ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்; தமிழ் ஊடக சங்கம் கண்டனம்

EB543D52 0A82 4734 96FA 9A776597C7CA
EB543D52 0A82 4734 96FA 9A776597C7CA

ஊடகவியலாளரை அச்சுறுத்தி நீதியை நசுக்கும் செயற்பாட்டிற்கு வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயங்கள் தொடர்பாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் அனுப்பிவைத்துள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

மன்னார் கோவில்மோட்டை பகுதியில் விவசாயிகளின் காணியில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பான செய்தியினை சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளரின் வீடு இனம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதுடன், அருட்தந்தை ஒருவர் தொலைபேசி வாயிலாக அச்சுறுத்தியும் இருந்தார்.

அமைதியையும்,சமத்துவத்தையும் நிலைநாட்டவேண்டிய மதகுரு ஒருவரே வன்முறையினை தூண்டும் விதமாக
தொலைபேசி வாயிலாக அச்சுறுத்தல் விடுப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத, அநாகரிகமான செயலாகவே நோக்கமுடியும்.

தவறுகளை சுட்டிக்காட்டி உண்மைகளை வெளிக்கொண்டுவரும், ஊடகவியலாளர்கள் மீது நேரடியாகவும் , மறைமுகமாகவும் விடுக்கப்படும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். அத்துடன் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் அது நாட்டின் சட்டத்தின் ஆட்சியினை கேள்விக்குட்படுத்துவதுடன், ஜனநாயக உரிமையினையும் மறுதலித்து நிற்கின்றது.

இதுபோன்ற அநீதியான சம்பவங்களிற்கு ஊடகவியலாளர்களின் நலன் மீது அக்கறை கொண்ட அமைப்பு என்றவகையில் வவுனியாமாவட்ட தமிழ் ஊடகவியலாளர்சங்கம் தனது வன்மையான கண்டனங்களையும், அதிருப்தியையும் தெரிவித்து கொள்கின்றது.

அத்துடன் அவரை தொலைபேசியில் அச்சுறுத்திய அருட்தந்தை மற்றும் அவரது வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிற்கான தண்டனையை பெற்றுக்கொடுப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்று நாம் வலியுறுத்திநிற்கின்றோம். என்று குறித்த அறிக்கையில் உள்ளது.