நிமலராஜன் படுகொலை: சந்தேகநபர்கள் விடுவிப்பு!

படுகொலை
படுகொலை

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்துள்ளது. அதனால் 6 சந்தேக நபர்களையும் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு, ஒக்டோபர் 19ஆம் திகதி இரவு 10 மணியளவில் யாழ்ப்பாணம் நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக இருந்த கச்சேரியடிப் பகுதியிலுள்ள நிமலராஜனின் வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுப் படுகொலை செய்தனர். அவர் எழுதிக்கொண்டிருந்த கட்டுரையின் மீது சரிந்து விழுந்தே உயிரிழந்தார்.  

அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின்னர்,  அவரது வீட்டுக்குள் கைக்குண்டை வீசி விட்டுச் சென்றதில், நிமலராஜனின் தந்தை, தாய், மருமகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.

நிமலராஜன் படுகொலை தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பி 423/2000 என்ற வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டது. பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காகக் கடந்த பல ஆண்டுகளாக வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது.  

இந்நிலையில், நிமலராஜன் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 பேருக்கும் எதிரான குற்றவியல் நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனச் சட்டமா அதிபர் பரிந்துரை வழங்கியுள்ளார்.  

அத்துடன், வழக்கின் சந்தேகநபர்களை விடுவித்து 14 நாள்களுக்குள் அறிக்கையிடுமாறும் காவற்துறை திணைக்களத்தின் சட்டப் பிரிவு பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் பணித்துள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியைச் (ஈ.பி.டி.பி.) சேர்ந்த நெப்போலியன் என அழைக்கப்படும் செபஸ்டியன் ரமேஷ் உள்ளிட்டவர்களே நிமலராஜன் படுகொலை வழக்கில் சந்தேகநபர்களாகக் கைதுசெய்யப்பட்டு வழக்குத்  தொடரப்பட்டது.

அதேவேளை, கடந்த 2001ஆம் ஆண்டு ஊர்காவற்துறை – நாரந்தனைப் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.

அது தொடர்பான வழக்கு விசாரணையில் நெப்போலியன் என அழைக்கப்படும் செபஸ்டியன் ரமேஷ் உள்ளிட்ட மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரட்டைத் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.  

குற்றவாளிகளாக காணப்பட்ட நெப்போலியன் மற்றும் மதன் என அழைக்கப்படும் நடராஜா மதனராஜா ஆகிய இருவரும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இருவருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.