கிளிநொச்சியில் அடாவடி அரசியல் செய்ய முயல்கிறாரா சந்திரகுமார்?

.jpg
.jpg

அண்மையில் கிளிநொச்சியில் பாடசாலை அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. இந்த இடமாற்றங்களின் போது அரசாங்கத்திற்கு ஆதரவான அரசியல்வாதி ஒருவர் தலையிடுவதாக ஒரு செய்தியினை ஊடகங்கள் பிரசுரித்திருந்தன. அவர் வேறு யாருமல்ல. சந்திரகுமாரே. அதுவும் முதற்தர பாடசாலை ஒன்றுக்கு தனக்கு வேண்டிய, தனது கட்சிக்கு ஆதரவான தகைமையற்ற ஒருவரை அதிபர் பதவிக்கு நியமிக்குமாறே அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது மாணவர்களின் கல்வியை பாழாக்கும் செயல். இவ்வாறு தவறான நியமனங்களையும் தவறான செயற்பாடுகளையும் செய்து அதனை அரசியல் முதலீடாக்க சந்திரகுமார் முனைகின்றார். கிளிநொச்சிக்கு எந்த விதத்திலும் தொடர்பற்ற சந்திரகுமார், கிளிநொச்சிக்குள் நுழைந்து சாதியத்தை தூண்டி அரசியல் செய்வது கிளிநொச்சியை அழிக்கும் பெரும் அபாயத்தைக் கொண்டது. தமிழகத்தைப்போல, மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி, அவர்களை மோதவிட்டு மோசமான அரசியலை செய்கின்ற சாதி அரசியலை இங்கும் கொண்டு வரப் பாக்கும் முயற்சி இது.

அண்மையில் கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபருடன் கிராமத்தில் உள்ள சிலர் முரண்பட்டுள்ளனர். அப் பாடசாலை ஆசிரியர் ஒருவரையும் தாக்கினர். அதற்கு ஆசிரியர் மாணவி ஒருவருடன் தவறாக நடக்க முயன்றார் என்று பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த பிரச்சினையின் பின்னால், பாடசாலை விளையாட்டுப் போட்டிக்கு சந்திரகுமாரை அல்லது அவரது ஆதரவாளர்களை அழைக்கவில்லை என்ற பழிவாங்கலே பின்னணியாக இருப்பதாக சொல்லப்படுகின்றது.

இப்போது அந்தப் பாடசாலையின் அதிபர் இடமாற்றம் பெற்று சென்றுவிட்டார். பொய்யான குற்றத்திற்காக, மிகவும் சிறந்தவொரு ஆசிரியரின் வாழ்வை பாழாக்க முயன்றமைக்காக ஏனைய ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை புறக்கணித்துள்ளனர். அப் பாடசாலையின் கல்வியும் அச் சமூகத்தின் பின்னடைவுக்கும் இந்த அடாவடி அரசியலே காரணம் என்பது பலரும் அறியாத உண்மையாகும். பள்ளிக்கூடங்களில் தம் சுயநலத்திற்காக அடாவடி அரசியலை செய்தால் அது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சமூகத்தின் முன்னேற்றத்தையும்தான் பாதிக்கும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்த சந்திரகுமார், ஈபிடிபியில் இருந்து வெளியேறி புதிய கட்சியை தொடங்குவதாக வேடமிட்டார். பிரிந்து தேர்தலில் நின்று வென்று பின்னர் ஒன்றாகலாம் என்பது ஈபிடியின் இரகசிய திட்டம் என்கிறார்கள். எனினும் கிளிநொச்சியின் டக்ளஸ் தேவானந்தாவாக மாறியிருக்கும் அவர், மகிந்த ராஜபக்ச தரப்பினருக்கு ஆதரவு வழங்குவதிலும் இன்னொரு டக்ளஸாகவே செயற்படுகிறார்.  இதன் ஒரு வெளிப்பாடாகவே, கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி ஆனதுடன், சந்திரகுமார் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2015இற்கு முன்னர் முன்னெடுத்த டக்ளஸின் இணக்க அரசியலே இது. ஈபிடிபியுடன் பிரிந்ததைப் போல வெளியில் காட்டிக் கொண்டு கிளிநொச்சி மக்களின் வாக்குகளை பிரித்து பாராளுமன்ற உறுப்பினராகி, டக்ளஸ் தேவானந்தாவுடன் மீண்டும் அரசுக்கு ஆதரவு வழங்குவதே இவரது நோக்கம். அண்மையில் காணாமல் போன மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திரகுமார். மக்களை காணாமல் ஆக்கிய தரப்பின் பங்காளியாக இருந்துவிட்டு இடையில் மக்களின் போராட்டக் களத்தில் முகம் காட்டிவிட்டு இப்போது பழைய கூட்டில் இணைந்துள்ளார். 

அத்துடன் முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்படவில்லை, இலங்கை அரசு போர்க்குற்றம் செய்யவில்லை என்று தெரிவித்து கடந்த 2013ஆண்டில்  அரசாங்கத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியில் சந்திரகுமார் செய்த ஆர்ப்பாட்டத்தை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். இனப்படுகொலை மற்றும் போர் குற்றத்திற்கு எதிராக ஐ.நா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு சார்பாகவுமே அந்த ஆர்ப்பாட்டத்தை சந்திரகுமார் செய்திருந்தார்.

அரசுக்கு எதிராக இயங்கும் செயற்பாட்டாளர்களை  மிரட்டுதல், ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களை மிரட்டுதல், அவர்களை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறுப் பதிவுகளை பரப்புவது போன்ற அடாவடிகளை  தனக்கு கீழ் குழுவொன்றை வைத்து சந்திரகுமார் செய்து வருகிறார். தனது பதவி ஆசைக்காக அடாவடி அரசியலில் கிளிநொச்சியை பலியாக்க முனைகின்ற சந்திரகுமாரின் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும். இத்தகைய முனைப்புக்களை முற்றாக முறியடிக்க வேண்டும். 

கிளிநொச்சிக்கு என ஒரு அடையாளம் இருக்கின்றது. தனித்துவமும் வரலாறும் இருக்கின்றது. அதனை பாதுகாக்க வேண்டும். போராளிகள் கற்றுத் தந்த ஒழுக்கத்தையும் அறத்தையும் ஜனநாயகத்தையும் பேண வேண்டும்., பின்பற்ற வேண்டும். அதனை முன்னெடுக்கின்ற புதிய அரசியல் சூழல் தற்போது உருவாகியிருக்கின்றது. அச்சுறுத்தும், மிரட்டும், அடாவடி அரசியலுக்கு இடமளிக்காமல், நீதியின் பக்கம், கல்வித் திறனின் பக்கம் மக்கள் செல்ல வேண்டும்.

நற்பெயரும் நல்லொழுக்கமும் கொண்ட அரசியலை கிளிநொச்சியில் முன்னூதாரணமாக்குவதன் வாயிலாக அதனை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பரவச் செய்ய வேண்டும். அத்தகையதொரு சமூகமாக நாம் மாறுவது, சர்வதேச ரீதியாக எமது இன அழிப்புக்கும் நீதிக்குமான பொறுப்புகூறலுக்கும் மதிப்புக்கும் இடமளிக்கும். இதில் கிளிநொச்சி எதிரிகளின் துரோகிகளின் அரசியல் சூழ்ச்சிகளை வென்று முன்னுதாரணமான நகரமாக பெயர் பொறிக்க வேண்டும்.

தமிழ்க்குரலுக்காக மலையவன்

( இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம் )