப்பை – பேரழிவை கொண்டாடியது சிங்கள – பௌத்த பேரினவாதம். மீண்டும் ராஜபக்ச தலைவரானார். எவருக்குமே கிட்டாத 3 இல் 2 பெரும்பான்மை பலத்தை வழங்கியது பேரினவாதம். சட்டத்தை தன் இஷ்டத்துக்கு மாற்றினார். “இதுவே என் கட்டளை – என் கட்டளையே சாசனம்”, என்ற பாகுபலி வசனத்தை அன்று – அதுவும் இன்றைய ஜனநாயக யுகத்தில் நடைமுறைப்படுத்தினார்.

2019

2015 இல் மீண்டும் குழப்பங்களுக்கு மத்தியில் ஆட்சி மாறியது. ஆனால், நடந்தவை எல்லாம் தலைகீழ். எனினும், 2015 ஆட்சிக் காலம் தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை என்றாலும், அது தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு – எதையும் செய்துவிடவில்லை. இந்நிலையில்தான் 2019 ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. இந்தத் தேர்தலில் சிங்கள – பேரிவாதக் கருத்துக்கள் – சிந்தனை மேலெழுந்தன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து உருவான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சித் தலைமையைக் கைப்பற்ற இலகுவழியாக தங்கள் முன்னோர்கள் காட்டிய வழியிலேயே அட்சரம் பிசகாமல் நடந்தார்கள். 70 ஆண்டுகள் கடந்தும்கூட சிங்கள – பௌத்த பேரினவாதம் தனது கொள்கையை – போக்கை – மாற்றாமலே வழக்கம் போல பேரினவாத சிந்தனைக்கு – ஆக்கிரமிப்பு மனநிலைக்கு – சிறுபான்மைகளை அடக்குவதற்கு தனது பேராதரவை வழங்கியது.

இந்நிலையில், அனேகமாக 2020 ஏப்ரலில் நாடு மற்றொரு தேர்தலை சந்தித்து நிற்கிறது. சிங்கள – பௌத்த பேரினவாதத்தை முதன் முதலில் முன்வைத்த ஐக்கிய தேசியக் கட்சி தன் முகத்தை மாற்றப் போய் தோல்வியை – இறக்கத்தை சந்தித்து – பேரினவாத சக்திகளிடம் மதிப்பிழந்து நிற்கிறது. இந்நிலையில் தனது பேரினவாத கோர முகத்திற்கு மீண்டும் மாறுவதே ஆட்சிக் கதிரையைப் பிடிப்பதற்கான ஒரே வழி என கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்ற சஜித் பிரேமதாஸ – அடிபட்ட வேங்கையாக சீறுகிறார்.

தேவைக்கு தகுந்தாற் போல், உண்மை முகத்தை மறைத்து சமாதான முகம் காட்ட முனைந்த – குள்ளநரிகளின் கூடாரம் எனத் தமிழர்களால் விளிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி இப்போது தனது உண்மை முகத்தை வெளிப்படையாகவே காட்டப்போகிறது. பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி விரைவில் – வெகுவிரைவில் சஜித் வசம் சென்றுவிடலாம் – ஆயிரம் விகாரைகள தரிசிப்பு என்ற பௌத்த தீவிர சிந்தனையுடன் தனது பேரினவாதக் கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து அறுவடைக்கு தயாராகுபவருக்கு எதிராக – தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை மிகப்பெரும் பேரினவாத சக்திகளாகக் கருதப்படும் ராஜபக்ச சகோதரர்கள் காட்டுவார்கள். ஆக, இலங்கை 60 ஆண்டுகளுக்கு முற்பட்டுச் சென்று இனவாத அரசியலை – பேரினவாத சிந்தனைக்கு தயாராகி வருகிறது.

இப்படி ஏட்டிக்குப் போட்டியாக சிங்கள – பௌத்த பேரினவாதம் சூழ்நிலையில் தமிழ் பேசும் சிறுபான்மை இனங்கள் தங்கள் பேதங்களை – அரசியல் நலன்களை – இன – மத முரண்பாடுகளை உயரப் பிடித்தபடி நடைபோடுகின்றன. ஆனால், இப்போது எழுந்துள்ள இந்தப் பேராபத்தைத் தவிர்க்க சிறுபான்மை இனங்கள் ஒன்றிணைய – ஒன்றுபட்ட சக்தியை வெளிப்படுத்த வேண்டிய தேவை உண்டு.

அரசியல் – சுயநல இலாபங்களுக்கு இம்முறை தேர்தலில் சிறுபான்மை இனங்கள் இடம் கொடுத்தால், அவற்றுக்காக அவர்கள் கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருக்கும். கடந்த ஒரு மாத கால ஆட்சியே இதற்கு சான்று.

செவ்வேள்

( இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. -ஆசிரியர்பீடம் )