அரசுடன் பேசத்தயார் ! ஜெனிவா தீர்மானம் தடையல்ல என்கிறார் சுமந்திரன்!

m.a.sumanthiran 1 800x445 1
m.a.sumanthiran 1 800x445 1

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக ராஜபக்~ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளதாக அதன் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு ஒரு தடையாக அமையாது என்றும் ரூபவ் அரசாங்கம் அனைத்து மக்களுக்குமான புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கு விரும்பினால் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்ந்து செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரபல பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள் தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் இறங்கி வருமாறு என்று வினவினயபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதற்கு அவர் அளித்துள்ள பதிலில் மேலும் தெரிவித்த விடயங்களும் 13ஆவதுதிருத்தச்சட்டம் சம்பந்தமாக எழுப்பிய வினாக்களுக்கு அளித்த பதில்களும் வருமாறு,

தற்போதைய சூழலில் ஆயுத பலம் இல்லை. ஆகவே பேச்சுவார்த்தைகள் ஊடாகவே அனைத்து விடயங்களையும் கையாள வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் இனப்பிரச்சினை தொடர்பாக நாம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தயாரகவே உள்ளோம். பேச்சுவார்த்தைகளின் ஊடாகவே அடுத்தகட்ட நகர்வுகளைச் செய்யமுடியும்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஜெனிவா தீர்மானம் ஒரு தடையாக அமையாது. தற்போதைய நிலையில் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை ஆட்சியாளர்கள் முன்னெடுத்துள்ளார்கள். அதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவிடத்தில் நாம் எமது முன்மொழிவுகளைச் செய்துள்ளோம்.

மேலதிக விடயங்கள் தேவைப்பட்டால் அவர்களுடன் தொடர்ந்தும் பேசுவதற்கு தயாராகவே உள்ளோம். ஆகவே அரசாங்கம் அனைத்து மக்களுக்குமான புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதாக இருந்தால் எம்முடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதை தவிர்ந்து செல்ல முடியாது. மேலும் அரசாங்கம் எம்முடன் பேச்சுவார்த்தைகளைச் செய்வதற்காக இறங்கி வருகின்றது என்றெல்லாம் கருத வேண்டியதில்லை என்றார்.

கேள்வி:- தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக 13ஆவது திருத்தசட்டத்தினையும் மாகாண சபை அலகுமுறைமையையும் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான சமிக்ஞையையே ஐ.நா.தீர்மானம்ரூபவ் மற்றும் பேரவையில் இந்தியா வெளிப்படுத்தியுள்ளது என்று கருதலாமா?

பதில்:– தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை முழுமையாக பூர்த்திசெய்யவில்லை என்பதனால் நாம் 13ஆவது திருத்தச்சட்டத்தினை நாம் தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அதிகாரப்பகிர்வுக்கான அடிப்படையாக 13ஆவது திருத்தச்சட்டமே காணப்படுகின்றது.

அதன்பிரகோமே மாகாண சபை முறைமை தோற்றம்பெற்றதேடு காணி, காவற்துறை அதிகரங்கள்,  வடக்கு, கிழக்கு இணைவதற்கான நிலைமைகள் என்பன ஏற்படுத்தப்பட்டன. ஆகவே 13ஆவது திருத்தம் முழுமையானதாக இல்லை என்பதற்காக அதிலுள்ள அடிப்படைகளை மறந்து முழுமையாக தூக்கி எறிவது முட்டாள்தனமான விடயமாகும்.

13ஆவது திருத்தச்சட்டத்தினையே முழுமையாக அகற்றுவதற்குரிய நகர்வுகள் உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் சூழலில் தான் அதனை முழுமையாக அமுலாக்குவதற்கான அழுத்தத்தினை இந்தியா வெளிப்படையாக வழங்குகின்றது. அதனடிப்படையில் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட்டு அதற்கு அப்பால் சென்று அதிகாரங்கள் அர்த்தமுள்ளதாக பகிரப்பட வேண்டும்.

கேள்வி:– ஒற்றையாட்சிக்குள் 13 ஐ முழுமையாக அமுலாக்கப்படுவதால் பயனில்லை என்ற நிலைப்பாடும் தமிழ் அரசியல் கட்சிகளிடத்தில் உள்ளதே?

பதில்:- சரி, அவர்களின் கூற்றுப்படி 13 தேவையில்லை என்றால் அது தற்போதைய நிலைமையில் முழுமையாக அகற்றப்படும். அவ்வாறு அகற்றப்பட்டால் அடுத்த தெரிவு என்ன?

ஆயுதரீதியான பலம் இல்லாதநிலையில் பேச்சுவார்த்தைகள் மூலமாக அரசியல் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டிய நிலையில் இருப்பதை கைவிட்டு புதிய கட்டமைப்பை உருவாக்குவது எந்தவகையில் சாத்தியமாகும். இவ்வாறு பிற்போக்குத்தனமாக சிந்திப்பதே அடைந்துள்ள இலக்குகளை இழக்கச் செய்யும் முட்டாள்த்தனமாகும் என்றும் கூறினார்