இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஸ்டாலின் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – வேலுசாமி இராதாகிருஸ்ணன்

Radha
Radha

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் தீர்வை வழங்க ஒத்துழைக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி சுமார் 150 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி அமைய உள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்த வெற்றி இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள வெற்றியாக அமையும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இலங்கையின் தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோகணேசன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் போன்றவர்கள் தங்களது வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்துள்ளனர்.

அத்துடன் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கடற்றொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையின் வடக்கு மாகாண கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு அவர் தீர்வு வழங்குவார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.