முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

IMG 6875
IMG 6875

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் அவர்களின் ஏற்பாட்டில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் நேற்று மாந்தை கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள், திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த வருடம் (2019) டிசம்பர் மாதம் இடம்பெற்ற மாந்தை கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் பின்னர் ஒருவருடம் கடந்த நிலையில் குறித்த மாந்தை கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் வீதி, போக்குவரத்து, சுகாதாரம், மீன்பிடி, விவசாயம், கல்வி, சிவில் நிர்வாகம், வீட்டுத்திட்டம், காணி, பொது உட்கட்டமைப்பு வசதிகள், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேசத்தை பொறுத்தவரை கல்வி ,சுகாதாரம் போன்ற துறைகளுக்கு பல்வேறு வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதும் குறித்த பகுதிகளில் பணியாற்ற யாரும் வருகிறார்கள் இல்லை என சுட்டிக்காட்டி அதற்கான பிரதானமான காரணமாக வீதிகள் சீரின்மை போக்குவரத்து வசதிகள் இன்மை என்பன சுட்டிக்காட்டப்பட்டது.

அதனைவிட சுகாதார துறையில் பதில் கடமை ஆற்றுபவர்களுக்கான பகுதி நேரக்கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை எனவும் இதனால் அவர்கள் பதில் கடமையை நிறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனைவிட குறித்த பகுதிக்கு அதிகாரிகள் வருகைதரு மறுப்பதால் அதி கஸ்ர பிரதேச விசேட கொடுப்பனவு திட்டங்களை அறிமுகப்படுத்தினாலே அதிகாரிகள் இந்த பகுதிக்கு வருவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இதனைவிட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.