நல்லாட்சி இறக்குமதிக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் ஏற்றுமதி வீழ்ச்சி – பந்துல

Bandula Gunawardena
Bandula Gunawardena

கொவிட்-19 பெருந்தொற்று வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் விவசாயம், கைத்தொழில், பொருள் மற்றும் சேவைத்துறை ஏற்றுமதி  ஊடாக நிறைவடைந்த ஆகஸ்ட் மாதம் வரை 7.9 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்  கிடைக்கப் பெற்றுள்ளது.

ஏற்றுமதி துறையை தொடர்ந்து அபிவிருத்தி செய்ய உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வர்த்தகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கம் இறக்குமதி துறைக்கு மாத்திரம் அதிக முக்கியத்துவம் கொடுத்தது. இதன் காரணமாக ஏற்றுமதிதுறை வீழ்ச்சியடைந்தது.

இதன் தாக்கத்தை இன்றும் எதிர்க்கொள்கிறோம். ஏற்றுமதி துறையை அபிவிருத்தி செய்யும் திட்டம் ‘சுபீட்சமான எதிர்காலம்’ கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கொவிட் தாக்கத்தினால் அதனை செயற்படுத்த முடியவில்லை.

2020 ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் தாக்கம் தீவிரமடைந்ததன் காரணத்தினால் பூகோள மட்டத்தில் அனைத்து சேவைத்துறைகளும் பாதிக்கப்பட்டன.

இதன் தாக்கத்தை நாமும் எதிர்க் கொண்டுள்ளோம். இருப்பினும் சிறந்த திட்டமிடல் ஊடாக ஏற்றுமதி சேவைத்துறையில் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்துள்ளோம்.

2020 ஆம் ஆண்டு ஏற்றுமதி சேவை ஊடாக 6.4பில்லியன் டொலர் வருவாய்கிடைக்கப் பெற்றது. இத்தொகை கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 7.9 பில்லியன் டொலர்களாக முன்னேற்றமடைந்துள்ளது. சேவைதுறையின் ஊடாக கடந்த ஆண்டு 1.6 பில்லியன் வருவாய் கிடைக்கப் பெற்றது. இவ்வருமானம். இவ்வருடம் 2.2 பில்லியனாக வளர்ச்சியடைந்துள்ளது.

 இவ்வருடத்தில் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைத்துறை ஏற்றுமதியின் ஊடாக 10 பில்லியன் டொலர்களும், சிறுஏற்றுமதி பொருட்கள் ஊடாக 283 மில்லியன் டொலரும், இறப்பர் மற்றும் இறப்பர் சார் உற்பத்தி ஏற்றுமதி ஊடாக 600 மில்லியன் டொலர்களும்,தெங்கு மற்றும் தெங்குசார் உற்பத்தி ஏற்றுமதி ஊடாக 622 மில்லியன் டொலர்களும்,தேயிலை ஏற்றுமதி ஊடாக 885 மில்லியன் டொல்களும், தைத்த ஆடை உற்பத்தி ஏற்றுமதி ஊடாக 3.4 பில்லியன் டொலர்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

டொலர் பெறுமதி அதிகரிப்பின் காரணமாகவும், அத்தியாவசிய சேவை கட்டணங்கள் உயர்வடைந்ததன் காரணமாகவும் ஏற்றுமதியாளர்கள் பெரும் சிக்கல்களை எதிர்க் கொண்டுள்ளார்கள்.

இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் சட்டத்திற்கு அமைய அரச மற்றும் தனியார்நிறுவனங்களின் 24 உறுப்பினர்களை உள்ளடக்கிய விசேட ஆலோசனை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தனியார் முயற்சியாளர்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி ஏற்றுமதி துறைமை மேம்படுத்த உரிய திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன. சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.