காணாமற்போனோர் விவகாரத்தில் முக்கிய விடயத்தை தவிர்த்த ஊடகங்கள் – ஜனாதிபதி

83769662 153287042778461 3888337298701418496 n
83769662 153287042778461 3888337298701418496 n

காணாமற்போனோருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்னதாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஐ. நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஹானா சிங்கர் அவர்களிடம் தான் தெரிவித்த முக்கியமான விடயம் வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ தவிர்க்கப்பட்டிருக்கின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காணாமற்போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தமிழர் தரப்பை விசனமடையச் செய்தது.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள், “காணாமல்போனவர்கள்” தொடர்பாக இலங்கைக்கான ஐ. நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருடன் நான் உரையாடியது தொடர்பான மேலதிக தெளிவுபடுத்தல்” என்ற தலைப்பில் தனது முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார் அப்பதிவு வருமாறு

““காணாமல் போனவர்கள்” என பட்டியலிடப்பட்டுள்ள 20,000 பேரும் இறந்துவிட்டதாக, ஐ. நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஹானா சிங்கர் அம்மையாரிடம் நான் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு – இந்தச் செய்திகள் அனைத்திலுமே – இறப்பு சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்னதாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று அம்மையாரிடம் நான் தெரிவித்த மிக முக்கியமான விடயம், வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ தவிர்க்கப்பட்டிருக்கின்றது.

மேலும், நானோ அல்லது சிங்கர் அம்மையாரோ, எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்ற எண்ணிக்கை எது தொடர்பாகவும் கதைத்துக்கொள்ளவில்லை என்பதே உண்மை ஆகும்.

இந்த விடயமானது, பொதுவாகவும் மேலோட்டமாகவுமே கலந்துரையாடப்பட்டதே அல்லாமல், அது தொடர்பான குறிப்பான விபரங்கள் எதுவும் பேசப்படவில்லை.

மிகவும் துரதிர்ஷ்டவசமாக – 20,000ற்கும் மேற்பட்ட காணாமல் போனவர்களும் இறந்துவிட்டனர் என நான் “ஒப்புக்கொண்டதாக” வேறு, தவறாக அர்த்தப்படுத்தி இந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

ஆனால், நான் அவ்வாறான எந்த ஒரு “ஒப்புக்கொள்ளலையும்” செய்யவில்லை என்பதுடன், எத்தனை பேர் காணாமல் போயினர் அல்லது இறந்துவிட்டனர் என்ற எண்ணிக்கை தொடர்பிலும் எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை.

இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையும் அமைதியையைம் கட்டியெழுப்புவதற்கு எம்மிடமிருக்கும் வேலைத்திட்டம் என்னவென சிங்கர் அம்மையார் அறிய விரும்பிய போதே – பொருளாதார அபிவிருத்தி, தமிழ் மக்களையும் காவல்துறையில் சேர்ப்பது என்பவற்றுடன், காணாமல்போனோர் பிரச்சனைக்கும் தீர்வு ஒன்றை காண நான் முயற்சிக்கவிருப்பதாக அவரிடம் நான் விளக்கினேன்.

“போரில் இறந்த ஏராளமானோரின் உடல்கள் மீட்கப்படவில்லை என்பதனால், காணாமல் போனவர்களின் நிலை என்னவென்று அவர்களது குடும்பத்தினர் தெரியாது இருக்கின்றனர். அதே வேளையில் – இந்த குடும்பங்களில் பெரும்பாலானவர்கள், காணாமல்போன தமது அன்புக்குரியவர்கள் விடுதலைப் புலிகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதன் சாட்சிகளாகவும் இருக்கின்றனர்” என சிங்கர் அம்மையாருக்கு நான் விளக்கியதுடன்,

“எனவே, தேவையான – உரிய – விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், காணாமல்போனோரின் குடும்பங்கள் தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான உதவிகளையும் வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம்” எனவும் தெளிவுபடுத்தினேன்.”