தமிழக தேர்தல் களத்தில் ‘தமிழீழம்’ பிரசாரம் உச்சம் அரசுக்கு பிரச்சினை இல்லை -சுசில் பிரேமஜயந்த

OIP 4
OIP 4

தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் தமிழீழம் தொடர்பாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை அதிகளவு கவனமெடுக்கும் தேவை இலங்கை அரசுக்கு இல்லை என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையில் பா.ஜ.க. கிளையொன்று திறக்கப்படவுள்ளது எனவும், ஈழ தேசம் உருவாக்கப்படவுள்ளது எனவும் தமிழக தேர்தல் களத்தில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் அரசின் கருத்து என்னவென்று ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,

தமிழக தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர்களின் விவகாரம் பிரதான பிரசார அம்சமாக இருந்தாலும், தேர்தலைத் தொடர்ந்து அவர்கள் அதனை மறந்து விடுகின்றன.

பாரிய போராட்டங்களைத் தொடர்ந்து முப்பது வருட போர் முடிவடைந்துள்ளது. நாட்டில் இனிமேல் பிரிவினைவாத செயற்பாடுகள் தோற்றம் பெற மாட்டாது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளுடன் தொடர்பைப் பேணி வருகின்றனர்.  தமிழ் நாட்டு அரசியல் கட்சியினர் இரகசியமாகவும், சட்ட ரீதியாகவும் இலங்கைக்கு வந்து செல்கின்றனர் – என்றார்.