இந்தியாவின் அவசரத்துக்காகத் தேர்தலை நடத்த முடியாது! – மஹிந்த அணி சண்டித்தனம்

92f21295 ryr
92f21295 ryr

இந்தியாவின் அவசரத்துக்காக மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

மாகாண சபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சியினர் குறிப்பிடும் கருத்துக்கள் அவர்களின் குறைகளை மறைத்துக்கொள்ளும் வகையில் உள்ளது. மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கும், அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

மாகாண சபைத் தேர்தல் முறைமையை நீக்கி புதிய தேர்தல் முறைமையை கடந்த அரசு அறிமுகப்படுத்தியது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் அப்போதைய அரசு தோல்வியடைந்ததால் மாகாண சபைத் தேர்தலை நடத்த எவ்வித நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கவில்லை.

கடந்த அரசு எல்லை நிர்ணய அறிக்கையைக்கொண்டு வந்து அதை மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வேண்டுமென்றே தோற்கடித்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சிக்கல் நிலையை ஏற்படுத்தித் தேர்தலைக்   காலவரையறையின்றி பிற்போட்டுள்ளது.

நல்லாட்சி அரசு தேசிய பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மாத்திரமல்ல மக்களின் ஜனநாயக உரிமையையும் பலவீனப்படுத்தியுள்ளது. ஆகவே, மாகாண சபைத் தேர்தல் குறித்து கருத்துரைக்கும் தார்மீக உரிமை கடந்த அரசின் உறுப்பினர்களுக்குக் கிடையாது.

ஐக்கியக் தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முறையற்ற செயற்பாடுகள் அனைத்துக்கும் மூல காரணமாகும்.

மாகாண சபை முறைமையை நீக்க வேண்டும் என்பது தற்போதைய அரசின் நோக்கமல்ல. தேர்தலைப் பழைய முறையிலும், புதிய முறையிலும் நடத்த முடியாத நெருக்கடி நிலை காணப்படுகின்றது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவது  அரசின் பொறுப்பாகும். ஆனால், இந்தியாவின் அவசரத்துக்காக தேர்தலை விரைவாக நடத்த முடியாது. தேர்தல் திருத்த முறைமை குறித்து அரசு உரிய கவனம் செலுத்தியுள்ளது – என்றார்.