நினைவுத்தூபி உடைப்பு என்பது தமிழர்கள் நிம்மதியாக இளைப்பாற முடியாது என்பதை காட்டுகிறது – சுகாஸ்

received 3906630512785280
received 3906630512785280

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு என்பது இறந்த பின்னரும் தமிழர்கள் நிம்மதியாக இளைப்பாற முடியாது என்பதனை தான் சுட்டிக்காட்டுகிறது என சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் குறித்த இடத்துக்கு இன்று காலை வருகைதந்து நிலைமைகளை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்தெரிவிக்கையில்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அமைதியான முறையில் நினைவிற்கொள்ள ஈழத்தமிழினம் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல் அரச அதிகாரத்தின் பக்கத்துணையுடன் இனப்படுகொலையின் சாட்சியாக அமைதியாக உறங்கிக்கொண்டிருப்பவர்களின் அடையாளமாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியின் பாகங்கள் அகற்றப்பட்டு தமிழ்மக்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

நேற்றையநாள் கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டு கொரோனாவை தடுக்கின்றோம் என்ற போர்வையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் காவல்துறையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் படையினரை தவிர வேறு எவரும் இந்த அநாகரிகமான செயலினை மனித குலத்திற்கு ஒவ்வாத செயலை செய்திருக்கமுடியாது.

இது சட்டத்தின் பிரகாரம் களவு,இதனை இலங்கை இராணுவத்தினர் செய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். இனப்படுகொலையாளிகள் என்ற பெயரை சூடிநின்ற இலங்கை இராணுவம் திருடர்கள் என்கின்ற பெயரை புதிதாக வாங்கியுள்ளார்கள். இந்த சம்பத்திற்கு எதிராக இலங்கை இராணுவத்தளபதி,ஜனாதிபதி , காவல்துறை மா அதிபர் ஆகியோர் பதிலளிக்கவேண்டும்.

இங்கு நடைபெற்றது ஈழத்தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் இன்னொரு அங்கம்,பல்கலையில் தூபியினை உடைத்தீர்கள் தூபி புதிதாக மலர்ந்தது வரலாறு தெரியாதவர்களுக்கும் வரலாறு பாச்சப்பட்டது.

ஒருபோதும் ஈழத்தமிழர்களின் உணர்வெளிச்சியினையோ விடுதலைஉணர்வினையோ கட்டுப்படுத்தமுடியாது மாறாக விடுதலைதீயினை வரலாறு தெரியாத சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிர்கால சந்ததிக்கும் கடத்துவதற்கும் இப்படியான விடயங்கள் வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்டுவதுடன் இவற்றுக்கு எல்லாம் முடிவு காணவேண்டுமாக இருந்தால் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.