தனியார் ஊடகங்களைக் கட்டுப்படுத்த விசேட சட்டம்

5 d 1
5 d 1

தற்பொழுது நாட்டிலுள்ள தேர்தல் சட்டத்தின் கீழ் தனியார் ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்களை மட்டுமே வழங்க முடியுமெனவும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாதிருப்பதாகவும்  தேர்தல்கள்  ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் அரச, தனியார் ஊடகங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய விதத்தில் புதிய சட்டத் திருத்தங்களை கொண்டுவருவது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று கூடி  ஆராய்ந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின்போது இது விடயத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவேண்டியதன் அவசியத்தையும் நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சகல ஊடகங்களும் நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்திய ஆணைக்குழுத் தலைவர் இதற்கமைய சட்டத்தில் முழுமையான திருத்தங்களைச் செய்து ஒழுக்க விதிக் கோவையை தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக்கொண்டதன் பின்னர் அமுலாக்கக்கூடியதாக இருக்கும் எனவும் அனைத்து ஊடகங்களுக்கும் பொதுவான ஒழுக்க விதிக்கோவையை தயாரிப்பதே ஆணைக்குழுவின் நோக்கமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.