நிவாரணம் வழங்கலில் மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது!

1542176543 Vadivel Suresh 2 1
1542176543 Vadivel Suresh 2 1

பெருந்தோட்ட மக்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புக்கு எதிராக தோட்டக் கம்பனிகள் வழக்கு தொடுத்திருப்பதால் தோட்டத்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதுதொடர்பில் அரசாசங்கம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை என்ன என்பதை அறிவிக்கவேண்டும்.

அத்துடன் பாதிக்கப்பட்டிருக்கும் மலையக மக்களுக்கு அரசாங்கத்தின் 2ஆயிரம் ரூபா நிவாரணம் இல்லாமலாக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். இது பாரிய அநீதியாகும் என இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்க காரியாலயத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இன்று முழு நாடும் முடக்கப்பட்டிருக்கின்றது. அரச ஊழியர்கள் வீட்டில் இருந்தாலும் சம்பளம் கிடைக்கும். ஆனால் தோட்டத்தொழிலாளர்கள் தொழிலுக்கு சென்றால்தான் சம்பளம். தனிமைப்படுத்தல் நடவடிக்கையின் போது பெருந்தோட்ட மக்களுக்கான நிவாரணம் முற்றாக நிராகரிக்கப்படுகின்றது. மாற்றாந்தாய் செயற்பாடாகவே மலையக மக்கள் அரச உத்தியோகத்தர்களால் பார்க்கப்படுகின்றனர்.

கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையிலும் மலையகத்தில் சில பகுதிகளில் முதலாவது டோசைக்கூட இன்னும் வழங்காமல் இருக்கின்றது. ஏன் மலையக மக்களுக்கு மாத்திரம் இந்த பாகுபாடு காட்டவேண்டும். ஒரு நாடு ஒரு சட்டம் என்றால் ஏன் மலையக மக்கள் மாத்திரம் புறக்கணிக்கப்படவேண்டும்.

அரசாங்கத்தின் 2ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கல் பட்டியலில் மலையக பெருந்தோட்ட மக்கள் உள்வாங்கப்படவில்லை என கிராம சேகவர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஏன் மலையக மக்கள் மாத்திரம் நிராகரிக்கப்படவேண்டும். அத்துடன் அரசாங்கம் நிவாரண அடிப்படையில் சில பொருட்களை சதொச ஊடாக விற்பனை செய்வதாக அறிவித்திருக்கின்றது.

மலையகத்தில் சதொச நிறுவனத்தை தேடி மக்கள் எங்கே செல்வது. தோட்டத்தொழிலாளர்கள் மாத சம்பளத்துக்கு தொழில் செய்பவர்கள். அவர்கள் கடனுக்கே பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு மாத இறுதியில் அதனை கொடுத்துவிடுவார்கள். சதொசயில் கடனுக்கு வழங்குவதில்லை. அதனால் நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களையே அரசாங்கம் தெரிவிக்கவேண்டும்.

எனவே மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அதனால் அரசாங்கம் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு வழங்கும் சலுகைகளை மலையக மக்களுக்கும் வழங்கவேண்டும் என்றார்.