இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிக்கும்- சஞ்சய பெரேரா

thumbnail Dr Channa Perera
thumbnail Dr Channa Perera

நாட்டின் உண்மை நிலையை மறைப்பதால் செப்டெம்பர் மாதத்தில் ஐந்து இலட்சம் தொற்றாளர் இலங்கையில் அடையாளம் காணப்படலாம் எனவும், மரணங்கள் அதிகரிக்கலாம் எனவும் வொஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் உண்மைத்தன்மை அடங்கியுள்ளது. அந்த அறிக்கையை சாதாரணமாகக் கருதிவிட வேண்டாம் என மருந்துகள் மற்றும் சுகாதார நிர்வாகம் தொடர்பான வைத்திய நிபுணர் பேராசிரியர் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.

வொஷிங்டன் பல்கலைக்கழக கொரோனா உள்ளிட்ட தொற்றுநோய் ஆய்வுகள் குறித்த குழுவினர் உலகத்தில் கொரோனா வைரஸ் முதலாம் அலை உருவாகிய காலத்தில் இருந்தே கணிப்புகளை முன்வைத்து வருகின்றனர். அமெரிக்கா பாரிய அளவில் பாதிக்கப்படப்போவதாகவும் இந்தப் பல்கலைக்கழகமே முதலில் அறிவித்தது.

அவர்களின் கணிப்புகள் தவறானதாக எங்கேயும் குறிப்பிடப்பட்டு செய்திகள் வெளியிடப்பட்டதை நாம் அவதானிக்கவில்லை. அதேபோல் இவர்கள் இலங்கை குறித்து தெரிவித்துள்ள காரணிகளையும் அந்த அறிக்கையையும் நான் முழுமையாக ஆராய்ந்தேன். இந்த அறிக்கையில் உண்மையானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான காரணிகள் உள்ளன.

எனவே, இந்த ஆய்வு அறிக்கையை நிராகரிக்க வேண்டாமென அரசை வலியுறுத்துகின்றேன்.

இந்தியாவில் தற்போது பரவும் வைரஸான பி.1.617 என்ற வைரஸுக்கு மாறாக பி.1.618 என்ற புதிய வகையான வைரஸும் பரவிக்கொண்டுள்ளது. எனவே, வைரஸ் தனது தன்மைகளை மாற்றிக்கொண்டுள்ளதைத் தெளிவாக அடையாளம் காணமுடிகின்றது. இவ்வாறான நிலையில் இலங்கைக்கென்ற புதிய வைரஸ் ஒன்று உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்துள்ளார்.