எங்கள் பிரதேச வீரர்களை நாங்கள் அடையாளப்படுத்த வேண்டும்- செ.மயூரன்

senthilnadhan 720x450 1 696x435 1
senthilnadhan 720x450 1 696x435 1

எங்கள் பிரதேச விளையாட்டு வீரர்களை எங்களுடைய பிரதேசங்களிலே உருவாக்கி நாங்களே அடையாளப்படுத்த வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார்.

வவுனியாவில் சிறிநகர் மக்களின் 25 வருட கோரிக்கையாக இருந்த விளையாட்டு மைதானம்  திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

மக்களாகிய எங்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது என்பது மிக அரிதாகவே காணப்படுகின்றது. இங்கே விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கான மைதானத்தை பெற்றுக்கொள்ள 25 வருடங்களாகி இருக்கின்றது. 
ஆனால் தெற்கிலே இருக்கின்ற ஒரு சிங்கள பாடகி ஒரே ஒரு பாடலை பாடிவிட்டு இன்று கொழும்பிலே ஒரு வீட்டை பெற்றிருக்கின்றார். ஜனாதிபதி என்ற முறையில் ஒரு பாராட்டை தெரிவித்திருக்கலாம் ஆனால் வீட்டை கொடுத்திருக்கின்றார்கள்.

 நாங்கள் 25 வருடங்களாக எங்களுக்கு ஒரு மைதானத்தை பெற்று கொள்வதற்கும், எங்களுடைய சொந்த காணிகளை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றவர்களை வெளியேற்றுவதற்கும் நாங்கள் இன்னும் போராடி கொண்டிருக்கின்றோம். 
ஆனால் எங்களுடைய தேவைகள் அவர்களுக்கு சாதாரணமாக கிடைத்து விடுவதனால் எங்களுடைய பிரச்சினைகளும், எங்களுடைய இயக்கங்களும் சிங்கள மக்களுக்கு தெரியவில்லை என்பதுதான் யதார்த்தம். 

அந்த விதத்திலே எங்களுடைய விளையாட்டு வீரர்களை எங்களுடைய பிரதேசங்களிலே இருந்து உருவாக்கி அவர்களை நாங்களே அடையாளப்படுத்த வேண்டும். 

சில நாட்களுக்கு முன்னர் மன்னார் மாவட்டத்திலே உலகமே போற்றுகின்ற பியூஸ்லஸ் என்கின்ற கால்பந்தாட்ட வீரன் மரணமடைந்த பின்புதான் அவ்வாறான ஒரு வீரன் மன்னார் மாவட்டத்திலே இருந்திருக்கின்றான் என்பது எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாது. ஆனால் எனக்கு தெரியாது. அது எங்களுடைய பலவீனம். அந்த விளையாட்டு வீரனுடைய மரண சடங்கிலேதான் அவன் எவ்வளவு தூரம் அர்ப்பணிப்பாக அந்த விளையாட்டு துறைக்கு சேவையினை செய்திருக்கின்றான் என்பதனை பார்க்கக் கூடியதாக இருந்தது.

ஆனால் நாங்கள் அந்த வீரனை உயிரோடு இருக்கின்ற போது தூக்கி கொண்டாடவில்லை. அவன் மரணமடைந்த பின்புதான் அவ்வாறான ஒரு வீரனை அடையாளம் காணக்கூடிய சந்தர்ப்பம் கூட கிடைத்திருக்கின்றது. 
அதனாலேதான் கூறுகின்றேன். எங்களுடைய பிரதேசங்களிலே இருக்கின்ற வீரர்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கான தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்து அவர்களுக்கான தேவைகளை உருவாக்குவோம் என்று கூறிக் கொண்டு இந்த சிறிநகர் விளையாட்டு கழகம் என்பது இவர்களுடைய வரலாற்றிலே, போராட்டத்திலே முக்கியமான ஒரு தருணமாக இங்கு காணக்கூடியதாக இருக்கின்றது.

பெரியவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகள், சின்னஞ்சிறார்கள் அனைவரும் ஒருமித்த இந்த மைதானத்திலே இருந்து பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இவர்களுடைய ஒற்றுமையை நாங்கள் உணரக்கூடியதாக இருக்கின்றது. இந்த ஒற்றுமை நீண்ட காலம் நிலைக்க வேண்டும். இந்த மைதான ஆரம்ப நிகழ்வு என்பது இன்றோடு முடிந்து விடாது இங்கிருந்து பல வீரர்களை உருவாக்க வேண்டும் அவர்களது கனவுகளுக்கு உரமளிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார் .