ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலேயே முன்னாள் ஆளுநர் அஸாத் கைது – அமைச்சர் வீரசேகர தெரிவிப்பு

sarath Weerasekara 300x200 1
sarath Weerasekara 300x200 1


உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பு, கொலன்னவை பிரதேசத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துக் கூறும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மாவனெல்லை புத்தர் சிலை உடைப்புக்கும், வேறு சில செயற்பாடுகளுக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அஸாத் ஸாலி தொடர்புடையவர் என்ற விடயம் தெரியவந்துள்ளது.

ஷரிஆ சட்டம் மற்றும் நாட்டு சட்டம் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்து அடிப்படைவாதத்தை தூண்டக் கூடியது மற்றும் பயங்கரவாதத்துக்கு வழிவகுக்கக் கூடியதாக இருந்தது. இதனால் அவர் கைதுசெய்யப்பட்டார்.

எனவே, தடுப்புக் காவலில் வைத்து அவரை விசாரிக்கும்போது இந்த உண்மைகள் வெளிவரும்” – என்றார்.

இதேவேளை, அஸாத் ஸாலியைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்தால் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.