நியூஸிலாந்து ரக்பி அணியை தோற்கடித்தது தென்னாபிரிக்க ரக்பி அணி!

rugby1
rugby1

‘தி ரக்பி சம்பியன்ஷிப்’ தொடரின் கடைசி லீக் போட்டியின் இறுதிக்கட்டத்தில் கிடைத்த பெனால்ட்டி  உதையை சாத்தியப்படுத்திக் கொண்ட தென் ஆபிரிக்க ரக்பி அணி, நியூஸிலாந்து ரக்பி அணியை  31க்கு 29 என்ற புள்ளிகள் கணக்கில் இறுக்கமான வெற்றியை பெற்றது. 

இப்போட்டியில் நியூஸிலாந்து அணி தோல்வியடைந்தாலும், அவ்வணி 5 வெற்றிகளுடன் 25 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றதுடன், தென் ஆபிரிக்க அணி 15 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்தது.

லீக் முறையில் நடைபெற்ற ‘தி ரக்பி சம்பியன்ஷிப்’ இப்போட்டித் தொடரில் நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா,  தென் ஆபிரிக்கா, ஆர்ஜென்டீனா ஆகிய 4 அணிகள் பங்கேற்றிருந்தன.   இப்போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு தடவை எதிர்த்தாட வேண்டும். 

‘தி ரக்பி சம்பியன்ஷிப்’ தொடரின் கடைசி லீக் போட்டியில் நியூஸிலாந்து அணியை தென் ஆபிரிக்க அணி எதிர்கொண்டது. இப்போட்டி கடந்த சனிக்கிழமை இரவு அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்றது.

இப்போட்டியின் முதற்பாதியில் 20க்கு 14 என்ற புள்ளிகள் கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலையில் இருந்தது. 

எனினும், தென் ஆபிரிக்க வீரர்களான டேமியன்  டி அலன்டே  மற்றும் மாகாஸோல் எம்மாபிம்பி தமது அணிக்கு புள்ளிகளை பெற்றுக்கொடுத்து நியூஸிலாந்து அணிக்கு சவால் விடுத்தனர். 

இவ்வாறு இரு அணிகளும் மாறி மாறி தங்களது அணிகளுக்கு புள்ளிகளை ‍ பெற்றுக்கொடுத்த வண்ணமிருந்தனர்.

போட்டியின் 77 ஆவது நிமிடத்தில் நியூஸிலாந்து அணி பெனால்டி உதையை சாத்தியப்படுத்திக்கொண்டு 2 புள்ளிகளைப் பெற்று 29 க்கு 28 என்ற  புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 

எனினும், போட்டியின் கடைசி நிமிடத்தில் தென் ஆபிரிக்க அணியின் எல்டன் ஜென்டிஜெஸ் பெனால்ட் உதையை சாத்தியப்படுத்தி 3 புள்ளிகளைப் பெற்றுக்கொடுக்கவே, தென் ஆபிரிக்க அணி 31 க்கு 29 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டியது.

இதுவே இப்போட்டித் தொடரில் நியூஸிலாந்து அணி சந்தித்த ஒரே‍யொரு தோல்வியாகும். இப்போட்டித் தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய நியூஸிலாந்து 5 வெற்றி, ஒரு தோல்வியுடன்  25 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தது. 

இரண்டாவது இடத்தைப் பிடித்த அவுஸ்திரேலியா 6 ‍போட்டிகள் விளையாடி 4 வெற்றிகள், 2 தோல்விகளுடன் 18 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது. 

இப்போட்டித் தொடரில் நியூஸிலாந்து அணியை வீழ்த்திய ஒரேயொரு அணியான தென் ஆபிரிக்கா 3 ‍வெற்றி, 3 ‍ தோல்விகளுடன் 15 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 

இப்போட்டித் தொடரில் பங்கேற்ற ஆர்ஜென்டீனா சகல போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.