உள்ளூர் மக்கள் எவருக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் இல்லை- வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Northern Province Health Services Director Dr.Ketheeswaran
Northern Province Health Services Director Dr.Ketheeswaran

“வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த சைப்ரஸ் நாட்டிலிருந்து வந்தவர்களுக்குத்தான் பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. உள்ளூர் பொதுமக்களிடம் ஏற்பட்ட தொற்றில் அந்த வகை வைரஸ் இல்லை. பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.”என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரிட்டனில் பரவிவரும் கொரோனா வைரஸின் அதிக பரிமாற்றத்தைக் கொண்ட பி 1.1.7 பரம்பரைக்கு சொந்தமான புதிய மாறுபாடு கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தொற்றாளர்களிடம் பெறப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளன என்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர், மருத்துவர் சந்திமா ஜீவந்திரா அறிவித்திருந்தார்.

அதுதொடர்பில் விளக்கமளிக்கையிலேயே வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார்.

“சைப்ரஸிலிருந்து வருகை தந்தோருக்கு பிரிட்டனில் பரவும் கொரோனா வைரஸின் பி 1.1.7 பரம்பரைக்கு சொந்தமான புதிய மாறுபாடு தொற்றுள்ளமை ஒருவாரத்துக்கு முன்பாக கண்டறியப்பட்டது.

அவர்கள் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அதனாலேயே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆய்வில் வவுனியாவும் உள்ளடங்குகிறது.

உள்ளூர் மக்கள் எவருக்கும் இந்தப் புதிய வகை வைரஸ் இல்லை என்று சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அதனால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.