அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்

f
f

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். அதேபோன்று எந்ததொரு குற்றமும் புரியவில்லை என அறியப்படும் இராணுவத்தினரையும் விடுதலை செய்ய வேண்டும்.

இல்லாவிடின் இது எக்காலத்திலும் முக்கியதொரு பிரச்சினையாக தொடர்ந்து வரும். இதேவேளை அரசியல் கைதியான சுதாகரனின் பிள்ளைகள், பாசமான தனது தாயை இழந்து அவரது பாட்டியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் இவர்களுக்கு வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு எந்ததொரு வழியும் இல்லை. இந்த இரண்டு பிள்ளைகளும் கல்வியை தொடருவது கூட இந்த வறுமையின் மத்தியில் என்பதை புரிந்துகொள்ள கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு பெரும்பாலான குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றன.

எனவே யுத்தம் நிறைவுபெற்று பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், அனைத்து அரசியல் சிறைக்கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நாம் உள்ளோம்.

இனவாதம், மதவாம் என்றதன் அடிப்படையில் மக்களுக்கு நாம் சேவையாற்றவில்லை. நான் யாழிற்கு வந்து இங்குள்ள மக்களை சந்தித்த பின்னர்தான் பல குடும்பங்கள் இன்னும் இன்னலில் காணப்படுவதனை எம்மால் ழுமுமையாக உணர முடிகின்றது.

அதேபான்று தெற்கிலும் யுத்தத்தில் உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்பங்கள் பல வறுமையில் உள்ளன.

எனவே இருதரப்பினருக்கும் உரிய தீர்வை எமது புதிய அரசாங்கத்தில் நிச்சயம் பெற்றுக்கொடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.