நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

realistic coronavirus background 52683 35109
realistic coronavirus background 52683 35109

இலங்கையில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 38000 ஐ கடந்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 428 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 38050 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 392 பேரும், சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 35 பேரும் அடங்குவதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 381 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் நாடு திரும்பிய ஒருக்கும் கொவிட்19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

8,576 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம், நேற்றைய தினம் 618 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்தனர்.

இதன்படி, நாட்டில் இதுவரையில் 29300 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.