கொவிட்டில் மரணிப்பவர்களை தகனம் செய்வதே தொழிநுட்ப குழுவின் பரிந்துரை – சுகாதார அமைச்சர்

z P01 WP
z P01 WP

கொவிட்டில் மரணிப்பவர்களை தகனம் செய்வதே தொழிநுட்ப குழுவின் பரிந்துரை. அதனை நாங்கள் மாற்றமாட்டோம். அத்துடன் அடக்கம் செய்யலாம் என தெரிவித்து அறிக்கை கையளித்தகுழு உத்தியோக பூர்வமற்ற குழுவாகும். என்றாலும் அவர்களின் அறிக்கையை ஆராய்வதற்காக பிரதான குழுவுக்கு சமர்ப்பித்திருக்கின்றோம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.  

நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் கஜேந்திர குமார் பொன்னம்பலம், கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் மற்றும் தகனம் செய்வது தொடர்பில்  ஏற்கனவே நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்த கேள்விக்கு  சுகாதார அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதா தகனம் செய்வதா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தொழிநுட்ப குழுவொன்றை அமைத்திருந்தோம். அதன் பரிந்துரையாக இருப்பது,  கொவிட்டில் மரணிப்பவர்களை தகனம் செய்யவேண்டும் என்பதாகும். 

அதனால் அந்த பரிந்துரையை நாங்கள் செயற்படுத்துகின்றோம். இந்த பயங்கரமான தொற்றுக்கு நாங்கள் முகம்கொடுக்கும்போது, இந்த விசேட பரிந்துரைகளை மத நோக்கத்துக்காகவோ வேறு தனிநபர்களின் தேவைக்கோ நாங்கள் மாற்றியமைக்கமாட்டோம் என்றார்.

இதன்போது எழுந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுகாதார அமைச்சினால் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி வைரஸ் தொடர்பான 11பேர் கொண்ட விசேட நிபுணர் குழுவொன்றை அமைத்திருந்தது. அந்த குழுவின் அறிக்கை தற்போது கையளிக்கப்பட்டிருக்கின்றது. அதில் கொவிட்டில் மரணிப்பவர்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வதற்கு தேவையான வழிகாட்டல்களை பரிந்துரை செய்திருக்கின்றது. ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை காலாவதியானதாகும். ஏனெனில் தற்போது வைரஸ் தொடர்பில் பல தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. அதனால் முதலாவது குழுவில் இருக்கும் வைத்தியர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் பவித்ரா தொழிநுட்ப குழுவில் 11பேர் இருக்கின்றார்கள் அவர்களில் தலைவராக வைத்தியர் சன்ன பெரேரா, வைத்தியர்களான ஆனந்த விக்ரம, ராஹேன் குரே, பீ.பி. தசநாயக்க, சிரானி சந்திரசிறி, மாலிக்கா கருணாரத்ன, துல்மினி குமாரசிங்ஹ, பிரபாத் சேனசிங்க, சியந்த அமரரத்ன, ஹசித்த திசேரா மற்றும் பேராசிரியை மெத்தினா விதானகே ஆகியோராவர்.

அத்துடன் வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவொன்று ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாந்துபுள்ளேயை சந்தித்து, இதுதொடர்பாக அவர்களின் தீர்மானத்தை கையளித்திருக்கின்றது.அந்த தீர்மானத்தை அவர் என்னிடம் கையளித்தார். குறித்த தீர்மானத்தை நாங்கள் பிரதான குழுவுக்கு சமர்ப்பித்திருக்கின்றோம். பிரதான குழுவில் இருந்து இதுவரை எந்த தீர்மானமும் எங்களுக்கு வரவில்லை என்றார்.

மீண்டும் எழுந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டிசம்பர் 24ஆம் திகதி சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு உப குழு. என்றாலும் பேராசிரியை ஜெனீபர் பெரேரா தலைமையில்  இருப்பவர்கள் அனைவரும் வைரஸ் மற்றும் வேறு துறைகளைச்சேர்ந்த விசேட நிபுணர்கள். உபகுழுவின் அறிக்கையை பிரதான குழுவுக்கு அனுப்பி அதனை பொருட்படுத்தாமல் இருப்பதற்காக முயற்சிக்கின்றீர்கள்?

அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் குழு உத்தியோக பூர்வமமற்ற குழுவாகும். சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளேயை அவர்கள் சந்தித்து பேசியே அறிக்கை தயாரித்து கைகயளித்திருக்கின்றனர். அவர்களின் அறிக்கையை பிரதான குழுவுக்கு அனுப்பி இருக்கின்றோம். அவர்கள் அதனை ஆராய்ந்து, ஒரு அறிக்கை ஒன்றை வழங்குவார்கள். அதனால் பிரதான குழுவின் பரிந்துரைக்கமையவே எங்களால் இந்த விடயத்தில் தீர்மானிக்க முடியும் என்றார்.

மீண்டும் எழுந்த கஜேந்திரகுமார், பிரதானகுழு இதுதொடர்பாக ஆராய்ந்து எப்போது அவர்களின் அறிக்கையை கையளிப்பார்கள் என்பதை அறிவிக்கவேண்டும். திகதி ஒன்று இல்லாமல் இதனை விடமுடியுமா?

அதற்கு சபாநாயகர் தெரிவிக்கையில், உங்களது கேள்வியில் திகதி கேட்டிருக்கவில்லை. அதனால் பிரதான குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்ததுடன் அதுதொடர்பில் அமைச்சர் சபைக்கு அறிவிப்பார் என்றார்.