ராஜபக்சக்களின் கட்சிகளுக்கு தேர்தலில் பதிலடி கொடுங்கள் – சிறிநேசன்

srinesan
srinesan

“ராஜபக்சக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை பொதுத் தேர்தலில் சில்லறைத்தனமான முறையில் பல கட்சிகளை உருவாக்கி தமிழ் மக்களின் வாக்குகளை உடைத்துச் சின்னாபின்னமாக்கும் சதி முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். எனவே, ராஜபக்சக்கள் சார்பான கட்சிகளுக்கு இந்தத் தேர்தலில் எமது மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கோரிக்கை விடுத்துள்ளார் .

களுவாஞ்சிக்குடி இளைஞர் முன்னேற்றக் விளையாட்டுக்கழகத்தின் 38ஆவது வருடாந்த விளையாட்டு விழா களுவாஞ்சிக்குடி பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் எம்.பி. ஸ்ரீநேசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியிருக்கின்ற ராஜபக்ச அரசின் போக்குகளை நாங்கள் பார்க்கின்றபோது இந்த நாட்டில் சிறுபான்மை இனம் இருக்கின்றது என்பதை அவர்கள் மறந்து செயற்படுகின்ற தன்மையை நாங்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.

தமிழ் இனத்தில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரையும் மண்ணுக்குள்தான் தேடிப் பார்க்க வேண்டும் எனப் பரிகாசம் செய்யுமளவுக்கு எமது நிலைமை வந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டின் பெரும்பான்மை இனமான பௌத்த மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவராகத் தன்னைச் சித்தரித்து வருகின்றார். அதற்கமையவே தான் செயற்படப் போவதாகவும் கூறி வருகின்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை இலங்கை ஏற்றுக்கொண்டால் இந்த அரசு கடந்த காலங்களில் நிகழ்த்திய பல்வேறு விடயங்கள் சம்பந்தமாகப் பொறுப்புக்கூற வேண்டும். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும், மனித உரிமையை நிலை நாட்டல் போன்ற பல விடயங்களைச் செய்ய வேண்டும். ஆனால், ஐ.நா. தீர்மானங்களில் இருந்து இந்த அரசு வெளியேறியுள்ளது என்றால் குறித்த விடயங்களில் இந்த அரசு கரிசனை செலுத்தப்போவதில்லை என்பது புலனாகியுள்ளது. எனவே, தமிழ் மக்கள் இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

எமது மக்கள் ஆழமாகச் சிந்தித்து தமிழ்த் தேசியக் கட்சியின்பால் சிந்தித்து சரியான முடிவை எடுக்க வேண்டும்.

கடந்த நல்லாட்சி அரசில் காணாமல் ஆக்கப்பட்டடோர் சம்பந்தமான விடயங்களைக் கையாள்வதற்கு செயலகம் அமைக்கப்பட்டது. இழப்பீட்டுக்கான அலுவலகம் அமைக்கப்பட்டது. அதேபோன்று அபிவிருத்தி திட்டங்களாக வீதி அபிவிருத்தித் திட்டம், கம்பரெலியத் திட்டம், வீடமைப்புத் திட்டம், குடிதண்ணீர் திட்டம் போன்ற பல திட்டங்கள் கடந்த அரசால் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், இந்த அரசில் அவையனைத்தும் பேச்சளவில் உள்ளன. இந்த அரசின் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு ஆகிய வாக்குறுதிகளை உதாரணத்துக்குக் குறிப்பிடலாம்.

எனவே, எமது மக்கள் ஏமாற்றுப்படக் கூடாது. இந்த அரசு எமது மக்களை ஏமாற்றம் செய்கின்ற கைங்கரியத்தை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் இந்த விடயங்களில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். தென் பகுதியில் பெரும்பானமை மக்கள் ஒன்றுபட்டுள்ளனர், முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்டுள்ளனர். அதே போன்று தமிழ் மக்களும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.

தமிழ் மக்கள் விடயத்தில் இந்த அரசு பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமை போன்ற விடயங்களில் தவறிழைத்துள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் தெளிவாகக் கூறியிருக்கின்றார். இதனூடாக இந்த அரசு தவறிழைத்துள்ளது என்பதை சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்துள்ளது. இதற்கமைய நாங்கள் செயற்பட வேண்டும்.

இந்தத் தேர்தலில் ராஜபக்சக்கள் சார்பான கட்சிகளுக்கு எமது மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை நான் இந்த இடத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன்” – என்றார்.