ரிஷாட் பதியுதீனையும் சந்தேகநபராக பெயரிடவுள்ளதாக சட்டமா அதிபர் அறிவிப்பு!

1592634433 rishad 2
1592634433 rishad 2

பணிப்பெண்ணான 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை சந்தேக நபராக பெயரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமா அதிபர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணமானமை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 9 வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் ரிஷாட் பதியுதீனை சந்தேக நபராக பெயரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் தெரிவித்தார்.

இதற்கிடையில், ரிஷாத் பதியுதீனுக்கு 16 வயதில் மகள் ஒருவர் இருக்கும்போது அதே வயதையொத்த ஒரு சிறுமியை பணிக்கு அமர்த்துவது தொடர்பில் அவர் ஏன் சிந்திக்கவில்லை என்று பிரதி மன்றாடியார் நாயகம் வினவினார்.

சிறுமி மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள நால்வர் மீதும் வன்கொடுமை, சிறுமியை பணிக்கு அமர்த்தியமை, கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும், ரிஷாட் பதியுதீன் அமைச்சராக இருந்த காலத்தில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிபுரிந்த இளம் பெண் ஒருவரை ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரான ஷிஹாப்தீன் இஸ்மதீன், பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் இன்று சட்ட வைத்திய அதிகாரிகள் முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றுக்கு கொண்டு வரப்பட்டனர்.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் அடங்கிய 8 பக்க அறிக்கையை காவல்துறை அதிகாரிகள் சமர்ப்பித்தனர்.

மனுதாரர் தரப்பின் சார்பில் ஆஜரான பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் நீண்ட அறிக்கையை முன்வைத்தார்.