மாகாணசபை தேர்தலை அரசாங்கம் விரைவாக நடாத்தவேண்டும் என இரா.துரைரெத்தினம் வேண்டுகோள்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 04 07T182611.513
625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 04 07T182611.513

மாகாண சபையில் நல்லாட்சி அமுல்படுத்தப்பட வேண்டுமானால் மாகாண சபைத் தேர்தல் விரைவாக அரசாங்கம் நடத்த வேண்டுமென முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் இன்று புதன்கிழமை (07) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாகாண சபை முறைமை ஐம்பது வீத விகிதாசாரம், ஐம்பது வீத விகிதாசாரத் தொகுதி முறை தேர்தல் சட்டமூலம் மூன்றில் இரண்டு பலத்துடன் வெற்றி பெற்றாலும் உருவாக்கப்பட்ட புதிய எல்லை நிர்ணயம் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இதனால் தேர்தல் நடைபெற வேண்டுமாயின் சட்டமூலம் ஓன்றை நிறைவேற்ற வேண்டும்.

இந்த நிலையில் நான்கு வருடங்கள் மாகாண சபையில் மக்கள் ஆட்சி இல்லாமலாக்கப்பட்டு ஒரு சில ஆளுநர்களின் ஒருபக்கச் சார்பான ஆட்சி முறை நடந்தேறி வருகின்றது.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மூவின மக்களும் வாழ்ந்து கொண்டு வருவதனால் ஆளுநர் அவர்களால் அனைத்து மக்களையும் திருப்திப்படுத்தக் கூடியவாறு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். ஒரு கட்சியைச் சார்ந்த செயற்திட்டங்களை முன்வைப்பதால் நல்லாட்சி நடைமுறையில் இருக்காது.

இதேவேளை ஜெனிவா தீர்மானத்தில் கூட இந்திய அரசினால் மாகாணசபை முறைமை அதிகாரப் பகிர்வு விடயத்தை சர்வதேச நாடுகளின் பார்வையின் கீழ் இலங்கை அரசிற்கு எடுத்துக் கூறிய நிலையில் இலங்கை அரசின் அமைச்சரவை தீர்மானத்தில் தொகுதி 70 வீதம், 30வீதம் விகிதாசாரம் என்னும் அடிப்படையில் புதிய தேர்தலை நடத்துவதற்கான ஆலோசனைகள் முன் வைக்கப்பட்ட வேண்டும்.

இத் தருணத்தில் ஒரு சில பௌத்த மத குருக்களினால் மாகாணசபைத் தேர்தலை நடத்தக் கூடாதென கருத்துக் கூறியது நாகரீகமான செயலல்ல. மாகாணசபை என்பது மக்கள் பிரதிநிதிகள் ஊடாகவே அமுல்படுத்துவது நல்லாட்சியைக் கொண்டதும், ஜனநாயகத்திற்கான நடைமுறையுமாகும்.

விகிதாசாரமா, தொகுதியா என்னும் விடயம் முடிவுகளை எடுக்கும் போது இன விகிதாசாரம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இன விகிதாசார முறை மாற்றப் படாமலும். வாக்களிக்கும் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படாமலும் சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்படக் கூடியவாறு தேர்தல் முறையை அமுல்படுத்த கட்சிகளுடன் பேசி விரைவாக தீர்மானங்களை எடுத்து நாடாளுமன்றத்தில் சட்ட மூலத்தைக் கொண்டு வந்து முழு இலங்கையிலும் முப்பது வருடங்களுக்கு மேலாக அமுல்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமை நான்கு வருடங்களாக ஓன்பது மாகாணங்களிலும் வாக்களிப்பதற்காக வைத்த முற்றுப் புள்ளியை இல்லாமல் செய்து குறிப்பாக, மூவின மக்கள் வாழுகின்ற மாகாணம் ஜனநாயக ரீதியாக செயற்பட வைப்பதற்கு வழி சமைக்குமாறு கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.