ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டுள்ளது – சித்தார்த்தன்

IMG20210716163217 01
IMG20210716163217 01

ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டிருந்த காரணத்தினாலேயே அவை பிரிவை நோக்கி செல்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற வீரமக்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கூட்டமைப்பானது பலம் வாய்ந்த அமைப்பாக இருந்த நிலையில் தற்போது பலவீனமடைந்து வரும் நிலையை பார்க்கிறோம். அது பலவீனமடைகின்றபோது தமிழினமும் பலவீனமடைகின்றது. வடகிழக்கில் அரசுக்கு சார்பான 6 பேர் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றனர். இது ஒரு பின்னடைவை கொடுக்கக்கூடிய விடயமே. எனவே மக்கள் சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஒற்றுமையான முயற்சியை அவர்கள் ஆதரிக்க வேண்டும். கட்சிகளும் மற்றையவர்களை அரவணைப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

சில தவறுகள் காரணமாகவே கூட்டமைப்பில் இருந்து பலர் பிரிந்து சென்றனர். அவர்களை மீளவும் உள்வாங்குவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அந்த முயற்சிகளை தொடர்ந்து நாம் எடுக்கின்றோம். ஆனால் தமிழ் மக்கள் விடயத்தில் எமக்குத்தான் அதிகம் தெரியும் என்றவாறான அபிப்பிராயங்களை ஊடகங்கள் மூலமாக கூறி குழப்பங்களை தொடர்ந்து வைத்திருக்கிறோம். இது ராஜபக்ச அரசுக்கு சாதகமாக அமைந்திருக்கின்றது.

இதேவேளை 13வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்பதில் இந்திய அரசு உறுதியாக இருக்கிறது. ஆயினும் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு அதனை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் எமக்கு தெரிவிக்கின்றனர். ஒற்றுமையாக ஒரே கட்சியாக இருக்க வேண்டும் என்றில்லாமல், அடிப்படையிலே தமிழ்மக்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து சரியான நிலைப்பாட்டை நகர்த்துவதன் மூலம் தான் எமது மக்கள் தலைநிமிர்ந்து நிற்கும் நிலையை உருவாக்க முடியும்.

அதற்கு முயற்சிப்பதுடன் அதனை அடைவதன் மூலம்தான் இன்னுயிரை கொடுத்தவர்களின் ஆத்மாசாந்தியடையும். அதுவே இந்த நினைவுதினங்களை வைப்பதில் அர்த்தமுடையதாக இருக்கும் என்றார்.