அடுத்த ஜனாதிபதி சஜித்! – திஸ்ஸ அதீத நம்பிக்கை

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்கி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தற்போதே ஆரம்பித்துவிட்டோம்.என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாம் மீண்டும் எமது வெற்றிப் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம். எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதோடு சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்குவோம். தேர்தலில் வெற்றிபெறக்கூடியவாறு கீழ்மட்டத்திலிருந்து தேசிய ரீதியில் செயற்திட்டங்களை உருவாக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கிராமிய ரீதியில்  ஐக்கிய மக்கள் சக்தியை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து மக்களின் தலைவரான சஜித் பிரேமதாஸ தலைமையில் ஆட்சியமைக்க வேண்டும். எமது குறைபாடுகளைச் சரி செய்துகொண்டு முன்நோக்கிப் பயணிப்பதொன்றே தற்போதைய நோக்கமாக உள்ளது.

அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, அவர் அரசியல் பயணத்தை ஆரம்பித்த விதம் தொடர்பில் கூறினார். அவர் அரசியலுக்குள் பிரவேசித்தபோது எதிர்கொண்ட சவால்கள் மற்றும் தோல்விகள் தொடர்பில் பகிர்ந்துகொண்டதுடன் தனது தொடர்ச்சியான முயற்சியால் வெற்றிபெற்று, பாகிஸ்தானின் பிரதமராகத் தெரிவானது பற்றியும் குறிப்பிட்டார். எனவே நாமும் அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு எமது இலக்கை அடைந்துகொள்வதற்கு முன்நோக்கிப் பயணிப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் – என்றார்.