இந்தியாவினால் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதற்காக அதனைத் தொடர வேண்டுமென்ற அவசியமில்லை- சரத்பொன்சேகா!

625.500.560.350.160.300.053.800.900.160.90
625.500.560.350.160.300.053.800.900.160.90

மாகாணசபைகள் முறைமை இந்தியாவின் தலையீட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டமைக்காக அதனைத் தொடரவேண்டும் என்ற அவசியமில்லை.

ஆனால் மாகாணசபைகள் முறையாக செயற்படுத்தப்பட்டு, அந்தந்தப் பதவிகளுக்கு தகுதிவாய்ந்த மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்களாயின் நாட்டின் அரசியலில் மற்றொரு முக்கிய அத்தியாயம் உருவாகக்கூடும்.

எனவே இதுதொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு கலந்துரையாடலைத் தோற்றுவித்து, அவர்களின் அபிப்பிராயங்களின் அடிப்படையிலேயே மாகாணசபை முறைமை அவசியமா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

புதியதொரு வருடம் ஆரம்பமாகியிருக்கின்றது. எனினும் கொரோனா வைரஸ் பரவலின் விளைவாக பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கேனும் முன்வரவில்லை. கடந்த அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்நின்று செயற்பட்டவர்கள் கூட, பின்னர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

எனவே புதியதொரு கொள்கை மற்றும் செயற்பாட்டு ரீதியான மாற்றங்களை எதிர்பார்த்தே மக்கள் தற்போதைய அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைத்தார்கள்.

இந்நிலையில், நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கு அவசியமான பங்களிப்பை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

மேலும் மாகாணசபைத் தேர்தல்களைப் பொறுத்தவரையில், மக்கள் மாகாணசபைகளின் மீது விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். அவற்றை அவர்கள் ‘வெள்ளை யானை’ என்றே வர்ணிக்கின்றார்கள். ஆகவே தேர்தல்களை நடத்துவதாயின், மக்களின் அபிப்பிராயம் தொடர்பிலும் அவதானம் செலுத்தவேண்டும்.

அதேபோன்று மாகாணசபைகள் முறையாக செயற்படுத்தப்படுமாயின், அந்தந்தப் பதவிகளுக்கு தகுதிவாய்ந்த மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்களாயின் நாட்டின் அரசியலில் மற்றொரு முக்கிய அத்தியாயம் உருவாகக்கூடும்.

அதுமாத்திரமன்றி மத்திய அரசாங்கத்தை விடவும் மாகாணசபைகளால் மிகவும் அடிமட்டத்திலிருந்து செயற்பட முடியும்.

எனினும் சில சந்தர்ப்பங்களில் மாகாணசபை முறைமை என்பது நாட்டில் இன, மதவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்போருக்கு வாய்ப்பாக அமையக்கூடும்.

இம்முறைமையில் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. எனவே இவ்வனைத்து விடயங்கள் தொடர்பிலும் நன்கு சிந்தித்து மாகாணசபை முறைமை அவசியமா? என்பது பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவினால் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டமைக்காக அதனைத் தொடரவேண்டும் என்ற அவசியமில்லை. எனவே இதுகுறித்த மக்கள் கலந்துரையாடலொன்றை உருவாக்கி, தீர்மானம் எடுப்பதே சிறந்ததாகும்.

எதுஎவ்வாறெனினும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு முன்னர் எந்தவொரு தேர்தலை நடத்துவதும் உகந்ததல்ல என்பதே எனது நிலைப்பாடாகும்.

இப்போது தனிப்பட்ட அரசியல் நலன்களை அடைதல் மற்றும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளல் என்பவற்றுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கக்கூடாது.

மாறாக தொற்றுநோய் நெருக்கடியிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதைப் பொறுத்தவரையில் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்திருக்கிறது என்றே கூறவேண்டும். வைரஸ் பரவலின் முதலாவது அலையை மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்த முடிந்தது.

எனினும் இரண்டாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும்கூட, அரசாங்கம் அதற்குத் தயார் நிலையில் இருக்கவில்லை. ஆகவே அரசாங்கத்தின் கவனயீனத்தினாலேயே இரண்டாவது அலை ஏற்பட்டது என்ற எண்ணம் மக்களிடமுள்ளது.

அடுத்ததாக நாட்டின் தேசிய சொத்துக்கள் மற்றும் துறைமுகங்கள் தொடர்பில் மக்களுக்கு ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை மீறியே, தற்போதைய அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

கொழும்புத்துறைமுகத்தின் கிழக்குமுனையம் என்பது எமது நாட்டைப்பொறுத்தவரையில் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர மையமாகும். அதனை இந்தியாவிற்கு வழங்குவதை மிகமோசமான செயற்பாடு என்றே கூறமுடியும். இத்தகைய செயற்பாடுகளுக்கு பதில்கூறவேண்டிய நிர்பந்தம் அரசாங்கத்திற்கு விரைவில் ஏற்படும்எனவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார்