குசனார் மலை ஆலய தொல்பொருள் திணைக்கள பிரச்சனைக்கு தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதியளித்த வியாழேந்திரன்!

WhatsApp Image 2020 12 13 at 17.04.33
WhatsApp Image 2020 12 13 at 17.04.33

மட்டக்களப்பு கரடியனாறு குசனார் மலை ஆலய தொல்பொருள் திணைக்களம் தொடர்பான பிரச்சனைக்கு சுமூகமான தீர்வை நிச்சயமாக பெற்றுக் கொடுப்பேன் என இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் கரடியனாறு குசனார் மலை ஆலயத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (13) சென்று பார்வையிட்டு ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் எதிர்நோக்கியுள்ள பிரச்சனை, நூற்றுக்கு மேற்பட்ட இடங்கள் தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்திலே சில வணக்க தலங்கல் தொல் பொருளுக்குள் சென்றுள்ளது.

அவ்வாறே திருக்கோணேஸ்வரம் தொல்பொருளுக்குள் சென்றது அதுபோன்று பல இடங்கள் தொல் பொருளுக்கு அடையாளப்படுத்தப்பட்டபோது அதற்கு எதிராக நாங்கள் குரல்கொடுத்தோம்.

ஆனால் அந்த வேலைத்திட்டத்தை கடந்த அரசாங்கம் முன்னெடுக்கும் போது கடந்த அரசாங்கத்தை பாதுகாத்துக் கொண்டிருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சம்மந்தன் ஜயா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த நேரத்தில் எவ்வளவோ பிரச்சனைகளை தடுத்து நிறுத்தியிருக்கலாம் தீர்வும் கண்டிருக்கலாம்.

அப்போதைய காலகட்டத்தில் எங்களுடைய தேவைப்பாடு அரசாங்கத்திற்கு இருந்தது அவர்கள் நினைத்திருந்தால் அரசாங்கம் வீட்டிற்கு சென்றிருக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் கடந்த காலத்தில் கிடைத்தது எது எவ்வாறாக இருந்தாலும் அந்த காலகட்டத்திலே நாங்கள் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சுழற்சி முறை போராட்டங்கள் என பல போராட்டங்களை முன்னெடுத்தபோது இப்போது வாய்திறக்கின்ற பலரது தலைமுடி கறுப்பை கூட காணவில்லை.

தொல்பொருள் தொடர்பான பிரச்சனை பங்குடாவெளியில் இடம்பெற்றபோது கறுத்த வானுக்குள் வானின் கண்ணாடியை மூடிவிட்டு பல மக்கள் பிரதிநிதிகள் பறந்து சென்றார்கள் ஆனால் நாங்கள் அன்று பேசியபடியினால் கரடியனாறு காவல்துறையில் எனக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை போராட்டத்திற்கு தீர்வு பெற்றுக் கொடுத்தோம். எத்தனை போராட்டங்கள், உண்ணாவிரதம் எதுலுமே பங்கு கொள்ளாத பலர் இப்போது கோமா நிலையில் இருந்து விழித்துக் கொண்டு செவ்வாய்க்கிரகத்தில் இருந்து இப்போது பூமிக்கு வந்தவர்கள் போல எங்க பிரச்சனை இருக்கோ அதைவைத்துக் கொண்டு அரசியல் செய்ய நினைக்கின்றார்கள்.

எமது மக்கள் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பல பாதிப்புக்களை சந்தித்த மக்கள் அடிமேல் அடி வாங்கிய மக்கள் மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்தது என்பார்கள் அதற்கு மேல் ஒரு படியாக யானை மிதித்தது.

கடந்த ஆட்சிக்காலத்தில் கூட யானை தான் மிதித்தது இந்த சூழலில் எமது மக்களுக்கு தேவை பிரச்சனையல்ல பிரச்சனைக்கான சுமூகமான தீர்வு. தீர்வை பெற்றுக் கொடுப்பது தான் எமது தலைமையின் தார்மீக பொறுப்பு நாங்கள் வாய்ச் சொல் வீரர்களாக இருக்க கூடாது அடுத்த தலைமுறையை பாதுகாக்கும் செயல் வீரர்களாக இருக்கவேண்டும் அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

வனஇலாக, வனஜீவராசி, தொல்பொருள், மகாவலி என்று எமது மக்கள் பாரம்பரியமாக பூர்வீகமாக, தலைமுறை தலைமுறையக வாழ்ந்த பகுதிகள் வாழ்வாதார காணிகள், குடியிருப்பு காணிகள், இவற்றை குறிப்பிட்ட திணைக்களங்கள் கொழும்பில் இருந்து கொண்டு எல்லைக் கற்களையிடும்போது தான் மக்கள் மத்தியிலே முரண்பாடு உருவாகின்றது.

இந்த கரடியன்குளம் குசனார் மலை அருகிலே இருந்து எனது ஆரம்ப கல்வியை வேப்பைவெட்டுவான் அரசினர் கலவன் பாடசாலையில் கற்றவன் நான். இங்கு அதற்கு முன்னர் எத்தனையே தலைமுறைதாண்டி மக்களுடைய வழிபாடு இடம்பெற்று வருகின்ற ஆலயம்.

எனவே அப்போது இல்லாத இந்த திணைக்களங்கள் இங்கு எல்லை கற்களையிட்டு பிரச்சனை வருகின்றது. கடந்த வனஇலாக சுற்றாடல் சம்மந்தமான அமைச்சர்களின் விவாதத்தின்போது நான் முன்வைத்தது எந்த திணைக்களமாக இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் இருக்கின்றது இவர்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் அதனை விடுத்து திடீரென வந்து கிராம மட்டத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அங்கு முரண்பாடுவருகின்றது என தெரிவித்தேன்.

அப்போது அமைச்சர் சீதரட்ணாயக்கா மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயற்படுவோம் என தெரிவித்தார். எனவே நாங்கள் பிரச்சனைக்கு இராஜதந்திரமாக தீர்வு காணவேண்டும். சத்தம்போட்டு கத்துவதால் பிரச்சனைக்கு தீர்வு இல்லை சத்தம் போட்டு கத்துபவர் பிரபலமாகலாம் முகநூலில் வீடியோவை போடுவது ஆயிரக்கணக்கில் கருத்துவரும் ஆனால் இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வை எடுத்துக் கொடுத்தோம்
அந்த தீர்வை பெறாமல் கால காலமாக வேதனை அடையபோவது மக்கள் தான். பிரச்சனையை கையில் எடுத்தால் அதனை வளர்க்க கூடாது அதற்கு தீர்வு எடுத்து கெடுக்கவேண்டும். தீர்வு தான் இங்கு வேண்டும்.

இப்போது அரசாங்கத்தில் இருக்கின்றோம் என்பதற்காக எங்களை இந்த நிலைக்கு கொண்டுவந்த மக்களை மறந்து செயற்படுபவர்கள் அல்ல. இந்த மக்களின் பிரச்சனைக்கு தீர்வை எடுத்து கொடுப்பதுடன் மக்களின் தேவைகளை நிறைவேற்றுபவர்களாக நாங்கள் மாறவேண்டும்.

அந்த அடிப்படையில் இன்று குசனார் மலை கோயில் நிர்வாகம் கன்னியமான ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளனர். உண்மையாக ஏற்றுக் கொள்ளக்கூடியது நாங்கள் காலகாலமா வழிபட்டுவரும் வழிபாட்டில் வழிபட்டு வரவேண்டும். மலை அடிவாரத்தில் உள்ள ஆலயம் தொல் பொருளில் அடையாளப்படுத்தக் கூடாது.

தொல்பொருளை மற்றும் வனத்தை, அரச வளத்தை பாதுகாத்த பெருமை எமது மக்களைச் சாரும் எனவே அவ்வாறான மக்கள் மீது இவ்வாறான திணிப்புக்களை திணைக்களங்கள் செய்யக்கூடாது. ஆகவே நாங்கள் சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் திணைக்களங்களுடன் பேசியிருக்கின்றோன் நிச்சயமாக இதற்கு சுமூகமான தீர்வை பெற்றுத்தருவேன் என ஆலைய நிர்வாகத்திடம் வாக்குறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.