ஐநா தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கிறார்- விநாயகமூர்த்தி முரளிதரன்

vlcsnap 2021 03 28 14h04m32s424
vlcsnap 2021 03 28 14h04m32s424

ஐநா தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

செங்கலடியில் இடம்பெற்ற தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவுற்ற தருவாயில் இருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தக் காலத்தில் கூட பாரிய நெருக்கடிகள் தரப்பட்டன. ஆனால், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதனைச் சிறந்த முறையில் கையாண்டு முறியடித்துவிட்டார். ஆனால், தற்போதைய சூழ்லில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இந்தப் பிரச்சினை இரண்டு தரப்பும் இருந்து பேசித் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை. ஏனெனில் இலங்கை என்பது உண்மையில் நாணயம் மிக்க தனித்துவமான நாடு. இந்து சமுத்தரப் பிராந்தியத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகவும் இருக்கின்றது. அந்த வகையிலே இந்தத் தீர்மானம் நிறைவேற்றத்தினூடான சில தகவல்ளை அரசாங்கத்திற்கு அவர்கள் தந்திருக்கின்றார்கள்.

இது சம்மந்தமாக நாட்டின் ஜனாதிபதி மதிப்பிற்குரிய கோத்தபாய அவர்கள் சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார். குறைந்தது ஆறு மாதத்திற்குள் நிறைவேற்றும்படி இந்தத் தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது. எனவே ஜனாதிபதி சிறந்த முறையில் இந்த மாற்றங்களை உருவாக்கி மீண்டும் இந்த ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை சிறந்த முறையில் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று நான் நினைக்கின்றேன்.

எனவே அரசியல் இலாபங்களுக்காக விரோதமான கருத்துக்களை முன்வைப்பதை விட சிறந்த ஒரு அரச கட்டமைப்பு அந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. அதனூடாக சிறந்த முடிவுகள் வரும் என நினைக்கின்றேன் என்று தெரிவித்தார்.