பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் – துரைரெத்தினம்

WhatsApp Image 2021 07 16 at 15.22.44
WhatsApp Image 2021 07 16 at 15.22.44

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பகுதிகளிலும் நுகர்வோர் விலைகட்டுப்பாட்டை மீறிய முறையில் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்கும் அரசசார்புள்ள பிரிவுகள் என்ன செய்கின்றது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் நுகர்வோர் விலைகட்டுப்பாட்டை மீறிய முறையில் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விலை அதிகரிப்பின் காரணமாக இந்த பொருளாதார கஸ்டத்தின் மத்தியில் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலை தொடர்வதை நுகர்வோர் விலைகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஏன் பாராமுகமாக உள்ளனர்? நாளாந்த தேவைக்குரிய மீன், அரிசி, பால்மா,பருப்புவகை, சீனி, சீமேந்து, உரம், கோதுமைமா, மீன்டின், அனுமதியற்ற மதுபானங்கள், ஏன் மரக்கறி வகைகளும் கூட அதிகவிலையில் விற்பனை செய்யப்படுவதும், கொரோனா-19 தொற்றும், ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ள இவ் வேளையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும் காணாதது போல் இருப்பதும் பாராமுகமாக இருந்தால் சம்பந்தப்பட்டோரும் இதற்கு உடந்தையா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுகின்றன.

எனவே மக்களது நிலை உணர்ந்து அரச நிர்வாகத்திற்கு கட்டுப்பட்ட அமைச்சுக்களும், திணைக்களங்களும் குறிப்பாக, விலை உயர்வை கட்டுப்படுத்தும் அரசபிரிவு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது