ஹிஷாலினி எமது வீட்டுக்கு வந்தபோது 16 வயது பூர்த்தியானவராகவே இருந்தார் – ரிஷாட்

download 5 4
download 5 4

தமது வீட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் முதல் தடவையாக இன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்ததாவது, ஹிஷாலினி எமது வீட்டுக்கு வருகைதரும்போது 16 வயது பூர்த்தியானவராகவே இருந்தார்.

அவருடன், தாய், தந்தை எவருமே வருகைதரவில்லை. எமது வீட்டில் அவருக்கு பிரத்தியேக அறையொன்று வழங்கப்பட்டிருந்தது. சம்பவ தினத்தன்று காலை 6.45 மணியளவில் ஹிஷாலினியின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு, வீட்டிலிருந்த எனது மனைவி, அவரது தந்தை மற்றும் தாய் ஆகியோர் அவரை காப்பாற்ற முயன்றதுடன், பின்னர் காலை 7.33 மணிக்கு சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தீயை அணைக்க முயற்சிப்பதற்காகவும், அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளும் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

எனினும், ஹிஷாலினி காலை 8.45 மணிக்கே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை செய்வதற்காக 7 – 10 இலட்சம் வரை செலவாகும் என வைத்தியர்கள் தெரிவித்ததாகவும், அதனை வழங்க தமது வீட்டார் தயாராக இருந்ததாகவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

எனினும், சில தரப்பினர் சிறுமியின் மரணம் தொடர்பில் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு வருவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், தாம் ஹிஷாலினியை ஒரு பணிப்பெண்ணை போன்று கருதவில்லை என்றும் தெரிவித்தார்.