எங்கள் நீதிகேட்கும் குரல் ஓய்வதாக இருந்தால் எங்கள் மூச்சு அடங்க வேண்டும்-வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி

160159222 423605875607021 1656376438837623766 n
160159222 423605875607021 1656376438837623766 n

வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசிடம் இருந்து எந்த நீதியை நாங்கள் எதிர்பார்க்க முடியும். காணாமல் போன உறவுகளைத் தேடும் நாங்கள் இன்று உணவு தவிர்ப்புப் போராட்டக் கூடாரத்தையும் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

159644897 466023198041444 2215547658304196216 n

சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம் முன்பாக நடைபெற்று வரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் 10ம் நாளான இன்று காவற்துறையினரால் கூடாரங்கள் அகற்றப்பட்ட போதிலும் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

இன்று 10ம் நாள். காவற்துறையினர் வந்து எங்கள் கூடாரங்களைக் கழற்றிச் சென்றுள்ளார்கள். நாங்கள் எங்களின் உறவுகளுக்காகவே வீதியில் இருக்கின்றோம். எங்களுக்காக லண்டனில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அம்பிகை அம்மணியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணமாகவும்இ எமது உறவுகளுக்கு நீதி கோரியுமே நாங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

கடந்த ஒன்பது நாட்களும் காவற்துறையினர் நீதிமன்றத் தடையுத்தரவினைக் காட்டி எம்மை அச்சுறுத்தினார்கள். ஆனால் அது உரியவர்களின் கைகளில் உரிய முறையில் கிடைக்கப்படவில்லை. நாங்கள் சட்டத்தை மீறி எதுவும் செய்பவர்கள் அல்ல. சட்டத்தை மதித்தே இங்கு போராட்டத்தில் ஈடுபடுகின்றோம். ஆனால் எவ்வித முன்னறிவித்தலும் இல்லாமல் இன்றைய தினம் எங்களது கூடாரங்களைக் கழற்றி எம்மை அச்சறுத்தியிருக்கின்றார்கள்.

இங்கு நீதி செத்துப் போயிருக்கின்றது. அநீதி தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. எமது பிரச்சனைகள் சர்வதேசத்தின் பார்வையில் பட வேண்டும் என்பதற்காக இருக்கவொன்னா சுடும் வெயிலிலும் எமது உறவுகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

159201912 840841196463917 7790206571387869161 n

பதினொரு வருடங்கள் கடந்து விட்டன. வீதி. மழை வெயில் தூசு அனைத்திலும் நாங்கள் போராடிப் பழக்கப்பட்டிருக்கின்றோம். இந்த அரசின் எவ்வித அச்சுறுத்தலுக்கும் நாங்கள் பயந்தவர்கள் அல்ல. எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை எங்கள் உறவுகளை மீட்கும்வரை நாங்கள் போராடிக் கொண்டே இருப்போம். இவ்வாறு அநீதி இழைப்பதற்குப் பதிலாக எங்களைச் சுட்டுக் கொன்றுவிட்டுப் போகலாம்.

நாங்கள் எவ்வித அநியாயத்திற்காகவும் போராடவில்லை. இங்கு மனித உரிமை சார்ந்து பலர் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்லுகின்றார்கள். ஆனால் இங்கு இடம்பெற்ற அநீதிக்கு நீதி கேட்பதற்கு யார் இருக்கின்றார்கள். அவ்வாறு அநீதிக்கான நீதியைக் கோர முடியாதவர்களா மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்? வீட்டில் இருந்தோ அலுவலகத்தில் இருந்தோ மனித உரிமைச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது. உரிய இடத்திற்கு வந்து எமது மக்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி கேட்க வேண்டும். ஏன் அனைவரும் மௌனித்துள்ளீர்கள்?

எமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எங்கே? எங்களது உறவுகளுக்காக எமது உரிமைகளைக் கேட்பதற்காக தெருவில் இருப்பதற்குக் கூட சுதந்திரம் இல்லாமல் நாங்கள் இருக்கின்றோம். எங்கே எமதுநாடாளுமன்ற உறுப்பினர்கள்? வீதியில் நாங்கள் பெண்கள் கண்ணீருடன் போராடிக் கொண்டிருக்கின்றோம். தமிழன் என்று சொல்லும் வீரவசனங்கள் எங்கே? இன்று எங்கள் உரிமைகளைக் கேட்கும் இந்த இடத்தில் உங்கள் வீரவசனங்கள் எங்கே?

நாங்கள் யாரின் தலை மேலேயும் ஏறி இருக்கவில்லை யாருக்கும் இடையூறும் செய்யவில்லை. இது எங்கள் நாடு என்று சொன்னால் இந்த வீதியில் இருக்கும் உரிமை எங்களுக்கு உண்டு. வீதியில் இருக்கும் உரிமையே இல்லை என்றால் இந்த இலங்கை அரசிடம் இருந்து எந்த நீதியை நாங்கள் எதிர்பார்ப்பது. எங்களுடைய மக்கள் பிரதிநிதிகளும் கண்ணை மூடிக் கொண்டு இருக்கின்றார்கள். மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என்று சொல்லுபவர்களும் மௌனமாக இருக்கின்றார்கள்.

எமது அன்னை பூபதியை இழந்தது போல் இன்று அம்பிகையை இழக்கக் கூடாது என்பதற்காவே நாங்கள் இவ்விடத்தில் இருக்கின்றோம். இந்த அரசு எவ்வளவுதான் அடக்கினாலும் எமக்குத் தீர்வு கிடைக்கும் வரை வீதியில் இருந்து அல்ல எங்கள் உயிர் போனாலும் எங்கள் நீதிகேட்கும் குரல் ஓயப்போவதில்லை. இது ஓய்வதாக இருந்தால் எங்கள் மூச்சு அடங்க வேண்டும்.

அனைத்து சர்வதேச நாடுகளும் எமக்கு இடம்பெறும் அநீதிகளைஇ நாங்கள் படும் வேதனைகளைக் கண்ணுற்றுப் பாருங்கள். பார்த்து எமக்கான நீதி கிடைப்பதற்கு எல்லோரும் ஒன்று கூடி எமது பிரச்சினைகளைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்த்து எமக்கான நீதி கிடைப்பதற்குரிய வழியைத் தாருங்கள்.

காணாமல் போன உறவுகளைத் தேடும் நாங்கள் இன்று உணவு தவிர்ப்புப் போராட்டக் கூடாரத்தையும் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மக்கள் பிரதிநிதிகள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என்று சொல்லுபவர்கள் இந்த இடத்திற்கு வந்து அரசையும் நீதித் துறையையும் கேள்வி கேட்க வேண்டும்.

நீதித்துறை என்து தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதி என்று செயற்படக் கூடாது. அனைவருக்கும் ஒரே நீதியாக இருக்க வேண்டும். இது பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கான போராட்டம் மாத்திரமல்ல இனிவரும் காலங்களில் எமது சந்ததிகளும் வீதிகளில் இருக்கக் கூடாது என்பதற்கான போராட்டமுமாகும். இதனை இளைஞர்களும் உணர வேண்டும். இந்தப் போராட்டத்திற்கு இளைஞர்களும் வருகை தந்து வலுச் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.