வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்க்க விசேட பொறிமுறை அவசியம் – சஜித்

பிரேமதாச
பிரேமதாச

வீராப்புப் பேசி உலக நாடுகளைப் பகைத்துக்கொள்ளாமல், மதிநுட்பத்துடன் செயற்படும் பொறிமுறையை அரசு கையாள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“சர்வதேச சமூகத்துடன் இரு தரப்பு மற்றும் பலதரப்பு உறவுகள் பலப்படுத்த வேண்டும். அதன்மூலம் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இராஜதந்திர நடவடிக்கை அமைய வேண்டும்.

அதேவேளை, எமது நாட்டுக்குரிய தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுவதைக் கடுமையாக எதிர்க்கின்றோம். எனினும், நாட்டுக்குள் அபிவிருத்தி இடம்பெறுவதற்கு நேரடி வெளிநாட்டு முதலீடு அவசியம்.

எனவே, உள்நாட்டு வழங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கான உபாயமார்க்க பொறிமுறையை உருவாக்க முடியும்.

நாட்டின் தனித்துவம், இறையாண்மை ஆகியவற்றை பாதுகாத்துக்கொண்டு இதனைச் செய்ய முடியும். மாறாக இனவாதம், வீராப்புப் பேசி உலக நாடுகளைப் பகைத்துக்கொள்வதில் பயன் இல்லை.

எமது நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட முடியும். அதற்கு மதிநுட்பம் அவசியம். அதற்கான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது என தெரிவித்தார்.