பொருட்களின் விலை உயர்வால் 03 மாவட்டங்களிலும் மக்கள் அவதி-செல்வம்

Selvam
Selvam

பொருட்களின் விலை உயர்வால் மூன்று மாவட்டங்களிலும் மக்கள் அவதிப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துலகுணவர்த்தனவுக்கு வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 

இக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அத்தியாவசியப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் அல்லது கட்டுப்பாட்டு விலையில் எந்தப் பொருட்களையும் பெற முடியாத சூழ்நிலை என் தேர்தல் மாவட்டங்களான மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவில் உள்ளது.

ஏழைகளின் உணவுப் பொருட்களாகக் கருதப்படும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் விற்கப்படுகின்றன. 

இந்த விவகாரத்தை ஆராய எந்த அரச அதிகாரிகளும் முன் வருவதாக தெரியவில்லை. பொருட்களின் விலை அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்தும் கூட நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மாறுபட்டு கூடிய விலையில் பொருட்கள் யாவும் விற்கப்படுகின்றன. 

அரசு விதித்த கட்டுப்பாட்டு நிர்ணய விலை பொருந்தாததாக இங்கு காணப்படுகிறது. இதற்கு காரணம் அரச அதிகாரிகளின் அசமந்த போக்கு என்றே கூறவேண்டும். மக்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலையே இங்கு காணப்படுகிறது. 

எனவே இவ் விடயத்தினை கவனத்தில் இருத்தி இந்த மக்களின் அவதி நிலையினை போக்க உரிய நடவடிக்கை  எடுக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.