கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்கு எதிராக கண்டன தீர்மானம் ஒன்று வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் நிறைவேற்றம்!

image 2021 04 16 183013
image 2021 04 16 183013

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக கண்டன தீர்மானம் ஒன்று வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் அமர்வு இன்றையதினம் தவிசாளர் அ.ஜெபநேசன் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்றது.

இதன்போது, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களின் நாட்டுப் படகுகளை கட்டணம் செலுத்தி இலங்கை கடல் எல்லையில் அனுமதிப்பது தொடர்பான கருத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் கண்டன தீர்மானம், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல கட்சி உறுப்பினர்கள் இணைந்து நிறைவேற்றியுள்ளனர்.

ஆரம்பத்தில் குறித்த தீர்மானத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முரண்பாடு ஏற்பட்டதால் சபை அமர்வுகள் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் சபை கூடியபோது ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் லோ.ரமணனால் குறித்த பிரேரணை கொண்டுவரப்பட்ட போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதன்போது சபையில் அமைதியின்மை ஏற்பட்ட போதும் குறித்த கண்டனத் தீர்மானம் சபையில் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.