சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை – சரவணபவன்

IMG 7306
IMG 7306

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியினை தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது தொடர்பான விசேட கொவிட் செயலணிக்கூட்டம் நேற்று(07) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன்,மாநகரசபையின் பிரதி ஆணையாளர் சிவராஜா மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள்,மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக நாடு படுமோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாநகரை அதிலிருந்து பாதுகாப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

சுகாதார நடைமுறைகளை கடுமையாக்கவும் அதனை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன் சுகாதார நடைமுறைகளைப்பேணாத வர்த்தக நிலையங்களை மூடுவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

சுகாதார பிரிவினர் முன்னெடுக்கும் தடுப்பு செயற்பாடுகளுக்கு மாநகரசபையின் முழுமையான ஆதரவினை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.