கல்வி அமைச்சின் அதிகாரிகளின் தீர்மானத்திற்கு எதிராக ஜோசப் ஸ்டாலின் மனு!

z p04 Beyond 03
z p04 Beyond 03

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அரச பாடசாலைகளில், முதலாம் தரத்திற்காக 40 மாணவர்களை இணைத்துக்கொள்ள கல்வி அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்ட தீர்மானத்தை வலுவிழக்க செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாக கல்வி அமைச்சின் செயலாளர், தேசிய பாடசாலை பணிப்பாளர்கள் மற்றும் கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய தேசிய பாடசாலைகளின் முதலாம் தரத்திற்காக 35 மாணவர்கள் மாத்திரமே இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், கல்வி அமைச்சின் செயலாளரினால் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் மூலம் முதலாம் தரத்திற்காக 40 மாணவர்களை இணைத்துக்கொள்ள முடியும் என கூறப்பட்டிருந்ததாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் கல்வி சேவை சட்டத்திட்டங்களை மீறி கல்வி அமைச்சின் அதிகாரிகள் செயற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் நீதிமன்றில் முன்வைத்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.